வெள்ளி, 6 மே, 2016

தமிழகமெங்கும் மதுக்கடை மூடும் போராட்டம்: பெண்கள், சிறுவர்கள் மீது போலீஸ் தாக்குதல் -கைதுகள்

tamil.thehindu.com/:அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயலில் நடைபெற்ற போராட்டத்தின்போது பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீஸார் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்.
மதுரவாயலில் சின்ன நொளம்பூர் சாலையில், நியாய விலை கடை அருகே
அரசு மதுபான கடை கடந்த 2 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ் சாலையில் இருந்து 250 மீட்டர் தூரத்தில் இந்த மதுக்கடை அமைந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களால் சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு அடிக்கடி தொந்தரவு ஏற்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது

இந்நிலையில், மதுக்கடையை மூடக் கோரி கடந்த 2-ம் தேதி, மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். எனினும், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் நேற்று மதுக்கடை அருகே போராட்டம் நடத்தினர்.
மதுவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால், முழக்கங்களை எழுப்பியவாறு சாலையில் அமர்ந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைதாகுமாறு போலீஸார் வலியுறுத்தினர்.
எனினும், கைக்குழந்தையோடு வந்திருந்த தாய்மார்கள், பெண்கள், கல்லூரி மாணவிகள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், கடையை மூடாமல் இங்கிருந்து செல்லமுடியாது என திட்டவட்டமாக கூறினர். ஒருவரையொருவர் கைகளை பிணைந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்றனர். 60-க்கும் மேற்பட்ட போலீஸார் அவர்களை லத்தியால் தாக்கி கைது செய்து வாகனத்தில் திணித்தனர்.
இதில், ஒரு சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். மூதாட்டி ஒருவரின் நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர் களில் ஒரு பகுதியினர், சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் அவர்களை போலீஸார் கலைத்தனர்.
இந்த சம்பவத்தில் 30-க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். சிறுவன் உள்ளிட்ட 3 பேர் தனியார் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். மற்றவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப போலீஸார் மறுத்ததால், போராட்டக்காரர்கள் மதிய உணவை தவிர்த்தனர்.
மதுரை ஒத்தக்கடை, தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி அருகே அன்பில், கோவில்பட்டி, கம்பம், கடலூர் மாவட்டம் தீர்த்தகிரி, ஆணைவாரி, விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம், அயனம்பாளையம், தர்மபுரி, ஓசூர், கந்திலி உட்பட தமிழகம் முழுவதும் 19 இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
சமாதானம் செய்யவில்லை
அன்பில் தவிர மற்ற இடங் களில் நூற்றுக்கணக்கான போராட்டக் காரர்களை போலீஸார் கடுமையாக தாக்கி கைது செய்துள்ளதாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் குற்றம்சாட்டி னர். இதுகுறித்து, அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜி கூறியதாவது:
நெடுஞ்சாலைகள் அருகேயும், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகேயும் உள்ள மதுபானக் கடைகளை அகற்றக் கோரி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பொதுமக்களும், மக்கள் அதிகாரம் அமைப்பினரும் கடந்த 2-ம் தேதி மனு அளித்தனர். ஆனால், எந்த பலனும் இல்லாததால் மக்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
போராட்டக்காரர்களை சமாதானப் படுத்தி கைது செய்வதற்கு பதில், போலீஸார் அவர்களை கடுமையாக தாக்கி கைது செய்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை தலைமுடிகளை இழுத்தும், ஆடை களை கலைத்தும் கடுமையாக போலீஸார் தாக்கியுள்ளனர் என்று அவர் கூறினார்.
தலைவர்கள் கண்டனம்
மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கேடயமாக பயன்படுத்தப்படுகின்றனரா?
தமிழகம் முழுவதும் நேற்று மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்திய மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். அவர்களில் பலர் தங்கள் கைக் குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸார் மற்றும் பொதுமக்கள் இடையே மோதல் போக்கை ஏற்படுத்த மக்கள் அதிகாரம் அமைப்பு திட்டமிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைமைக்குழு உறுப்பினரான காளியப்பன் தெரிவித்ததாவது: அரசு மதுபானக் கடைகளால் பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மதுவுக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் குடும்பத்தோடு பங்கேற்பது தவிர்க்க முடியாதது.
இந்த போராட்டங்களில் மோதலை ஏற்படுத்துவதற்காக இளம் தாய்மார்களை கேடயமாக பயன்படுத்துகிறோம் என்பது தவறான கருத்து. போராட்டங்களில் பங்கேற்கும் பெண்கள் தங்கள் குழந்தைகளை வீட்டில் விட்டு வரமுடியாத அளவுக்கு நம் சமூகம் சுருங்கி விட்டது. அதனால், பெண்கள் தங்கள் குழந்தைகளோடு போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக