திங்கள், 2 மே, 2016

BBC:உத்தராகண்ட் காட்டுதீ...சுமார் 1,900 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி தீயில் அழிந்துவிட்டது

இந்தியாவின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள,உத்தராகண்ட் மாநிலத்தில் மூண்ட பெரும் காட்டுத் தீயை அணைக்க பல்லாயிரக்கணக்கானோர் போராடி வருகின்றனர்.குறைந்தது ஆறு பேர் இந்த தீயில் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,900 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி இந்தத் தீயில் அழிந்துவிட்டது என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
சுமார் ஒரு மாதத்துக்கு முன் இந்தத் தீ மூண்டது. ஆனால் சமீப நாட்களில் இந்தத் தீ உக்கிரமடைந்து 400க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீ பரவி தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது.
இது வரை இமயமலைப் பகுதியில் உள்ள சுற்றுலா நகரங்களுக்கு இந்தத் தீ பரவவில்லை ஆனால் தீயால் ஏற்பட்ட புகை , அப்பகுதியில் காற்றின் தரத்தையும், தெளிவாக பார்க்கும் தன்மையையும் பாதித்துள்ளதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.


இந்த ஆண்டு இது போன்ற தீ சம்பவங்கள் பரவலாக ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். மழை குறைவாக பெய்துள்ளதால் வனப்பகுதிகள் அசாதாரணமான அளவுக்கு காய்ந்து கிடப்பதே இதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தத் தீவிபத்து கடந்த 2012ம் ஆண்டு ஏற்பட்ட மிக மோசமான தீ சம்பவத்துடன் ஒப்பிடக்கூடியது என்று இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் கூறினார்.
இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர்கள் இந்த தீக் கொழுந்துகளை அணைக்க பயன்படுத்தப்பட்டன. எனினும், புகை மூட்டம் காரணமாக தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், ஹெலிகாப்டர்களை இந்த வேலையில் ஈடுபடுத்துவது மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்தான் இருந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறின.
ஆனால், செய்கோள் படங்கள் , சுமார் 70 சதவீத நெருப்பு அணைக்கப்பட்டதாகக் காட்டுவதாக தேசிய பேரிடர் நிவாரணப் படை கூறுகிறது. இந்த அமைப்பு தீயணைப்பு வேலையை ஒருங்கிணைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக