வியாழன், 19 மே, 2016

இலங்கையில் கடும் மழை: நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி...150 பேரை காணவில்லை !

கொழும்பு: வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் காரணமாக இலங்கையில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 150 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. இலங்கையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, 19 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 68 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. sri Lanka landslides killed 40 people தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக கெகல்லே மாவட்டத்தில் வெள்ளத்தோடு சேர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 
தலைநகர் கொழும்பில் பெய்து வரும் மழைக்கு அங்குள்ள அணைகள் நிரம்பியுள்ளன. இதையடுத்து அணைகள் திறக்கப்பட்டதால் மழை நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தன. இதனால் சுமார் 10 ஆயிரம் பேர் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மரங்கள் சரிந்து ஆங்காங்கே விழுந்திருப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
 2 லட்சத்து 7 ஆயிரத்து 556 பேர் வீடுகளை இழந்து தவிப்பதாக பேரிடர் நிர்வாகத் துறை செய்தித் தொடர்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரநாயக பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டுவந்து அருகாமையில் உள்ள கிராமங்களின் மீது விழுந்தன. 
இதில் மூன்று கிராமங்களில் உள்ள பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்து விட்டன. இங்கு வசித்துவந்த ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்திருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், தற்போது 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 எலகிபிட்யா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மாயமாகியுள்ளனர். அவர்கள் கதி என்ன ஆனது என தெரியவில்லை மேலும், ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு படையினரும் ராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more at:  tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக