ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

TN காங்கிரஸ் கோஷ்டிகள் தொகுதி பிடி....ஆட்டம் ஆரம்பம்

காங். மியூசிக்கல் சேர்....இந்த தடவை எந்த பிரச்னையும் இருக்கற மாதிரி தெரியலியே' என, காங்கிரசாரை பற்றி பெருமையாக, பொதுமக்கள் கூட பேசிக் கொள்கின்றனர்.
அறிவாலயத்தில் கூட்டணி பேசியதிலும், எதிர்பாராத அளவுக்கு, 41 தொகுதிகள் பெற்றதிலும் சிக்கலுக்கோ, இழுபறிக்கோ இடம் கொடுக்காமல், தமிழக காங்கிரசார் நடந்து கொண்ட விதம் ஆச்சரியம். அது நீடிக்க வேண்டும் என்று, ஒவ்வொரு காங்கிரசாரும், இப்போது வேண்டாத தெய்வம் இல்லை. காரணம், இதுவரை சிக்கல் இல்லாமல் சென்ற காங்கிரஸ் வண்டிக்குள், இனிமேல் தான், 'மியூசிக்கல் சேர்' நடக்க போகிறது. தி.மு.க., கொடுத்த, 41 தொகுதிகளில், 40 தொகுதிகளில், அ.தி.மு.க.,வுடன் நேரடியாக, காங்கிரஸ் மோதப் போகிறது.
ஒரு தொகுதியான காங்கேயத்தில், இரட்டை இலையில் நிற்கும் கொங்கு இளைஞர் பேரவையுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கேற்ப, வலுவான ஆட்களை தேர்வு செய்து நிறுத்துங்கள் என, தி.மு.க.,வும் யோசனை சொல்லியிருக்கிறது; காங்., மேலிடமும் உத்தரவு போட்டிருக்கிறது.காங்கிரசில், ஒருநபர் கோஷ்டிகளை தவிர்த்து, இளங்கோவன், சிதம்பரம், தங்கபாலு என, முப்பெரும் கோஷ்டிகள் பிரசித்தம். மூன்று தரப்பும், தங்களுக்கான விருப்பப்பட்டியலை அளித்து, மேலிட பரிசீலனைக்கு பின் தான், தி.மு.க.,விடம், 41 தொகுதிகள் கேட்டு பெறப்பட்டுள்ளன. அதுவரையில்,
இந்த மூன்று தரப்பில், இரண்டு தரப்பு, அதாவது சிதம்பரமும், தங்கபாலுவும் ஒத்த கருத்து கொண்டிருந்தனர். 'சீட்' கைக்கு வந்ததும், தங்கபாலு கணக்கு மாறுவதாகவும், சிதம்பரம் தரப்புக்கு, பி.பி., எகிறுவதாகவும் தகவல். ஆதரவு பலத்தின் அடிப்படையில், இளங்கோவன் கோஷ்டிக்கு, 15; சிதம்பரத்துக்கு, 8; தங்கபாலுக்கு, 6 என, மூன்று கோஷ்டிகளும், தொகுதிகள் பட்டியல் கொடுத்திருந்தன. இதுதவிர்த்து, திருநாவுக்கரசு, கிருஷ்ணசாமி, வசந்தகுமார் என, ஒரு நபர் கோஷ்டிகளுக்கு, தலா ஒன்று என பிரிக்கப்பட்டு உள்ளது.

இவை போக, 41ல் மீதமுள்ள தொகுதிகள், இளைஞர் காங்கிரஸ் ஒதுக்கீட்டுக்கு போக வேண்டும் என, டில்லி தெளிவாக சொல்லி அனுப்பி உள்ளது. இதில், எந்த தொகுதி, எந்த கோஷ்டிக்கு என்பதில் தான் சண்டையே. 'ஒரு பானை; ஒரு சோறு' கதையாக, சிதம்பரம் கேட்ட, மயிலாப்பூர், காட்டுமன்னார்கோவில் தொகுதிகளுக்கு மல்லுக்கட்டே நடக்கிறதாம்.
தென்சென்னை மாவட்ட செயலர் கராத்தே தியாகராஜனுக்காக, மயிலாப்பூரை கேட்கிறார் சிதம்பரம்; தங்கபாலு விடுவதாக இல்லை. தானோ அல்லது தன் மனைவியோ போட்டியிட, மயிலாப்பூர் தொகுதி வேண்டும் என்கிறார். இவர்களுக்கு இடையில், இளங்கோவனோ, குஷ்புவுக்காக கொடி பிடிக்கிறார்.
இதே போட்டி, காட்டுமன்னார்கோவிலுக்கும் உண்டு. சிதம்பரம், தன் ஆதரவாளர் வள்ளல் பெருமானுக்காக கேட்கிறார்; இளங்கோவனோ, தன் ஆதரவாளர் மணிரத்தினத்தை நிறுத்த விரும்புகிறார்.இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் மும்முனை போட்டி நிலவுவதால்,முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்தை இங்கே நடத்தினால், வெட்டுக் குத்து நிச்சயம் என்பதால், பட்டியலுடன் இளங்கோவன் டில்லி பறந்து விட்டதாக தகவல்.அவரை தொடர்ந்து, சிதம்பரமும், தங்கபாலுவும் டில்லி விமானத்திற்கு டிக்கெட் எடுத்துள்ளனர். அதற்கு முன்பாக, இளங்கோவன் தலைமையிலான, காங்கிரஸ் தேர்தல் பணிக் குழுவில் இடம் பெற்றுள்ள திருநாவுக்கரசர், ஓசூர் கோபிநாத், கிருஷ்ணசாமி, யசோதா, தனுஷ்கோடி ஆதித்தன், ஏ.பி.சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்களும், டில்லிக்கு படையெடுத்துள்ளனர்.குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் முன்னிலையில், இன்றும், நாளையும் பஞ்சாயத்து நடக்கப் போகிறதாம். அதில், உடன்பாடு எட்டப்படாவிட்டால், ராகுல் தலைமையில், அடுத்த பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்யப்படுமாம். அதிலும் இழுபறி என்றால், இறுதி முடிவு, சோனியா கையில் என்கிறது, காங்கிரஸ் வட்டாரம்.

'தட்டுங்கள்; திறக்கப்படாது!'

இன்றைய டில்லி பஞ்சாயத்தில் நியாயமான தீர்ப்பு கிடைக்காது என்கிறது, சிதம்பரம் தரப்பு. ஆசாத், தங்கபாலுக்கு வேண்டியவர்; முகுல் வாஸ்னிக், இளங்கோவனுக்கு நெருக்கமானவர். காங்., கோஷ்டிகளுக்கு இடையே, இருவரும் உள்கூட்டணி ஏற்படுத்தி உள்ளதால், நியாயம் கேட்டு, சிதம்பரம் தரப்பு, சோனியா வீட்டு கதவை தட்டப் போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், திறக்கப்படாது என்கிறது, இளங்கோவன் வட்டாரம். இந்த இழுபறியெல்லாம் முடிந்து, பட்டியல் வருவதற்கு, 15ம் தேதிக்கு மேல் ஆகும் என்கின்றனர் காங்கிரசார்.
- நமது நிருபர் -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக