ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

JNU கன்னைஹயா குமாரை விமானத்தில் கழுத்தை நெரித்துக் கொல்ல பாஜக பிரமுகர் முயற்சி- சந்தேக நபர் கைது

மும்பை: நடுவானில் மும்பை விமானத்தில் தன்னை பாஜக ஆதரவாளர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்ல முயற்சித்ததாக, டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார் பரபரப்பு குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்யா குமார். இவர் மீது தீவிரவாதி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியதாக தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட கன்யாகுமாருக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். கன்யாகுமாருக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்தன. இந்நிலையில், கன்யாகுமாருக்கு எதிரான வீடியோ சாட்சி போலீயானது எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்நிலையில், புனே நகரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் மும்பை வந்திறங்கினார் கன்யா குமார். தன்னுடைய இந்த விமானப் பயணத்தின் போது, சக பயணியான பாஜக ஆதரவாளர் ஒருவர் தன்னைக் கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சித்ததாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். 
இந்தப் பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இது தொடர்பாக விமான நிலையப் போலீசாரிடமும் அவர் புகார் அளித்துள்ளார். 
இதையடுத்து, கன்னையா குமார் குற்றம்சாட்டிய நபரை மும்பை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
தீவிர பாஜக தொண்டரான அவர் டிசிஎஸ் நிறுவன ஊழியர் எனக் கூறப்படுகிறது. இந்த கொலை முயற்சியின் போது தன்னைக் காப்பாற்ற சக பயணிகளோ, விமான பணியாளர்களோ யாரும் முன்வரவில்லை என்றும் கன்னையா குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
என்ன காரணத்திற்காக கன்யாகுமார் மீது அவர் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே கன்யாகுமார் மீது வழக்கு விசாரணையின் போது தாக்குதலும், கடந்த மாதம் ஹைதராபாத் வந்திருந்த போது ஷூ வீசித் தாக்குதலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more at://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக