சனி, 23 ஏப்ரல், 2016

தமிழிசை : வைகோ சமூகநீதியை முதலில் தனது கட்சியில் கடைப்பிடிக்கட்டும்... ஜோசியர் சொல்கேட்டு பச்சை தலைப்பாகை?

விகடன்.com :நெல்லை:வைகோ திடீரென தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பரபரப்பு தகவலை வெளியிட்டார். நெல்லையில் பா.ஜ.க தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த அவர்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா உருவெடுத்து வருகிறது. எங்களது கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் பெருகி வருகிறது. நாங்கள் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் இருக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இது எங்களை எதிர்ப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.


அதனால்தான் எங்களை சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்று இளங்கோவன் குற்றம் சாட்டுகிறார். காங்கிரஸ் கட்சி இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்வில் சிறுபான்மையினருக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என அவர்களது கட்சியினரே குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அதனை எல்லாம் மறைக்கும் வகையில் எது எதையோ இளங்கோவன் பேசி வருகிறார். முதலில் அவர்கள் தங்கள் கட்சிக்குள் சமூக நீதியை கடைபிடிக்கட்டும். எங்களது கட்சியைப் பற்றி பேச காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த உரிமையும் கிடையாது.

அ.தி.மு.க.வும் இன்னமும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. ஜெயலலிதாவின் பிரசாரம் அபாயகரமான சூழ்நிலையை எட்டியுள்ளது. அவர் செல்லும் இடங்களில் எல்லாம் தொடர்ந்து உயிர்ப்பலி நடந்து வருகிறது. மக்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்கப்படுவதில்லை. ஆளும்கட்சியை எதிர்த்துப் பேச பிற கட்சிகளே இருக்கக்கூடாது என்று இறுமாப்புடன் அ.தி.மு.க நினைக்கிறது. ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறாது. அ.தி.மு.க ஆட்சியில் மணல் கொள்ளை, விவசாயிகளுக்கு பாதிப்பு என பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. ஆனால், அவை அனைத்திலும் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் செயலற்ற அரசாக 5 வருடங்கள் இருந்தது.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஒரு விதமாகவும், மற்ற கட்சிகளுக்கு ஒரு விதமாகவும் செய்படுகிறது. ஆளும் கட்சி சார்பில் வாக்குகளைப் பெற டாஸ்மாக் மற்றும் துணிக்கடைகளுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது.

மக்கள் நலக்கூட்டணியில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. ம.தி.மு.க பொதுச் செயலாளரான வைகோ தலையில் பச்சை துண்டு கட்டியிருப்பது விவசாயிகளுக்கு ஆதரவாகவா? ஜோசியர் சொல்லி கட்டியிருக்கிறாரா? என்பதை தெரியப்படுத்த வேண்டும். திராவிடக் கட்சிகளின் பரிணாமம்தான் இது போன்ற கலர்க்கலரான துண்டுகளில் ஏற்படும். கருணாநிதி கூட மஞ்சள் துண்டு போட்டு இருக்கிறார். இப்போது வைகோ பச்சை துண்டு அணிகிறார். இதற்கு என்ன காரணம் என்பதை மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும்'' என்றார்.

-ஆண்டனிராஜ்
படம்: எல்.ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக