புதன், 27 ஏப்ரல், 2016

உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. நத்தம் விஸ்வநாதன் மீதான ஊழல் புகார்: விசாரணை நடத்த சென்னை ....

 madras high court asks action aganist natham viswanathanசென்னை: சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது தொடர்பான தமிழக மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீதான புகார் குறித்து, ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், தமிழக மின்துறை அமைச்சரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரிகளும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ. 5.01 என்ற விலையில் வாங்கும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் யூனிட்டுக்கு ரூ. 7.01 தருவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இது சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக அமையும்.
அதிக விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்ததன் காரணமாக, அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 525 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றிருப்பதாகவும் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரத்துக்கு மார்ச் மாதம் அனுப்பப்பட்ட புகார் குறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு மற்றும் தடுப்பு இயக்குநரம் ஸ்ரீனிவாஸின் புகார் குறித்து விசாரணை செய்து ஜூன் இரண்டாவது வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.  /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக