வியாழன், 21 ஏப்ரல், 2016

பழங்குடி மக்களை கொல்வதற்கு அரசுக்கு லைசென்ஸ் கொடுத்தது யார்? வேதாந்தா நிறுவனம்?


vikatan.com நீங்கள் அரசுடன் தொடர்ந்து முரண்படும்போது, உங்களை கைது செய்வதற்கு அதிக காரணம் தேவைப்படுவதில்லை. ஏன் காரணமே கூட தேவையில்லை. ஏதாவது ஒரு வழக்கு உங்கள் மீது புனையப்படும். அதுவும் நீங்கள் பொது சமூகத்திற்கு அதிகம் தெரியாத பழங்குடியாக இருந்தால், எந்த வழக்கும்  இல்லாமல் உங்களை சிறையில் வைக்க முடியும், ஏன் ஒரு நாள் காயம்பட்ட உங்கள் சவம் சாலையோரத்தில் கண்டு எடுக்கவும்படலாம். இது நாள் வரை பழங்குடிகளுக்கு எதிராக நீண்ட அரசுகளின் தாக்குதல், இப்போது அவர்களுக்காக பேசும், எழுதும் ஊடகவியலாளர்கள் மீதும் நீண்டிருக்கிறது. பழங்குடிகளுக்கு சார்பாக எழுதினால்,  மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்யும் போக்கு மத்திய இந்தியாவில் குறிப்பாக சத்தீஸ்கரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை அம்னிஸ்டி இண்டர்நேஷனலின்  ( Amnesty International) விசாரணை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.


அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை?

 
ஊடகவியலாளர் மாலினி சுப்பிரமணியன், scroll.in இணையதளத்தில் பணிபுரிகிறார். அரசு மற்றும் பாதுகாப்பு படையினரால், ஆதிவாசிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறையை தொடர்ந்து எழுதுகிறார். சத்தீஸ்கரின் அரசால் நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறலை பொது சமூகத்திடம் கொண்டு சேர்க்கிறார். 'சமஜீக் எக்தா மன்ச்' என்னும் இயக்கத்தை சேர்ந்தவர், அவரை மிரட்டுகிறார்கள். எழுதுவதை உடனே நிறுத்தும்படி சொல்கிறார்கள். நிறுத்தவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கிறார்கள். ஆனால், மாலினி நிறுத்தவில்லை. அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து எழுதுகிறார்.

ஒரு நாள் இரவு கல் எரிந்து அவர் வீட்டு கண்ணாடி மற்றும் கார் கண்ணாடி நொறுக்கப்படுகிறது.  இது தொடர்பாக, அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். முதலில் வழக்கு பதிய மறுத்த காவல் துறை, சில நாட்களுக்கு பின், “அடையாளம் தெரியாத நபர்கள் ஐம்பது ரூபாய் சேதம் விளைவித்துவிட்டார்கள் “ என்று வழக்கு பதிகிறது. அதுமட்டுமல்லாமல், அவர் தங்கி இருந்த வீட்டு உரிமையளர் மூலமாக, அவரை மாவட்டத்தை விட்டு வெளியே செல்ல வைக்க அழுத்தம் தருகிறது. அவரது பாதுகாப்பு கருதி scroll.in இணையதளமும் அவரை வெளியேற சொல்கிறது. கனத்த இதயத்துடன் வெளியேறுகிறார்.

"இது தனி மனிதன் மீதான தாக்குதல் இல்லை, கள நிலவரத்தை, அரசுக்கு பிடிக்காத உண்மையை எழுதும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்” என்கிறார் மாலினி.
இவர் நிலையாவது பரவாயில்லை என்பது போல் உள்ளது சந்தோஷ் யாதவ் மீதான தாகுதல். சந்தோஷ், அவர் பள்ளி காலத்தில் காவல் துறை அதிகாரியாக விரும்பியவர். ஆனால், காலம் அவரை பத்திரிக்கையாளராக மாற்றியது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பத்ரிமாஹு என்னும் கிராமத்தில் ஐந்து ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் என்று பாதுகாப்பு படை கைது செய்கிறது. பத்ரிமாஹூ கிராமத்தினர்,  கைது செய்யப்பட்டவர்கள் மாவோயிஸ்ட்கள் இல்லை என்கிறார்கள். சந்தோஷ் கைது செய்யப்பட்டவர்களுக்காக எழுதுகிறார். அது மட்டுமல்லாமல்,  அவர்களுக்காக சட்ட உதவியையும் செய்கிறார். தொடர்ந்து, ஆதிவாசிகளுக்கு எதிரான அரசின் அடக்குமுறையை எழுதுகிறார். சில நாட்களில் சந்தோஷ் கைது செய்யப்படுகிறார். மோசமான வழக்குகள் புனையப்படுகிறது. இப்போது அவர் மனைவி பூனம் யாதவ், நீதிமன்றத்திற்கும் சிறைசாலைக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக, சந்தோஷின் வழக்கறிஞர் இஷா கந்தல்வால், “ஆதிவாசிகளுக்கு ஆதரவாக ஒருவர் எழுதும் போது, அவர் தாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. சந்தோஷ் 2013 ம் ஆண்டு முதல் அரசின் அடக்குமுறையை சந்தித்து வருகிறார். ஒருமுறை அவரை அம்மணமாக வைத்தும் காவல்துறை அடித்துள்ளது” என்கிறார்.

உண்மை தினமும் மரணிக்கிறது :

'ஏசு ஒரு  முறைதான் உயிர்த்தெழுந்தார்; ஆனால் ஏரோது மன்னன் தினம் தினம் உயிர்த்தெழுகிறான்' என்பதாக ஒரு கவிதை இருக்கிறது. அது போல்தான் அதிக வளங்கள் இருக்கும் மத்திய இந்தியாவில் நிலையும். சோமாரு நாக், ஒரு ஆதிவாசி பத்திரிக்கையாளர். ஆதிவாசி ஒருவர் பத்திரிக்கையாளர் ஆவது எனபது அரிதினும் அரிதாக நடப்பது. 'பத்திரிக்கா' என்னும் தினசரியில், கிராமப்புற விஷயங்களை தொடர்ந்து எழுதுகிறார், கூடவே ஆதிவாசிகள் மீது போடப்படும் பொய்யான வழக்குகள் குறித்தும். இந்த காரணம் அவரை கைது செய்ய பாதுகாப்பு படைக்கு போதுமானதாக இருந்தது. கிராம பஞ்சாயத்து அவருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுகிறது. அவர் அப்பாவி என்றது. ஆனால் எதுவும் செவிடாகி போன அரசுக்கு கேட்கவில்லை.

பத்திரிக்கையாளர்  ராஜ்குமார் சோனி, “நீங்கள் பாஸ்தரில் பத்திரிக்கையாளராக இருந்தால், கண்டிப்பாக வாழ்வில் ஒரு முறையேனும் மாவோயிஸ்ட்களிடம் பேச நேரிடும், அவர்களை பேட்டி காண நேரிடும். இது மும்பையில் உள்ள பத்திரிக்கையாளர், தொழிலதிபரை பேட்டி காண்பது போல் இயல்பானது. நாங்கள் இரு பக்கத்தின் நியாயத்தையும் எழுதுகிறோம். நாட்டில் ஏதேனும் சட்டம் இருக்கிறதா, நாங்கள் ஒரு சார்பாக தான் எழுத வேண்டும் என்று ?” என்கிறார்.

ஆனால், அரசு இதைதான் விரும்புகிறது. நீங்கள் ஒரு சார்பாக இருக்க வேண்டும் என்கிறது. நீங்கள் தவறும் போது, உங்கள் மீது வன்முறையை ஏவுகிறது.

'பத்திரிக்கா' தினசரியின் ஆசிரியர் ஜினேஷ் ஜெயின்,  “பாஸ்தர் மாவட்டத்தில் உண்மை தினமும் செத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒன்று அரசும் காவல்துறையும் சொல்வதை எழுத வேண்டும் அல்லது அவர்களுக்கு பிடித்ததை எழுத வேண்டும். இல்லையென்றால், நீங்கள் அடக்குமுறைக்கு எப்போது வேண்டுமானாலும் உள்ளாவீர்கள்” என்கிறார்.

இது பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல. ஆதிவாசிகள் சார்பாக யார் பேசினாலும் அவர்களை மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி அவர்களை அரசு கைது செய்கிறது. அண்மையில் நடந்த சோனி சோரி மீதான தாக்குதல், மருத்துவர் பிநாயக் செனின் கைது என ஆதிவாசிகளின் பிரச்னையை யார் பொது சமூகத்திடம் கொண்டு சென்றாலும், அவர்களை கைது செய்வதும், குண்டர்களை விட்டு அவர்களை தாக்குவதும் தொடர்ந்து நடத்து வருகிறது.
குறிப்பாக சத்தீஸ்கரில், 6, 070 பேர் கொள்ளவு கொண்ட சிறைகளில் மொத்தம் 15, 840 பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதிவாசிகள்.

அம்னிஸ்டி இண்டர்நேஷனல்,  முக்கியமாக இரண்டு பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுக்கு  முன்வைக்கிறது. 'புனையப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள், செயற்பாட்டாளர்களை விடுதலை செய்யுங்கள். மனித உரிமை மீறல்கள் குறித்து உரிய விசாரணை நடத்துங்கள்.'

நாம் ஏன் மத்திய இந்தியாவின் பிரச்னையை தெரிந்து கொள்ள வேண்டும் ?:
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்

இது எங்கோ நடக்கும் பிரச்னைதானே என்று நாம் ஒதுங்கி செல்லல் ஆகாது. ஆம். இங்கு கைது செய்யப்பட்ட ஆதிவாசிகள் அனைவரும் இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராக இருந்தவர்கள். நாம் எக்காலமும் ஆயுத போராட்டத்தையோ அல்லது மாவோயிஸ்ட்களையோ ஆதரிக்க முடியாது. ஆயுத பாதை என்பது அழிவின் பாதை. ஆனால், அதே நேரம் அப்பாவி ஆதிவாசிகளை மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தி கைது செய்வது என்பது மிக மோசமான உதாரணம். இது அந்த அப்பாவி மக்கள்,  அரசின் மீது நம்பிக்கை இழக்கவே வழி வகை செய்யும். மிக மோசமான சூழலை ஏற்படுத்தும். அரசு மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும், அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்த வேண்டும். இதை செய்யாமல், மேலும் மேலும் அவர்களை சுரண்டுவது, அந்த மக்களை அந்நியப்படுத்தும் செயல்.

சரி,  இதை நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? இதை நாம் தமிழக சூழலுக்கு பொருத்தி பார்த்துக் கொள்ள முடியும். கூடங்குளத்தில் என்ன நிகழ்ந்தது. அந்த மக்களின் நியாயமான அச்சத்தை போக்க இந்த அரசு என்ன செய்தது ? வெறும் வன்முறையை மட்டும்தானே பதிலாக தந்தது.

இதையெல்லாம் தாண்டி, மக்கள் ஒன்றுபட்டுவிடக் கூடாது என்று அரசு நினைக்கிறது. அந்தந்த பகுதி மக்களின் போராட்டத்தை, அந்த பகுதியில் சுருக்கிவிட வேண்டும் என்று அனைத்து அரசுகளும் விரும்புகிறது. 2010 -ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மத்திய இந்தியாவில் ஆதிவாசிகள் மீது ஏவப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக  சேலத்தின் பியூஷ்,  சேலத்திலிருந்து - சிவகங்கை வரை சைக்கிள் பயணம் போக திட்டமிடுகிறார். இதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு போட்டது அரசு. 2008 ம் ஆண்டு நந்திகிராம் மக்கள் மீதான வன்முறைக்கு எதிராக துண்டறிக்கை விநியோகம் செய்கிறார். அதற்காக அவர் மீது கொலை முயற்சி வழக்கு போடப்பட்டது.

பியூஷ் சொல்கிறார், “நாங்கள் உள்ளூர் பிரச்னைகளுக்காக பல வீரியமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். ஆனால், அப்போதெல்லாம் அரசு எங்கள் மீது வழக்குப்போட்டதில்லை. ஆனால், இன்னொரு மாநிலத்தில் பாதிக்கப்படும் மக்களின் பிரச்னைக்காக நாங்கள் குரல் கொடுக்கும்போது, எங்கள் மீது மிக மோசமான வன்முறையை ஏவுகிறது. அதாவது, மக்கள் அனைவரும் ஒன்றுப்பட்டுவிடாமல் இருப்பதில் அரசுகள் மிகத்தெளிவாக இருக்கிறது”

ஆம். மக்கள் எப்போதும் ஒன்று சேருவதை அரசுகள் விரும்புவதில்லை. நாளை நமக்கொரு பிரச்னை வரும் போது, நம் நிலங்கள் நிறுவனங்களால் களவாடப்படும் போது, அது நம் பிரச்னையாக சுருங்கிவிடாமல் இருக்க வேண்டுமென்றால், நாம் அண்டை மாநிலத்தின் பிரச்னையையும் தெரிந்து கொள்ள வெண்டும்.

- மு. நியாஸ் அகமது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக