செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நேற்று அண்ணாயிசம் ! இன்று அண்ணியிசம் !! நேற்று சிவகாசி ஜெயலக்ஷ்மி இன்று பிரேமலதா!

ஊழல் எதிர்ப்பு உறுதிமொழிஎத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்தவிதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத பிழைப்புவாதிகளின் கூடாரம்தான் பிரேமலதா இயக்கும் விஜயகாந்தின் தே.மு.தி.க.ஏட்டு முதல் எஸ்.பி. வரை போலீசு என்ற நிறுவனம்
முழுவதையும் அம்பலப்படுத்தியவர் சிவகாசி ஜெயலட்சுமி என்ற பெண். அவரைப் போல பா.ஜ.க. முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான அனைவரையும் முன் எப்போதும் இல்லாத அளவில் அம்பலப்படுத்தியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். விஜயகாந்த் : கழிசடை அரசியல் நாயகன் உத்தமபுத்திரர்கள் போலவும் ஊழலின் நிழல் கூடப் படியாதவர்கள் போலவும் மக்கள் நலக் கூட்டணியினர் பம்மாத்து செய்து கொண்டிருந்தனர். திராவிட இயக்கத்துக்கு மாற்று என்று கூறி, அவர்களை உசுப்பேற்றிவிட்டுக் கொண்டிருந்தன ஊடகங்கள். விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து, வாயெல்லாம் பல்லாக தே.மு.தி.க. அலுவலகத்திலிருந்து பஞ்ச பாண்டவர்கள் பேட்டி அளித்த அந்த நிமிடத்திலிருந்து நகைச்சுவைக் காட்சிகள் அரங்கேறத் தொடங்கிவிட்டன.

தி.மு.க. 500 கோடிக்கு விஜயகாந்தை பேரம் பேசியது என்றார் வைகோ. இல்லை என்று அறிக்கை விட்டார் அண்ணியார். இது விஜயகாந்த் அணி என்கிறார் பிரேமலதா. இல்லை என்கிறார் நல்லகண்ணு. இது கூட்டணி இல்லை, தொகுதி உடன்பாடுதான் என்கிறார் ஒருவர். இல்லை, இப்போதே கூட்டணிதான் என்கிறார் இன்னொருவர். இப்போது கூட்டணி இல்லை, ஆட்சி அமைக்கும்போதுதான் கூட்டணி என்கிறார் வேறொருவர்.

கருப்புப் பணத்தில் ஊழல் எதிர்ப்பு மாநாடு நடத்தி உறுதிமொழி ஏற்கும் கருப்பு எம்.ஜி.ஆர்
ஒப்பந்தம் முடிவான மறுகணத்திலிருந்து கேப்டனைக் காணவில்லை. அண்ணி பொளந்து கட்டுகிறார். மச்சான் அமைச்சரவையை நியமிக்கிறார். விஜயகாந்தைச் சுற்றி நாங்கள் இருக்கிறோம், இனி பத்திரிகையாளர்கள் யாரும் அவரை நெருங்க முடியாது என்று பொளந்து கட்டிய போர்வாள் பேட்டியிலிருந்து தப்பி ஓடுகிறார். தப்பிக்க முடியாமல் தடுமாறுகிறார் எழுச்சித் தமிழர். பெட்ரோல் விலையைக் குறைப்பேன் டோல்கேட்டை மூடுவேன் என்ற விஜயகாந்தின் காமெடி வாக்குறுதிகளுக்கு விளக்கமளிக்க முடியாமல், அவர் கொள்கைக்கு நான் பொறுப்பல்ல, என் கொள்கைக்கு அவர் பொறுப்பல்ல; இருந்தாலும், அவர்தான் முதலமைச்சர் என்கிறார் திருமா.
அன்று எம்.ஜி.ஆர். என்ற நடிகருக்குக் கட்சியையும் கொள்கையையும் உருவாக்கிக் கொடுத்துத் தமிழகத்தின் தலையில் கொள்ளி வைத்தவர் வலது கம்யூனிஸ்டு தலைவர் கல்யாணசுந்தரம். பிறகு, அம்மாவுக்கு தா.பா. இப்போது விஜயகாந்தின் கொள்கையை பிரேமலதா உருவாக்கி விட்டார். அதற்கு விளக்கம் சொல்லும் பொறுப்பை மட்டும் நால்வரிடம் ஒப்படைத்திருக்கிறார். முன்னர் எம்.ஜி.ஆர்., கம்யூனிசம், காப்பிடலிசம் என்ற இரண்டும் கலந்து தயாரிக்கப்பட்ட தனது காக்டெய்ல் கொள்கைக்கு அண்ணாயிசம் என்று பெயரிட்டார். இன்று அது அண்ணியிசமாக வளர்ச்சி அடைந்திருக்கிறது.
ஒரே நேரத்தில் தேசியக் கட்சியான பா.ஜ.க.வுடனும், திராவிடக் கட்சியான தி.மு.க.வுடனும், முற்போக்கு முகாமான வலது, இடது கம்யூனிஸ்டுகளுடனும் பேரம் பேச வேண்டியிருக்கும் என்பதை தொலைநோக்குடன் உணர்ந்துதான், 2005-இலேயே தனது கட்சிக்கு தேசிய, முற்போக்கு, திராவிடக் கழகம் என்று விஜயகாந்த் பெயர் சூட்டியிருக்க வேண்டும். திருமாவும் தனது கூட்டணிக்கு வருவார் என்று ஒருவேளை ஊகிக்க முடிந்திருந்தால், தேசிய முற்போக்கு திராவிட தலித்தியக் கழகம் (தே.மு.தி.த.க) என்று கேப்டன் பெயர் சூட்டியிருப்பார். ஜோசியர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற ஒரு நிபந்தனையைத் தவிர, இப்படிப் பெயர் சூட்டுவதில் அவருக்கு கொள்கைரீதியாக அவருக்கு வேறு எந்த தடையும் இருந்திருக்க வாய்ப்பில்லை.
விஜயகாந்த் - மக்கள் நலக் கூட்டணி
கழிசடை அரசியல் தலைவர் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து கூட்டணி அமைத்த பூரிப்பில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள்.
விஜயகாந்த் என்பவர் பழைய நடிகர்களைப் போல நாடகக் கம்பெனி, அதற்குப் பின் சினிமா என்று படிப்படியாக வளர்ந்தவரோ, கலையார்வமிக்க கலைஞன் என்பதால் நடிகன் ஆனவரோ அல்ல. கையில் பணம் வைத்துக்கொண்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஒரு மைனர். இன்று தயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகன், இயக்குநர் ஆகியோரின் பிள்ளைகளெல்லாம் நடிகனாவதைப் போல, கையில் பணம் இருந்ததால், தானே நடிகன் ஆனவர். எம்.ஜி.ஆரைப் போன்ற அரசியல் வாசனை கொண்ட பின்புலம்கூட இல்லாதவர். பணம் இருந்ததால் கதாநாயகன். சினிமா பிரபலமும் ரசிகர் மன்றமும் இருந்ததால் அரசியல்வாதி.
ஆளும் கட்சியின் மீது உள்ள அதிருப்தியை அறுவடைசெய்து கொள்ளும் வண்ணம் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமான எவனொருவனும் தலைவனாகலாம் என்பதால், விஜயகாந்தும் ஒரு தலைவன் ஆனார். ராகுகாலம் – எமகண்டம் பார்த்துத் தொடங்கப்பட்ட இந்த கோமாளிக் கட்சியில், பிழைப்புவாதிகள், சாதியத் தலைவர்கள், தி.மு.க. -அ.தி.மு.க.வில் பதவி கிடைக்காத காரியவாதிகள் உள்ளிட்டோர் உள்ளூர் தலைவர்களானார்கள். ரசிகர் மன்றம் காலாட்படையாக இருந்தது.
தி.மு.க., அ.தி.மு.க.வை வீழ்த்துவதுதான் இலட்சியம், மக்களோடும் ஆண்டவனோடும்தான் கூட்டணி என்று சவடால் அடித்துத் தனித்து போட்டியிட்ட விஜயகாந்த், 2006-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பத்து சதவீத வாக்குகளைப் பெற்றதால், திடீர் அரசியல் தலைவராகிவிட்டார். தனது திராவிட இயக்க ஒழிப்புத் திட்டத்துக்கு ரஜினிகாந்தைப் பெரிதும் எதிர்பார்த்து ஏமாற்றத்துக்கு ஆளாகியிருந்த துக்ளக் சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பலுக்கு விஜயகாந்த் வாராது வந்த மாமணி ஆனார்.
விஜயகாந்த் விளம்பர வித்தைகள்
அம்மா வழியில் ஆம்பள ஜெயலலிதா விஜயகாந்த் கட்சியின் சினிமா பாணி விளம்பர வித்தைகள்.
2009 தேர்தலில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்ட நிலையில், 2011 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் விஜயகாந்தைக் கூட்டணி சேர்த்து விட்டது பார்ப்பனக் கும்பல். அதன் பிறகு 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டி 14 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்தில்கூட தே.மு.தி.க. வெற்றி பெற இயலவில்லை. இப்போது விஜயகாந்தை எப்படியும் முதல்வர் ஆக்கியே தீருவது என்ற முடிவோடு, கேப்டன், அண்ணியார், மச்சான் உள்ளிட்ட மொத்தக் குடும்பத்தையும் தோளில் தூக்கித் திரிகிறது மக்கள் நலக் கூட்டணி.
தனியார் பொறியியல் கல்லூரியில் கல்விக் கொள்ளை, கல்யாண மண்டபம், பண்ணைகள் உள்ளிட்ட தனது சொத்துகளைப் பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் அரசியலில் குதிப்பது என்ற வழக்கமான திடீர்ப் பணக்கார கும்பலின் உத்தியைப் பின்பற்றும் விஜயகாந்தைத்தான், ஊழல் எதிர்ப்பு அணியின் கிங் என்றும் தாங்களெல்லாம் கிங் மேக்கர் என்றும் வெட்கமோ கூச்சமோ இல்லாமல் அறிவித்துக் கொள்கின்றனர் மக்கள் நலக் கூட்டணியினர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூ.35 விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்குவோம், ரேசன் பொருட்களை வீட்டுக்கே மாதந்தோறும் கொண்டுவந்து கொடுப்போம், தனியாருடன் சேர்ந்து கூரியர் சேவை நடத்துவோம், சிறு தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடங்குவோம், தனியாருடன் சேர்ந்து அனைத்து வட்டங்களிலும் வணிக வளாகங்கள்-திரையரங்குகள் கட்டுவோம், தனியாருடன் இணைந்து கப்பல் போக்குவரத்து தொடங்குவோம், இவற்றின் மூலம் பல இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறுகிறது தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கை. ஒரு நாலாந்தர அரசியல் சினிமாவின் கதை, வசனத்தைக் காட்டிலும் இழிந்த முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த அறிக்கை, நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் இந்தக் கும்பல் கொண்டிருக்கும் அறிவுக்குச் சான்று பகர்கிறது.
திருப்புமுனை மாநாடு
தேர்தலில் தனது கட்சியை வைத்து பேரங்கள் நடத்திச் சூதாடும் விஜயகாந்த் நடத்திய தமிழக அரசியலில் திருப்புமுனை மாநாடு.
சினிமாவில் சம்பாதித்த கருப்புப் பணத்தை வைத்து தனது பிறந்த நாளன்று நாலைந்து பேருக்கு தையல் மிசின், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, ஒரு நூறு பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு, அதையே அரசியலுக்கு வருவதற்கான தகுதியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு அற்பவாதியை, ஊழலை ஒழிக்க வந்த மாற்று அரசியல் சக்தி என்று கொண்டாடுகிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
ஊழலை ஒழிக்க வந்த இந்த மாற்று அரசியல் சக்தி தொடங்கும்போதே கட்சியை தனது குடும்ப கம்பெனியாகத்தான் கருதியது, கருதியும் வருகிறது. அது உண்மையும்கூட. தன்னை வைத்துதான் கட்சி என்றும் தன்னைத் தவிர மற்றவர்கள் எல்லம் பூச்சியங்கள் என்றும் கருதிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில், தன் கட்சிக்காரர்கள் அனைவரையும் தன்னை வைத்து சம்பாதிக்க முயற்சிக்கும் வியாபாரிகளாகவே விஜயகாந்த் கருதுகிறார்.
அந்த வியாபாரிகளோ, தாங்கள் போட்ட முதலீட்டுக்கு இலாபத்தை எதிர்பார்க்கின்றனர். 2011- இல் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியவுடனே ஜெயலலிதாவால் கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டதால், ஐந்து காசுகூடச் சம்பாதிக்க முடியாமல் ஐந்து ஆண்டுகளைக் கடத்திய தே.மு.தி.க.வினர், வரும் ஐந்து ஆண்டுகளிலாவது பசுமையைக் காணமாட்டோமா என்று தவித்துக் கொண்டிருந்தனர்.
கட்சிக்காரர்களின் மனநிலையைப் புரிந்து கொண்ட அண்ணியார், இவர்களிடம் முன்கூட்டியே பணத்தை வசூலிப்பதன் மூலம்தான் விசுவாசத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்ள இயலும் என்று முடிவெடுத்துக் கோடிக்கணக்கில் கறந்து விட்டார். தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று மாவட்டச் செயலாளர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் நம்பிக்கொண்டிருக்க, எல்லா திசைகளிலும் எல்லாரோடும் பேரம் நடத்தி, அரசியல் விபச்சாரத்தில் புதிய எல்லைகளைத் தொட்டது விஜயகாந்த் குடும்பம்.
எத்தனை நாற்காலிகள், எத்தனை பதவிகள், எத்தனை பணம் என்பதைத் தவிர, வேறு எந்த விதமான கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாத இந்த கிரிமினல் கும்பல் கடைசியாக மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறது. பணத்தையும் பதவியையும் உதறி விட்டு தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக ஒரு ஊழலற்ற நல்லாட்சியைத் தருவதற்காகத்தான் கேப்டன் தங்களுடன் அணி சேர்ந்திருப்பதாக வெட்கமே இல்லாமல் கூறிக் கொள்கிறார்கள் வைகோவும், திருமாவும், போலி கம்யூனிஸ்டுகளும்.
ஏட்டு முதல் எஸ்.பி. வரையிலான அனைவரின் நடத்தையைப் பற்றியும் சிவகாசி ஜெயலட்சுமி அளித்த வாக்குமூலத்தை நாம் அறிவோம். ஆனால், சிவகாசி ஜெயலட்சுமியின் நன்னடத்தைக்குச் சம்மந்தப்பட்ட ஏட்டுகளோ எஸ்.பி.க்களோ நற்சான்றிதழ் தந்ததாகத் தெரியவில்லை. ஆனால், தே.மு.தி.க.-வுக்கு நன்னடத்தைச் சான்றிதழ் கொடுத்துக் கொண்டாடுகிறது மக்கள் நலக் கூட்டணி.
இவர்கள் தோற்றாலும் வென்றாலும் நமக்கு மகிழ்ச்சிதான். தோற்றால், இவர்களது அரசியல் மரணம் அனைவரும் காறி உமிழ்கின்ற இழிந்த சாவாக இருக்கும். வென்றால், இவர்களது வாழ்வை அசிங்கப்படுத்தும் வேலையை அண்ணியார் கவனித்துக் கொள்வார்.
– தொரட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக