செவ்வாய், 19 ஏப்ரல், 2016

டார்ஜிலிங் டீயில் பிணவாடை! கொள்ளையடித்த டங்கன் குழுமத்தின் தலைவர் ஜி.பி.கோயங்கா

பட்டினி-சாவின் விளிம்பில்மயமலையின் அடிவாரத்தில், பசுமையான பள்ளத்தாக்குகள் நிரம்பிய மேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங், சிலிகுரி மாவட்டங்கள் பட்டினிச் சாவுகள் விழும் மரணப் பள்ளத்தாக்குகளாக மாறி வருகின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இன்றுவரை அப்பகுதியில் செயல்பட்டு வந்த 20-க்கும் அதிகமான தேயிலைத் தோட்டங்கள் அடுத்தடுத்து மூடப்பட்டதால், அவற்றில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் என இதுவரை 150 பேர் பட்டினியால் மாண்டுள்ளனர். சுமார் ஒரு இலட்சம் பேர் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டுள்ளனர். தேயிலைத் தோட்டங்கள் மூடப்பட்டதால் பட்டினிக்கும் சாவின் விளிம்பிற்கும் தள்ளப்பட்டுள்ள தொழிலாளர்கள்
உலகப்புகழ் பெற்ற டார்ஜிலிங் டீயை ஏற்றுமதி செய்யும் எஸ்டேட் முதலாளிகள் கோடிகளில் புரள, பழங்குடியினத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களோ நாளொன்றுக்கு வெறும் 122 ரூபாயை மட்டுமே கூலியாகப் பெற்று வறுமையில் உழல்கின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தால் பல பத்து ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிக் கொடுக்கப்பட்ட சிதிலமடைந்த குடியிருப்புகளில்தான் இவர்கள் குடும்பத்துடன் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இலட்சக்கணக்கான தொழிலாளர் வாழும் எஸ்டேட் பகுதிகளில் அரசு நடத்தும் ஒரு ரேஷன் கடையைக்கூட நீங்கள் கண்ணில் காண முடியாது. தான் நேரடியாக நிறைவேற்ற வேண்டிய அந்தப் பொறுப்பைக்கூட எஸ்டேட் முதலாளிகளிடம் தூக்கிக் கொடுத்து வைத்திருக்கிறது, அரசு.
இதுதான் தேயிலைத் தோட்டங்களும், தொழிற்சாலைகளும் மூடப்படுவதற்கு முன்பிருந்த நிலைமை. தற்போது தோட்டங்கள் மூடப்பட்டுவிட்டதால், சம்பளம் மட்டுமல்ல; தோட்ட முதலாளிகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வந்த ரேஷன் பொருட்கள் கிடைப்பதும் நின்றுவிட்டது. இதனால் தேயிலை மலர்களையும், காட்டுக் கிழங்குகளையும் உண்டு உயிர் வாழ வேண்டிய அவலத்தைத் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்கொண்டு நிற்கின்றன. எஸ்டேட் மோட்டார்கள் நின்றுபோனதால், மலை ஊற்றுகளில் கிடைக்கும் தண்ணீர்தான் இப்பொழுது குடிநீர். ரேஷனும், குடிநீருமே இல்லாதபொழுது மின்சாரம், மருத்துவ வசதி போன்றவற்றையெல்லாம் நீங்கள் எண்ணிப் பார்க்கவே முடியாது. தொடர்பட்டினி காரணமாக பெரும்பாலான தொழிலாளர்கள் காசநோய் உள்ளிட்ட உயிரைக் குடிக்கும் நோய்களின் பிடியில் சிக்கி, சாவின் விளிம்பிற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
darjeeling-on-the-brink-of-starvation-1
இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் குழந்தைகள்தான்.
இதில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது தொழிலாளர்களின் குழந்தைகள்தான். தங்களது குழந்தைகள் தங்களோடு இருந்தால் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான் என்பதால், தொழிலாளர்கள் தமது குழந்தைகளை சிக்கிம் போன்ற பக்கத்து மாநிலங்களுக்கு வீட்டு வேலை செய்ய அனுப்பி வைக்கின்றனர். அங்கு அக்குழந்தைகளுக்கு அரை வயிறு கஞ்சியாவது கிடைக்கும்; அங்கிருந்து அந்தப் பிஞ்சுகள் அனுப்பி வைக்கும் தொகையைக் கொண்டு தமது குடும்பமும் உயிர் பிழைத்துக் கொள்ளும் என்ற பரிதாபகரமான நிலைதான் தொழிலாளர்களின் குடும்பங்கள் அனைத்திலும் தற்பொழுது காணப்படுகிறது.
தொடர்ந்து பட்டினி கிடப்பதால் உடலின் உள் பாகங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகச் செயலிழந்து (Multiple Organ Disorder) தொழிலாளர்கள் மிகக் கொடிய முறையில் மரணமடைந்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில அரசின் தொழிலாளர்களுக்கான சட்டமன்ற நிலைக் குழு தொழிலாளர்களின் அகால மரணத்திற்குப் பட்டினியால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுதான் காரணம் என உறுதி செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் உணவு பாதுகாப்புக்கான சிறப்பு ஆணையர் ஹர்ஷ் மந்தேர், தொழிலாளர்களின் இந்த அவல நிலையை நேரில் சென்று விசாரித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். ஆனால், இவ்வுண்மைகளை அப்படியே மூடி மறைத்துவிட்டு, பட்டினிச் சாவுகளே நடைபெறவில்லை என மேற்கு வங்க அரசு சாதிக்கிறது.
மேற்கு வங்கத்தில் மொத்தம் 283 தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. அவற்றில் ஏறக்குறைய 10 இலட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தேயிலைத் தோட்டத் தொழிற்சாலைகள் இதுபோல மூடப்படுவதும் மேற்கு வங்கத்திற்குப் புதிதல்ல. 2003-04 ஆண்டுகளில் 30 தோட்டங்கள் மூடப்பட்டன; 2010-11 ஆம் ஆண்டுகளில் 15 தோட்டங்கள் மூடப்பட்டன. இவ்வாறு தோட்டங்கள் மூடப்படுவதும், தொழிலாளர்கள் பட்டினியால் மாண்டு போவதும் சி.பி.எம். தலைமையில் நடந்த இடதுசாரி கூட்டணி ஆட்சியிலும் நடந்தது. மம்தா ஆட்சியிலும் தொடர்கிறது.
தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளுள் 12 தொழிற்சாலைகள் கௌரி பிரசாத் கோயங்காவின் டங்கன் குழுமத்திற்குச் சொந்தமானது. இந்த எஸ்டேட்டுகளைத் தவிர, அக்குழுமத்திற்கு ஆந்திர உர நிறுவனம், ரயில்வே உதிரிபாக உற்பத்தி நிறுவனம், மருந்து உற்பத்தி நிறுவனம் எனப் பல நிறுவனங்கள் சொந்தமாக உள்ளன. இக்குழுமம் தேயிலைத் தொழிற்சாலை மூலம் கிடைத்த இலாபத்தை மற்ற தொழில்களுக்குத் திட்டமிட்டே மடைமாற்றியதன் மூலம் தேயிலைத் தொழிற்சாலைகளை நசிந்துபோகச் செய்துவிட்டு, கொழுந்து தேயிலையின் சந்தை விலை குறைந்து போனதால்தான் தங்களது நிறுவனம் நட்ட மடைந்து விட்டதாக நாடகமாடி வருகிறது.
ஜி.பி.கோயங்கா
அரசையும் தொழிலாளர்களையும் ஏமாற்றிக் கொள்ளையடித்த டங்கன் குழுமத்தின் தலைவர் ஜி.பி.கோயங்கா
இது மட்டுமின்றி, தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியை அரசுக்குச் செலுத்தாமல் மோசடி செய்திருக்கிறது, டங்கன் குழுமம். இக்குழுமம் 2013-ஆம் ஆண்டில் மட்டும் தொழிலாளர்களுக்குத் தரவேண்டிய சம்பள பாக்கி 22.5 கோடி ரூபாய். மேலும், புதிய தேயிலைச் செடிகளை நடப்போவதாக் கூறி, அரசிடமும், தேயிலை வாரியத்திடமிருந்தும் பல கோடி ரூபாய் கடன் பெற்று, அப்பணத்தையும் வேறு தொழில் களுக்கு மாற்றி அரசையும் ஏமாற்றி இருக்கிறது.
இப்படி அரசையும், தேயிலை வாரியத்தையும், தொழிலாளர்களையும் ஏமாற்றுவதும், மோசடிகளைச் செய்வதும் டங்கன் குழுமத்தில் மட்டும் நடப்பதல்ல; கிட்டத்தட்ட எல்லா தேயிலைத் தோட்டங்களிலும் இதே போன்ற திருட்டுத்தனங்கள் தொடர்ந்து பல்லாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த ஊழல், மோசடி, திருட்டுக் குற்றங்களுக்காகவே இத்தனியார் தொழிற்சாலைகளை அரசுடமையாக்க முடியும்.
அது மட்டுமல்ல, அரசுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்துதான் இந்தத் தேயிலைத் தோட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெரும்பாலான தோட்டங்களின் குத்தகைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் அவை அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. தேயிலைச் சட்டப்படி, தனியாரின் பிடியிலுள்ள இத்தகைய தோட்டங்களை அரசே கையகப்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், மைய, மாநில அரசுகளோ இந்தத் திருட்டுக் கூட்டத்தைக் காப்பாற்றுவதையும் கைதூக்கிவிடுவதையுமே தமது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
பட்டினியால் சாகும் தொழிலாளர்களைக் காப்பாற்ற ஒரு ரேஷன் கடையைத் திறக்க முன்வராத அரசு, முதலாளிகளைக் காப்பாற்ற முந்திக்கொண்டு செயல்படுகிறது. தோட்ட முதலாளிகள் அழைப்பை ஏற்று கொல்கத்தாவிற்கு ஓடோடி வந்து அவர்களைச் சந்தித்த மைய அரசின் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அம்மோசடி பேர்வழிகளுக்கு பொதுத் துறை வங்கிகள் மூலம் கடன் வழங்க ஏற்பாடு செய்யும் தரகு வேலை பார்த்துத் திரும்பியிருக்கிறார்.
முதலாளிகளின் பைகள் நிரம்பினால், தொழிலாளர்களின் வயிறும் நிரம்பிவிடும் என்ற இந்த நயவஞ்சகக் கதையை நம்மை நம்பவும் சொல்லி, இதுதான் வளர்ச்சி என்ற திருநாமத்தையும் அதற்குச் சூட்டியிருக்கிறது, இந்தியக் ‘குடியரசு! தொழிலாளர்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற முன்வராத அரசிற்கு, அவர்களுக்கு உத்தரவாதமான வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வக்கற்ற அரசிற்கு, நம்மை ஆள்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
– அழகு vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக