ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

அ.தி.மு.கவை கரைசேர்க்குமா தீவு திடல் சென்டிமென்ட்....ர,ராக்கள் அப்செட்

vikatan,com அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா. தீவுத்திடலில் நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் அதிர்ந்து போய் இருக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை கடந்த 4-ம் தேதி அறிவித்தார் ஜெயலலிதா.  மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 227ல் அ.தி.மு.கவும்  மீதமுள்ள 7 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளும் போட்டியிடுகின்றன. இந்நிலையில் இன்று தீவுத்திடலில் நடக்கும் கூட்டத்தில், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம்விளக்கு, அண்ணாநகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராயநகர், மைலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், மதுரவாயல், மாதவரம், திருவொற்றியூர் ஆகியவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார் ஜெயலலிதா. இதில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியும் அடக்கம். மே 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய இருக்கிறார் ஜெயலலிதா.


ஜெயலலிதா பேசுவதை 21 தொகுதியின் வாக்காளர்களும் கேட்கும் வகையில், பிரமாண்ட திரைகளை அமைத்து நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். வில்லிவாக்கம் பஸ் நிறுத்தம், ஆர்.கே.நகர், சூளை தபால் நிலையம், நம்மாழ்வார்பேட்டை, யானைகவுனி, ராயபுரம் எம்.சி. ரோடு, மயிலை, மாங்கொல்லை, கோயம்பேடு பஸ் நிலையம், வேளச்சேரி விஜயநகர் பஸ் நிலையம், சைதாப்பேட்டை பனகல் மாளிகை உள்ளிட்ட பிரதான இடங்களின் மையத்தில் ஜெயலலிதாவின் பேச்சு ஒளிபரப்பாக இருக்கிறது. இதனால், அனைத்து தொகுதிகளுக்கும் ஜெயலலிதா பேசும் பேச்சுக்கள் நேரடியாக மக்களைச் சென்றடையும் என்கின்றனர் அ.தி.மு.கவினர். இதே யுக்தியை மாநிலம் முழுவதும் பின்பற்ற இருக்கிறது அ.தி.மு.க தலைமை. தவிர, 'இன்று காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தல் பணிமனைகளும் திறக்கப்பட்டு, உடனடியாக பிரசாரத்தைத் தொடங்க வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் சூறாவளி பிரசாரம் பற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், " அம்மா பிரசாரத்தைத் தொடங்குவதால் அடிமட்டத் தொண்டர்கள் அளவுகடந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், அவர் தீவுத்திடலில் தொடங்குவதுதான் நெருடலாக உள்ளது. 1996-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தீவுத்திடலில்தான் பிரசாரத்தைத் தொடங்கினார் அம்மா. கட்சிக்கு தோல்விதான் கிடைத்தது. 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் இங்கிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்கினார். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலில் தி.மு.கவின் பொதுக் கூட்டம் தீவுத்திடலில் நடந்தது. அந்தக் கட்சிக்கும் தோல்வியே கிடைத்தது. இதனால், தீவுத்திடல் என்றாலே பெரிய கட்சிகள் ஒதுங்கிப் போகின்றன. மீண்டும் தீவுத்திடலை அம்மா ஏன் தேர்வு செய்தார்? என்றும் தெரியவில்லை" என்கிறார் கேள்வியோடு.

" இந்த சென்டிமென்ட் தவறானது. கடந்த தேர்தலில் விஜயகாந்த் தீவுத்திடலில்தான் கூட்டத்தைத் நடத்தினார். 27 இடங்களைப் பெறவில்லையா? பல சந்தர்ப்பங்களில் தி.மு.க தீவுத்திடலில் கூட்டம் போட்டிருக்கிறது. எதிர்பாராத பல வெற்றிகளையும் பெற்றிருக்கிறார்கள். இது வேண்டும் என்றே யாரோ கிளப்பிவிடுகிறார்கள். இதையெல்லாம் நம்பத் தேவையில்லை" என்கின்றனர் சிலர்.

எது எப்படியோ...தீவுத்திடல் சென்டிமென்ட் அ.தி.மு.கவினரை ஆட்டி வைப்பது நிஜம்.

ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக