சனி, 30 ஏப்ரல், 2016

தாராபுரத்தில் பெண் போலீஸ் காயத்திரி தற்கொலை: டி.எஸ்.பி. செரீனா பேகம் மீது பரபரப்பு புகார்

தாராபுரம்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காயத்ரி(வயது 30). இவர்களுக்கு கார்த்திக்(8), பிரகதீஷ்(4) என்ற 2 மகன்கள் உள்ளனர். காயத்ரி திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் போலீஸ்காரராக வேலைபார்த்து வந்தார். இவர் தாராபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். விடுமுறை கிடைக்கும் போது ஊருக்கு சென்று வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் டி.எஸ்.பி. ஜெரீனாபேகத்தின் உதவியாளராக பணி அமர்த்தப்பட்டார். இந்த நிலையில் நேற்று டி.எஸ்.பி. ஜெரீனாபேகத்துடன் திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு இரவு காயத்ரி வீடு திரும்பினார்.


பின்னர் தனது வீட்டிற்கு சென்ற காயத்ரி விஷம் குடித்துவிட்டு மொபட்டை எடுத்து கொண்டு தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு இரவு 9.40 மணியளவில் சென்றார். அப்போது போலீஸ் நிலையம் வாசலிலேயே அவர் மொபட்டுடன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதைப்பார்த்த மற்ற போலீசார் ஓடிவந்து அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே காயத்ரி இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கோவை வந்து கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையே பெண் போலீஸ் காயத்ரி தற்கொலைக்கு உயர் போலீஸ் அதிகாரி டார்ச்சர்தான் காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. காயத்ரியை பலரது முன்னிலையில் டி.எஸ்.பி. ஜெரீனாபேகம் அவமானமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சல் ஏற்பட்டு காயத்ரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காயத்ரியின் கணவர் ஆறுமுகம் கூறியதாவது, எனது மனைவியை டி.எஸ்.பி. வீட்டு வேலைக்கு பயன்படுத்தி அலைக்கழித்து உள்ளார். என் மனைவியிடம் நான் கூப்பிடும்போது வீட்டிற்கு வந்து வேலைகளை செய்ய வேண்டும் என்றும், வேறு போலீசாரிடம் பேசக்கூடாது என்றும் கூறியுள்ளார். அதோடு இல்லாமல் கடந்த 15 நாட்களாக என் மனைவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். வாடி, போடி என்று ஒருமையில் பேசி வீட்டு வேலை செய்ய வைத்துள்ளார். என்னுடன் என் மனைவி இருக்கும் போது ஒருநாள் டி.எஸ்.பி. போன் செய்து என் மனைவியை திட்டினார். இதையடுத்து நான் போனை வாங்கி, என்ன மேடம், இப்படி பேசுறீங்க என்று கேட்டபோது திடீரென போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

எனவே உயர் அதிகாரியின் டார்ச்சர் காரணமாகவே என் மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எங்கு வேண்டுமானாலும் நான் சொல்ல தயாராக உள்ளேன் என்று கண்ணீருடன் கூறினார்.

இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. maalaimalar.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக