சனி, 9 ஏப்ரல், 2016

சயீப் அலிகான், கரீனா கபூர், கரிஷ்மா கபூர் பனாமா கருப்பு பண பட்டியலில் இன்னும் பல இந்தியர்கள்

இந்தியாவை சேர்ந்த பலர் சுவிஸ் வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள தகவல்கள் ஏற்கனவே வெளியானது. அவர்களின் பெயர் பட்டியலும் வந்தது. இது குறித்து மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை மேற்கொண்டுள்ளன. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பனாமா ஆவணங்கள் என்ற பெயரில் இன்னொரு கருப்பு பண பதுக்கல் பட்டியல் வெளியாகி நாட்டை உலுக்கி இருக்கிறது. வெளிநாடுகளில் கருப்பு பணத்தை பதுக்கியதாக உலக அரசியல் தலைவர்கள் 140 பேர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த நடிகர்-நடிகைகள் உள்பட 500 பிரபலங்களின் பெயர்களும் இதில் இருக்கிறது. இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் ஆகியோரின் பெயர்களும் இதில் உள்ளன. அமிதாப்பச்சன் இந்தியாவில் சம்பாதித்த பணத்தில் வரி ஏய்ப்பு செய்து அதனை வெளிநாடுகளில் உள்ள கம்பெனிகளில் முதலீடு செய்து வருமானம் பார்த்ததாக கூறப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது கருப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மேலும் பலரின் பெயர்கள் வெளிவந்துள்ளன. இதில் இந்தி நடிகர் சயீப் அலிகான் அவரது மனைவியும் நடிகையுமான கரீனா கபூர், நடிகை கரிஷ்மா கபூர் ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

இவர்கள் ‘பி விஷன்’ என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி கரீபியன் ஒரு தீவில் இருக்கும் ‘ஓப்டுரேட்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் புனே அணியை வாங்க முயற்சித்துள்ளனர்.

பி விஷன் கம்பெனியில் கரீனா கபூருக்கும், கரிஷ்மா கபூருக்கும் தலா 4.5 சதவீதம் பங்குகளும் சயீப் அலிகானுக்கு 9 சதவீதம் பங்குகளும் இருந்துள்ளன. இதன் மூலம் வரிஏய்ப்பு செய்த கருப்பு பணம் வெளிநாட்டு கம்பெனிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஏலத்தில் புனே அணியை எடுக்க முடியாமல் போனதால் அந்த பி விஷன் கம்பெனியை கலைத்து விட்டார்கள்.

கருப்பு பண பதுக்கல் பட்டியலில் சயீப் அலிகான், கரீனா கபூர், கரிஷ்மா கபூர் பெயர்கள் இடம் பெற்று இருப்பது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக