செவ்வாய், 5 ஏப்ரல், 2016

நத்தத்தை பறிகொடுத்த நத்தம் விஸ்வநாதன்.....பழிதீர்த்த இதயதெய்வம் புரட்சி தலைவி அம்மா....

அமைச்சர்கள் பலருக்கு இந்தத் தேர்தல் எப்படி இருக்கப் போகிறதோ இல்லையோ, நத்தம் விஸ்வநாதனுக்கு கூடுதல் தலைவலியை உருவாக்கப் போகிறது என்கின்றனர் திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.கவினர். திண்டுக்கல், நத்தம் தொகுதியை 2001 முதல் தக்கவைத்துக் கொண்டிருந்தார் விஸ்வநாதன். தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸின் கோட்டையாக இருந்த இந்தப் பகுதியை அ.தி.மு.கவின் வலிமையான தொகுதியாக மாற்றியதில் விஸ்வநாதனுக்கு ரொம்பவே பங்குண்டு. கட்சிக்காரர்கள் முதல் தொகுதி மக்கள் வரையில் யார் என்ன உதவி என்றாலும், உடனே செய்து தருவதால் யாரும் பகைமை பாராட்ட நினைத்ததில்லை. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை துறைகளில் நத்தம் விஸ்வநாதனின் மகன் மற்றும் உதவியாளர்கள் போட்ட ஆட்டம் பற்றிய தகவலால் அதிர்ந்து போனது கார்டன். இன்றுவரையில், நத்தத்தின் உறவினர் கோபி, உளவுத்துறையின் தீவிர வளையத்தில் இருக்கிறார்.
'ஓ.பி.எஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதனிடம் பறிமுதல் செய்யப்பட்டதே முப்பதாயிரம் கோடி ரூபாய்' என தி.மு.க தலைவரும், ராமதாஸும் அறிக்கை வெளியிட்டதற்கு, கார்டன் தரப்பில் எந்தப் பதிலும் இதுவரையில் இல்லை. மத்திய அமைச்சருக்கெல்லாம் அறிக்கை வெளியிட்ட ஓ.பன்னீர்செல்வம், 'தனது வீட்டில் ரெய்டு ஏன்?' என அறிக்கை வெளியிடவில்லை.
இந்நிலையில், ஓ.பி.எஸ்ஸுக்கும் நத்தத்திற்கும் சீட் கிடைக்குமா? என்ற சந்தேகத்தை தெளிவுபடுத்திவிட்டார் ஜெயலலிதா. ஓ.பி.எஸ் தனது சொந்தத் தொகுதியான போடியில் போட்டியிடுகிறார். ஆனால், நத்தம் விஸ்வநாதனுக்கு, சொந்தத் தொகுதியான நத்தத்தை தவிர்த்துவிட்டு, ஆத்தூர்  தொகுதியை ஒதுக்கியிருக்கிறார் ஜெயலலிதா. "இதைவிட வேறு எந்த வகையிலும் நத்தத்தை பழிவாங்க முடியாது" என்கின்றனர் திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.கவினர்.

இதுதொடர்பாக, நம்மிடம் பேசிய கட்சியின் சீனியர் ஒருவர், " தொடக்ககாலத்தில் புளி வியாபாரம் உள்பட சில தொழில்களை செய்து வந்தார் விஸ்வநாதன். திண்டுக்கல் சீனிவாசனின் உதவியாளராக வலம் வந்தார் நத்தம். பிறகு சீனிவாசனே இவரிடம் வந்து நின்றது வேறு கதை. 91-ம் ஆண்டு காலகட்டத்தில் கட்சிக்குள் தீவிரமாக வேலை பார்த்து வந்தார். 2001-ம் ஆண்டு நத்தம் தொகுதியில் போட்டியிட சீட் கொடுத்தார் ஜெயலலிதா. காங்கிரஸ் ஏரியாவில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும், தேர்தல் வேலைகளில் நத்தம் காட்டிய ஈடுபாடும் ஜெயலலிதாவை ரொம்பவே கவர்ந்துவிட்டது. இதையடுத்து, தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தார். கடந்த சில வாரங்களாக ஓ.பி.எஸ், நத்தம், பழனியப்பன் ஆகியோரின் முதலீடுகளும், வாங்கிக் குவித்த சொத்துக்களும் கார்டன் கண்ணை உறுத்தியதால் பின்னுக்குத் தள்ளப்பட்டார் நத்தம். இந்தத் தேர்தலில் 'இவருக்கு சீட் கொடுக்கவே கூடாது' என்றுதான் நினைத்தார் ஜெயலலிதா. இருந்தாலும், சோதனை முயற்சியாக நத்தத்தை பழிவாங்க வேறு வழியை முடிவு செய்தார் ஜெயலலிதா. அதற்காகத்தான் ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார்" என விவரித்தவர்,

தொடர்ந்து, " தி.மு.கவின் ஐ.பெரியசாமி நான்கு முறை வென்ற தொகுதி ஆத்தூர். தொடர்ந்து ஆத்தூர் தொகுதியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஐ.பி. கடந்த தேர்தலில் தி.மு.க எதிர்ப்பு அலை இருந்தாலும், 54 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஐ.பி வெற்றி பெற்றார். காரணம். தொகுதி மக்கள் மத்தியில் அவர் வைத்திருக்கும் அக்கறைதான். அதுவும் தவிர, நத்தத்திற்கும் ஐ.பிக்கும் உள்ள நட்பு பற்றியும் அம்மாவுக்குத் தெரியும். தி.மு.க அமைச்சர்கள் பலர் மீது அ.தி.மு.க அரசு வழக்குத் தொடர்ந்த போதும், ஐ.பி மீது எந்த வழக்கும் வராமல் பார்த்துக் கொண்டார் நத்தம். ஒருகட்டத்தில், இதுபற்றிய புகார்கள் கார்டனுக்குள் போன பிறகுதான். ஐ.பி மீது வழக்கே போடப்பட்டது. அந்தளவுக்கு இருவருக்குள்ளும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் உள்ளது. இந்த நீண்டகால நட்பிற்கு வேட்டு வைக்கும் வகையில், 'நண்பரோடு போட்டி போட்டு ஜெயித்து வரட்டும்' என டீலில் விட்டுவிட்டார் ஜெயலலிதா. 'ஆத்தூர் தொகுதியைத் தருவதற்கு பதில் சீட் தராமலே இருந்திருக்கலாம்'  என புலம்பி வருகிறார் நத்தம். இதைவிட, முக்கியமான விஷயம், நத்தத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனுக்கு சீட் கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. 'இனி யாருக்கு முக்கியத்துவம்' என்பதையும் கட்சிக்காரர்களுக்குத் தெளிவுபடுத்திவிட்டார் ஜெயலலிதா. இதுநாள் வரையில், நத்தம் என்ற ஊரை பெயருக்கு முன்பாக போட்டுக் கொண்டிருந்த விஸ்வநாதன், இனி வெறும் விஸ்வநாதன்தான். நத்தம் என்ற அடைமொழியையும் அழித்துவிட்டார் அம்மா" என்றார் அவர் விரிவாக.

ஆக ஆத்தூரில் யாருக்கு வெற்றி  என்பதற்கான பந்தயம் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக