செவ்வாய், 5 ஏப்ரல், 2016

தேமுதிகவில் வெடித்தெழுந்த போர்கொடி....நம்பவச்சு ஏமாதிட்டாய்ங்க.....

விகடன்.com :மக்கள் நலக் கூட்டணியை மறுபரிசீலனை செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு நாளை மதியம் வரை கெடு விதித்திருக்கிறது எம்.எல்.ஏ. சந்திரகுமார் தலைமையிலான அணி. மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரான தி.மு.கவின் இந்த அஸ்திரத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. சில நாட்களுக்கு முன்பு சேலம், தாதகாப்பட்டி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, " எங்கள் கட்சியைச் சேர்ந்த எத்தனை மாவட்டச் செயலாளர்களுடன் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதும் எங்களுக்குத் தெரியும். என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்தீர்கள் என்பதும் தெரியும். எங்கள் நிர்வாகிகளோடு நீங்கள் பேசியதை நான் நிரூபித்துக் காட்டட்டுமா?" என பகிரங்கமாக சவால்விட்டார். இதைப்போலவே, மூன்று நாட்களுக்கு முன்பு ஈரோடு கூட்டத்திலும், " சந்திரகுமாரால் தொகுதிப் பிரச்னைகளை போதிய அளவில் தீர்க்க முடியவில்லை என்பது உண்மைதான்.
இந்த ஆட்சியில் மக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து தர முடியவில்லை. இதே தொகுதியில் நின்று சந்திரகுமார் மீண்டும் வெற்றி பெறுவார். மாறாக, இங்கே இருந்து போக வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். அங்கே போனால் வெறும் சால்வை மட்டும்தான் கிடைக்கும்" என மறைமுகமாக எச்சரித்தார் பிரேமலதா.

ஆக, தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், தி.மு.கவில் ஐக்கியமாகப் போகும் தகவலையும் முன்பே தெரிந்து வைத்திருந்தார் பிரேமலதா. அவர்களை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்துவிட்டது. இதற்கு மேலும் சந்திரகுமார் அணி, தே.மு.தி.கவுக்கு திரும்புவதற்கான வாய்ப்பு இல்லை. மீண்டும் அங்கே போனால் உரிய மரியாதை கிடைக்காது என்பதும் சந்திரகுமார் உள்ளிட்டவர்களுக்குத் தெரியும். தேர்தல் நெருக்கத்தில் சந்திரகுமாரின் இந்த அதிரடிக்கு என்ன காரணம்? என தே.மு.தி.க அதிருப்தி வட்டாரத்தில் விசாரித்தோம்.


" தி.மு.க கூட்டணியில்  தே.மு.தி.க இணைய வேண்டும் என்றுதான் கட்சி நிர்வாகிகள் பலரும் விரும்பினார்கள். கேப்டனின் தவறான முடிவால்தான் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். இதற்காக ஒரு பைசா கூட தி.மு.கவில் இருந்து நாங்கள் யாரும் வாங்கவில்லை. இதை எங்கு வேண்டுமானாலும் விசாரித்துக் கொள்ளுங்கள். அ.தி.மு.க ஆட்சியில்பட்ட காயங்களுக்கு தி.மு.க ஆட்சியில் மருந்து தேடிக் கொள்ளும் முயற்சிதான் இது. சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்ட மூவருக்கும் அவர்களின் சிட்டிங் தொகுதிகளை வழங்க தி.மு.க தலைமை முடிவு செய்துள்ளது. மற்றவர்களுக்கு அடுத்து வரப் போகும் உள்ளாட்சி தேர்தலில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என தி.மு.க தலைமை உறுதியளித்திருக்கிறது. சிலருக்கு தி.மு.கவில் கட்சிப் பதவி வழங்கப்படும் எனச் சொல்லியிருக்கிறார்கள்.
ஈரோடு தொகுதியில் பெரும்பான்மையாக கவுண்டர் சமூகத்து வாக்கு உள்ளது. தி.மு.க அணியோடு சேரும்போதுதான் வெற்றி வாய்ப்பு உறுதியாகும். மக்கள் நலக் கூட்டணிக்கு இங்கு சொல்லிக் கொள்ளும்படியாக வாக்குகள் இல்லை. அதேபோல், மேட்டூர் தொகுதியில் உள்ள வன்னியர் வாக்குகளும் தி.மு.கவுக்கு மெஜாரிட்டியாக உள்ளது. மக்கள் நலக் கூட்டணிக்கு சில ஆயிரம் ஓட்டுக்கள்கூட இங்கு கிடைக்காது. மேட்டூர் தொகுதியில் பார்த்திபனுக்கு நல்ல பெயர் உள்ளது. தி.மு.கவோடு சேரும்போது வெற்றி பிரகாசமாகும். இதேபோல்தான், கும்மிடிப்பூண்டி தொகுதியின் நிலைமையும். இதை மனதில் வைத்துதான் சந்திரகுமார், பார்த்திபன், சேகர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் இந்த முடிவை எடுத்தார்கள். இன்னும் சில எம்.எல்.ஏக்களும் வர இருக்கிறார்கள்" என நிலைமையை விவரித்தார் அவர்.

'மூன்று எம்.எல்.ஏக்களின் தேர்தல் செலவையும் தி.மு.கவே ஏற்றுக் கொள்ளும்' என்கிறார்கள். இவர்களை அனைவரையும் திரட்டி,  தே.மு.தி.க (சந்திரகுமார் அணி) என தனியாக ஒன்று உருவானாலும் ஆச்சர்யமில்லை.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக