வெள்ளி, 22 ஏப்ரல், 2016

யாரை குறிவைக்கிறார் சீமான்? என்னன்னவோ சொல்கிறார் ஆனால் பாடி லாங்குவேஜ் வேற என்னவோ சொல்கிறதே?

விகடன்.com :தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள். 96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது.
89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது.
அதுவே, பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்றோர் தொடங்கிய கட்சிகளை மக்கள் ஆராதிக்கவில்லை. 234 தொகுதிகளிலும் மாற்றை முன்னிறுத்தும் கட்சிகளுக்கு மக்கள் வரவேற்பைக் கொடுத்தே வந்துள்ளனர். அந்த வகையில், 'தமிழனா... திராவிடனா?' என்ற கோஷத்தோடு களமிறங்கும் சீமானும் கவனிக்கப்படுகிறாரா? என்ற கேள்விக்கு மே 19 பதில் தரும்.

புதிய மாற்று என தே.மு.தி.க வந்தபோது பா.ம.க, ம.தி.மு.கவை பலவீனப்படுத்த வேண்டும் என விஜயகாந்த் எண்ணவில்லை. அரசியல் ஓட்டத்தில் அனைத்தும் இயல்பாகவே நடந்தன. அண்ணா கால்பதித்தபோது கம்யூனிஸ்ட்டுகள் பலவீனமடைவார்கள் என அவர் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த வகையில், 2016 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, பா.ம.க என பிரதான கட்சிகளுக்கு எதிராக சீமான் முன்வைக்கும் அரசியல் ஆச்சர்யத்தை அளிக்கிறது.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்



'இந்த பிச்சைக்கார பயலுங்க போட்ட பிச்சைதான் உங்க முதலமைச்சர் பதவி!' -ஜெ.வை தாக்கும் சீமான்
'தமிழ்நாட்டின் சிவசேனா, பாசிஸ்ட் சீமான்' என கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதைக் கண்டு சீமான் கொதித்தாலும், பிரதான கட்சிகளுக்கு எதிராக அவர் முன்வைக்கும் வியூகங்கள் கவனிக்கப்பட வேண்டியவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

1. மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. திருமாவும் கிருஷ்ணசாமியும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதில்லை. அவர்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில், பட்டியல் இனத்து மக்களின் வாக்குகளை, தமிழன் என்ற அடிப்படையில் கவர்வதற்காக, 20 அட்டவணை பிரிவு மக்களை பொதுத் தொகுதியில் நிறுத்தியுள்ளார். தமிழக அரசியலில் இதுபோன்று யாரும் இதுவரையில் செய்ததில்லை. ஓரிரு தொகுதிகளில் வேண்டுமானால் இதுபோல் செய்வார்கள். அதிரடியாக 20 பேரை களத்தில் நிறுத்துவது என்பது, திருமா போட்டியிடாத இடங்களில் உள்ள அவரது வாக்குகளை அப்படியே நாம் தமிழர் பக்கம் திருப்புவதற்காக மட்டும்தான். தமிழ்நாட்டில் 20 சதவீதம் பெரும்பான்மையாக உள்ள மக்களை நோக்கி சீமான் வைத்த முதல் குறி இது.

2. பா.ம.கவை திட்டமிட்டு காலி செய்யும் வகையில் வன்னியர் வாக்குகளை குறிவைக்கிறார். மற்ற அரசியல் கட்சிகள் நிறுத்தாத இடங்களில் நாம் தமிழர் சார்பில் 36 வன்னியர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும், 'வீரப்பனுக்கு மணிமண்டபம்' என்ற சீமானின் கோரிக்கை வன்னியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. வீரப்பனை அரக்கன் என்ற ரஜினி அழைத்தபோது, ராமதாஸ் கொந்தளித்துப் போனார். பல இடங்களில் பா.ம.கவினர் ரஜினிக்கு எதிராக கொந்தளித்தார்கள். ஆனால் ஜெயலலிதா, வீரப்பனை அரக்கன் என்று சொன்னபோது, ராமதாஸ் எந்த மறுப்பையும் வெளிக்காட்டவில்லை. அ.தி.மு.கவோடு மோதல் போக்கையும் கடைபிடிக்கவில்லை. ராமதாஸ் கோட்டைவிட்ட இடத்தை பிடித்துக் கொண்டு, 'இப்போது அரக்கன் என்று ஜெயலலிதா சொல்வாரா?' என சவால்விடுகிறார் சீமான். நகர்ப்புற வாக்காளர்கள் பக்கம் அன்புமணி ஓடும்போது, கிராமப்புற வன்னியர்களை குறிவைத்து 25 வயதுள்ள இளைஞர்களை களத்தில் நிறுத்தியிருக்கிறார். இதன் மூலம் பா.ம.கவை பலவீனப்படுத்த முடியும் என நம்புகிறார் சீமான்.

 3. " 'ரஜினி தமிழரே இல்லை  என விஜயகாந்த் சொல்லும்போது, 'நாங்கள்தான் மாற்று' எனச் சொல்ல விஜயகாந்த்துக்கு அருகதை இல்லை. 2011 தேர்தலில் மாற்று எனச் சொல்லும் தகுதியை விஜயகாந்த் இழந்துவிட்டார். இவர் சொல்லும் மாற்று என்பதே ஏமாற்றுதான்" எனப் பேசுகிறார் சீமான். 'ரஜினி நேர்மையானவர். மராட்டி என வெளிப்படையாகச் சொல்லக் கூடியவர். அவரை விமர்சிக்க விஜயகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது?' என குறிவைப்பதன் மூலம், விஜயகாந்த் எதிர்ப்பை கூர்மையாக்கி, ரஜினி வாக்குகளை தன்பக்கம் இழுக்கும் நோக்கம்தான். அதிலும், தே.மு.தி.கவும் பா.ம.கவும் அணிசேர்ந்த கட்சிகள்தான் என்ற பிரசாரத்தின் மூலம் வடபுலத்தில் உள்ள இவர்களுக்கு எதிரான வன்னியர் வாக்குகளை நாம் தமிழர் பக்கம் திருப்புகிறார்.

4. சீமானின் தி.மு.க-காங்கிரஸ் எதிர்ப்பு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஈழ மக்களை படுகொலை செய்த கட்சி, ஊழல் கட்சி, தரகர்கள் கூட்டணி என கடுமையாக விமர்சனம் செய்கிறார். அதிலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை தன்பக்கம் இழுக்க, 'காமராஜர் ஆட்சியை கொடுப்போம்' என்று சொல்வதும், காமராஜருக்குத் தளபதியாக இருந்த சிவாஜி கணேசனை தமிழர் என முன்னிறுத்துவதும் மிக முக்கியமான தந்திரங்கள். பா.ஜ.கவின் விநாயகர் கலாசாரத்தை எதிர்கொள்ள முருகனை முன்னிறுத்துகிறார். இதன்மூலம், 'இந்து வாக்கு வங்கியும் தன்பக்கம் வரும்' என்பதுதான்.

5. அ.தி.மு.கவின் வாக்காளர்களில் முக்குலத்தோர் கணிசமாக இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தமிழர்களின் சுயமரியாதையைப் பற்றிப் பேசுகிறார். 'ரோட்டில் விழுந்தால் அ.தி.மு.க, வீட்டில் விழுந்தால் தி.மு.க' என தமிழன் சுயமரியாதை இழந்து தவிப்பதை நையாண்டி செய்கிறார். அ.தி.மு.க, தி.மு.க விமர்சனத்தைக் கூர்மையாக்குவதன் மூலம், 'நாம் தமிழரே மாற்று' என மக்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சிக்கிறார். தவிர, 'மக்கள் நலக் கூட்டணி என்பதே ஏமாற்றுதான். இவர்களுக்குள் என்ன ஒற்றுமை இருக்கிறது? திருமாவும் வைகோவும் முன்வைக்கும் ஈழ விடுதலையை சி.பி.எம், சி.பி.ஐ கட்சி ஏற்குமா? கொள்கையில்லாத கூட்டணி' என கடுமையாகத் தாக்குகிறார்.

6. தேர்தலில் மதுவிலக்கு மிக முக்கியமான முழக்கமாக இருக்கும்போது, 'செயற்கை மது கூடாது. இயற்கை மது வேண்டும்' என்கிறார். ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கொங்கு மண்டலம் மற்றும் ராமநாதபுரத்தில் பேசும்போது, 'கள்ளை பானமாக அறிவிப்போம்' என வாக்குக்காகச் சொல்வார்கள். ஆனால், சீமானோ, 'இயற்கை பானமாக கள்ளைக் கொண்டு வருவோம்' என உறுதியாக நிற்கிறார். இது பனைமரத் தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்கக் கூடிய வாக்குறுதியாக இருக்கிறது.

தேர்தல் முடிவுக்குப் பிறகும் இரட்டை மெழுகுவர்த்தி பிரகாசமாக எரியுமா அல்லது பத்தோடு பதினொன்றாக கரைந்து போகுமா? என்பதற்கான விடை தெரிய இன்னும் முப்பது நாட்கள் இருக்கின்றன.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக