புதன், 20 ஏப்ரல், 2016

வசந்தி தேவியை பொது வேட்பாளராக திமுக ஏற்று கொள்ளவேண்டும் ! சமுகநீதிக்கு எழுச்சி!

விகடன்.com : வசந்தி தேவிக்கு ஆதரவாக தனது வேட்பாளரை திரும்பப் பெறுமா திமுக? இப்போதே சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகுகிறது. ஆர்.கே நகர் தொகுதியில் ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமென்றால், திமுக தன் வேட்பாளரை திரும்ப பெற்று இவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று  முற்போக்காளர்கள் கருத்து தெரிவிக்க துவங்கிவிட்டனர். யார் இந்த வசந்தி தேவி ? சமூக செயற்பாட்டாளர்கள் அவருக்கு ஆதரவளிக்க என்ன காரணம் ? அவர் முன்னாள் துணை வேந்தர் என்பது மட்டும்தான் காரணமா? இல்லை அது மட்டும் காரணமில்லை.
மாணவர்களுக்கு துணை நின்றவர்:
அப்போது அவர் அரசுக் கல்லூரி முதல்வராக பணியாற்றிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரம்,  ஒரு மாணவி மிகுந்த தயக்கத்துடன் வசந்தி தேவி வீட்டு கதவை தட்டுகிறார். 
வசந்தி தேவி,  மாணவியை உள்ளே அழைத்து, 'என்ன பிரச்னை..? என்று விசாரிக்கிறார். அதை களைய தன்னாலான ஆலோசனைகளை கூறுகிறார். அதாவது ஒரு மாணவி, தன் சக மாணவிகளுடன் தன் பிரச்னையை பகிர்ந்து கொள்ளாமல், நள்ளிரவில் கல்லூரி முதல்வரின் வீட்டின் கதவை தட்டி, தன் பிரச்னையைக் கூறி ஆலோசனை கேட்கிறார் என்றால், அவர் தன் மாணவர்களுக்கு சக தோழனாக இருந்திருக்கிறார் என்று தானே அர்த்தம். அவர்கள் மனதில் நம்பிக்கையை விதைத்து இருக்கிறார் என்றுதானே பொருள்.

பாடத்திட்டத்தை புதுப்பித்தவர்:
இவர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது, பல்கலைக்கழக பாடத்திட்டத்தை புதுப்பித்தார். அதோடு இல்லாமல், ஆசிரியர் கூட்டமைப்பை அழைத்து பேசி, பாடத்திட்டங்களை சீரமைக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை நடத்தினார். தன் தனிப்பட்ட வாழ்வில் மட்டும் மனித உரிமை செயற்பாட்டாளராக இல்லாமல், மனித உரிமை சம்பந்தமான பாடத்திட்டங்களை பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தினார்.
ஆம். வசந்தி தேவி எப்போதும் அப்படிதான். கல்வி கற்பிப்பது மட்டும் தன் வேலை என்று அவர் எக்காலமும் ஒதுங்கி நின்றதில்லை. கல்வியில் உள்ள அரசியலை பேசியவர், கல்வி வணிகமயமாவதை எதிர்த்தவர், வீதிக்கு வந்து போராடியவர்.

ஆளும் மத்திய அரசு, கல்வியை வணிக பொருளாக்க உலக வர்த்தக மையத்திடம் சம்மதம் தெரிவித்த போது, வீதிக்கு வந்து சக கல்வியாளர்களை கூட்டி அண்மையில் போராடினார். 'கல்வியை வணிகப்பொருள் ஆக்காதீர்கள்' என கோஷமிட்டார். இது  தமிழக் சூழலில் அரிதினும் அரிதான விஷயம். தமிழக சிந்தனையாளர்கள், அதுவும் குறிப்பாக கல்வி தளத்தில் உள்ள அறிஞர்கள், தன் துறை சார்ந்த ஒரு பிரச்னைக்காக வீதிக்கு வருவது என்பது வரலாற்றில் எப்போதாவது நிகழும் சம்பவம். அதை நிகழ்த்தி காட்டியவர் வசந்தி தேவி.

எப்படி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ஆனார் ?
பிரேசில் சிந்தைனையாளர் பவுலோ சொல்வார், "கல்வியாளர்கள் எப்போதும் நடுநிலையாளராக இருக்க கூடாது" என்பார். இதன் பொருள்,  சமூகத்தில் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்படும்போது, அவர்கள் பக்கம் நிற்க வேண்டும் என்று அர்த்தம். வசந்தி தேவி எப்போதும் அப்படிதான் இருந்திருக்கிறார். கல்வியை தாண்டி எப்போதும் சாதி ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தியவர் வசந்தி தேவி. சாதி ஒழிப்பே உண்மையான சமூக விடுதலை என்று நம்பியவர். ஆர்.கே நகருக்கு வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்று முடிவு செய்தவுடன், விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகிகள் அனைவரும் ஏகமனதாக தேர்ந்தெடுத்தது இவரைதான். இத்தனைக்கும் இவர் ‘சீட்’ கேட்கவில்லை. வயதின் காரணமாக முதலில் தயங்கியவர், பின் சம்மதித்து இருக்கிறார்.
அரசியல் என்றாலே சாக்கடை என்று பதிந்துவிட்ட பொது புத்தியில், இது போல் அற்புதங்கள் எப்போதாவது தான் நிகழும்.அதை இந்த தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் நிகழ்த்தி இருக்கிறது. கட்சி அரசியலை  தாண்டி, வேட்பாளரை நிறுத்துவது என்பது  நல்ல முன்னுதாரணமும் கூட.

'எதிரிக்கு பெரிய தோல்வியை பரிசளிக்க வேண்டுமானல், தாம் சில விஷயங்களை விட்டுக்கொடுப்பது  யுத்த தந்திரத்தில் ஒரு வகை. அந்த தந்திரத்தை இந்த தேர்தலில் கையாள்வாரா கருணாநிதி ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக