வியாழன், 21 ஏப்ரல், 2016

பாரதமாதா பஜனைக்குப் பயப்படலாமா ? இஸ்லாமிய அடிப்படைவாதிகளை நம்பி பாஜக?

மதிப்பிழந்து வரும் மோடி அரசை முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவதற்கான பாரத மாதா பஜனையைத் தொடங்கி வைத்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
ராமன் தேசிய நாயகன் என்று ஒப்புக்கொள் கிறாயா, இல்லையா?” என்று இசுலாமிய மக்களை அச்சுறுத்தி, இந்து வெறியைத் தூண்டி அதிகார நாற்காலியில் அமர்ந்தது பாரதிய ஜனதா. இப்போது கேலிப் பொருளாகி வரும் மோடி அரசின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்கு பாரத மாதாவைத் துணைக்கு அழைக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
bharat-matha-caption-1“பாரத் மாதா கி ஜெய்” சொல்வதற்கு இளைய சமுதாயத்தைப் பயிற்றுவிக்க வேண்டுமென்று மார்ச் 3-ஆம் தேதியன்று பேசினார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். மார்ச் 17-ஆம் தேதியன்று மகாராட்டிர சட்டமன்றத்தில், “பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை எழுப்பத் தயாரா?” என்று இசுலாமிய அடிப்படைவாதக் கட்சியான மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதானுக்குச் சவால் விட்டார். பா.ஜ.க. உறுப்பினர் ராம் கதம்.
“ஜெய் ஹிந்த், ஜெய் பாரத், ஜெய் மகாராஷ்டிரா போன்ற முழக்கங்களை எழுப்ப நான் தயார். ஆனால், என் கழுத்தை அறுத்தாலும் நீங்கள் சொல்லும் அந்த முழக்கத்தை மட்டும் நான் எழுப்ப மாட்டேன்” என்று பதிலளித்தார் வாரிஸ் பதான்.  பாரத் மாதா , கர்நாடக மாதா, கேரளா மாதா ,ஹிந்தி மாதா ,சம்ஸ்கிருத மாதா எல்லாத்துக்கும் ஓவியம் வரைந்து ரவி வர்மா புகழ் பெற்றார்.. அவரு பாவம் எதோ பாண்டஸி கற்பனையில் பண்ணினாரு இவனுக என்னாடான்னா அதுவுல கையை வச்சு
பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கத்தை எழுப்ப மறுத்த குற்றத்துக்காக அவரைச் சட்டமன்ற உறுப்பினர் தகுதியிலிருந்து இடை நீக்கம் செய்தார் அவைத் தலைவர். இவ்விவகாரத்தில் காங்கிரசு மற்றும் தேசியவாத காங்கிரசு கட்சிகளும் பா.ஜ.க.வை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டைப் பெண் தெய்வமாக உருவகப்படுத்தும் இந்த முழக்கம் ஒரு வகையான உருவ வழிபாடு என்பதால், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கங்களை இசுலாமியர்கள் எழுப்ப முடியாது என்பது மஜ்லிஸ் கட்சியின் நிலைப்பாடு. இந்த முழக்கம் பார்ப்பன இந்து தேசியக் கண்ணோட்டத்திலானது. இதனை இசுலாமியர்கள் ஏற்க மாட்டார்கள் என்று தெரிந்துதான் பாரதிய ஜனதா இந்த விவகாரத்தை திட்டமிட்டே கிளப்பியிருக்கிறது. (பார்க்க: பெட்டிச் செய்தி)
மார்ச் 28 அன்று அருண் ஜெட்லி பேசியிருப்பதை இப்பிரச்சினையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். “ஐதராபாத் பல்கலைக்கழகத்திலும் ஜே.என்.யு.விலும் நடைபெற்று வரும் பிரச்சினைகளைத் தூண்டுபவர்களில் முதன்மையானவர்கள் தீவிர கம்யூனிஸ்டுகள். முகத்தை மூடியபடி சில ஜிகாதிகளும் அந்த ஆர்ப்பாட்டத்தில் தென்படுகின்றனர். தீவிர இடதுசாரிகளின் அரசியலில் காங்கிரசும், நாடாளுமன்ற மிதவாத கம்யூனிஸ்டுகளும் சிக்கிக் கொண்டுவிட்டனர். முதல் சுற்று சித்தாந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற்று விட்டோம். கிட்டத்தட்ட நமது நிலையை ஆதரிக்கும் அளவுக்கு அவர்கள் தள்ளப்பட்டு விட்டார்கள்.”
ஒருபுறம் ஜெட்லி இப்படிப் பேசிக்கொண்டிருக்க, அதே நாளன்று மோகன் பகவத் வேறுவிதமாகப் பேசுகிறார். “பாரதம் உலகத்துக்கே வழிகாட்ட வேண்டும், ஒட்டுமொத்த உலகமும், ‘பாரத் மாதா கீ ஜே என முழங்க வேண்டும். இதுவே நம் விருப்பம். யாருடைய தொண்டைக்குள்ளும் இந்த முழக்கத்தைத் திணிப்பது நம் நோக்கமல்ல” என்கிறார். ஒரே நேரத்தில் நூறுவிதமாகப் பேசும் இந்தக் கயமையை, இனி “நாக்குமாறித்தனம்” என்று நாம் அழைக்கலாம். இனி, நடந்தது என்ன என்பதை நாம் பார்ப்போம்.
ஜே.என்.யு மாணவர்கள்
ரோஹித் வெமுலாவையும் காந்தியையும் கொன்ற கொலைகாரர்கள் எங்களுக்குத் தெசியம், தேசபக்தி குறித்து பாடம் நடத்த வேண்டாம் என்ற முழக்க அட்டைகளோடு இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள்.
ஜே.என்.யு. மாணவர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்கு, தேசியம், தேசப்பற்று என்பன குறித்த பரவலான விவாதத்தைக் கிளப்பி விட்டது. அப்சல் குரு தூக்கு தண்டனைக்கு எதிராக தமது கருத்தைக் கூறுவதற்கு ஒருவருக்கு உரிமையில்லையா என்று கருத்துரிமை தளத்தில் மட்டும் தொடங்கிய அந்த விவாதம், முதலில் பார்ப்பன இந்து தேசியத்தைக் கேள்விக்குள்ளாக்கியது. அடுத்து, தேசியம் என்ற கருத்தாக்கத்தையே பாட்டாளி வர்க்கப் பார்வையில் விமரிசித்துப் பேசுவதற்கான களத்தையும் அது உருவாக்கித் தந்தது. இந்தியா என்ற நாடு எப்போது உருவானது, தற்போதுள்ள மாநிலங்கள் அதில் எப்படி, எப்போது இணைக்கப்பட்டன என்பன போன்ற வரலாற்று விவரங்கள் எல்லாம் பொதுவெளியில், அறிவுத் துறையினர் மத்தியில் விவாதிக்கப்படும் நிலையை அது உருவாக்கி விட்டது.
ஜே.என்.யு. மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரசு மற்றும் வலது, இடது கம்யூனிஸ்டுகளால் அங்கே இந்த வரலாறை மறுக்கவோ, தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையை எதிர்த்துப் பேசவோ முடியவில்லை. மிதவாத இந்து தேசியத்தின் அடிப்படையிலான தங்களது வழக்கமான ஒருமைப்பாட்டு பஜனையையும் பாடமுடியவில்லை. இதைத்தான் தீவிர இடதுசாரிகளின் அரசியலில் காங்கிரசும் மிதவாத கம்யூனிஸ்டுகளும் “சிக்கிக்” கொண்டுவிட்டதாக அருண் ஜெட்லி குறிப்பிடுகிறார்.
எனவேதான், வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவரான கன்னையா குமார், “நான் அரசியல் சட்டத்தை மதிக்கிறேன். காஷ்மீர் இந்தியாவின் அங்கம் என்பதை நான் மறுக்கவில்லை. அதே நேரத்தில் அங்கே பெண்களுக்கு எதிராக இராணுவத்தினர் நடத்தும் வல்லுறவுக் குற்றங்களை நான் விமரிசிப்பதை யாரும் தடுக்க முடியாது” என்றெல்லாம் பேசி சமாளிக்கும் நிலை ஏற்பட்டது.
bharat-matha-madisar-maamiபார்ப்பன பாசிஸ்டுகள் தமது நடவடிக்கை மூலம் இவர்களை இக்கட்டில் தள்ளியது மட்டுமின்றி, தாங்களும் இக்கட்டில் சிக்கிக்கொண்டனர். பாரத் மாதா கி ஜெய் என்று அவர்கள்தான் தொண்டை கிழியக் கத்தினார் களேயன்றி, அந்த முழக்கத்தை வாங்கிப் போடக்கூட எந்த ஊரிலும் ஆளில்லை. ஒரு ஏழையின் பார்வையில் பா.ஜ.க.-வின் தேசபக்தியைக் கேலிக்குள்ளாக்கிய கன்னையா குமாரின் உரை, மோடியின் அரசைக் கேலிப்பொருளாக்கி விட்டது. “நாடு என்பது அதன் மக்கள்தான். இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளின் எடுபிடியாகவும் செயல்படும் மோடியின் அரசுக்கு நாட்டைப் பற்றியோ, நாட்டுப்பற்றினைப் பற்றியோ பேசுவதற்கு என்ன அருகதை இருக்கிறது?” என்ற கேள்விக்கு காவிக் கோழைகளால் பதிலளிக்க முடியவில்லை.
இந்த இக்கட்டிலிருந்து தப்புவதற்கும் பார்ப்பன பாசிஸ்டுகளிடம் இருந்த ஒரே ஒரு வழி, இந்தப் பிரச்சினையை முஸ்லிம் எதிர்ப்பாக மாற்றுவதுதான். மாட்டிற்கு முன்னால் சிவப்புத் துணியை ஆட்டுவதைப் போல, இசுலாமிய அடிப்படைவாதிகளைச் சீண்டுவதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறது பாரதிய ஜனதா.
bharat-matha-caption-2வாரிஸ் பதான் இடைநீக்கம் பற்றி கருத்து தெரிவித்த வலது கம்யூனிஸ்டு தலைவர் டி.ராஜா, பா.ஜ.க., மஜ்லிஸ் கட்சி ஆகிய இருவருமே மதவெறியைத் தூண்டுவதாகக் கூறியிருக்கிறார். பாரத மாதா என்ற பார்ப்பன மதவாத தேசிய பிம்பம், சிறுபான்மை மதத்தினருக்கு மட்டும் எதிரானதல்ல. ஒடுக்கப்பட்ட சாதியினர், பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் அனைத்துக்கும், மிக முக்கியமாக உழைக்கும் வர்க்கத்துக்கும் எதிரானது. அவ்வாறிருக்க, பாரதமாதா என்ற கருத்தாக்கம் இசுலாமியர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை என்பது போலச் சித்தரிக்கும் பா.ஜ.க.-வின் நிலையை டி.ராஜாவின் கூற்று மறைமுகமாக அங்கீகரிக்கிறது. இதைத்தான் தமது வெற்றி என்று கூறுகிறார், அருண் ஜெட்லி.
பாரதிய ஜனதாவின் தேசிய செயற்குழு இது தொடர்பாக நிறைவேற்றியிருககும் தீர்மானத்தை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். “பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல மறுப்பது எங்கள் உரிமை என்று கூறுவதை ஏற்கவியலாது. நமது அரசியல் சட்டம் இந்தியாவைப் பாரதம் என்றும் சொல்கிறது. அந்த பாரதத்துக்கு வெற்றி என்று கூற மறுப்பது அரசியல் சட்டத்தை அவமதிப் பதாகும்… பாரதத்தை அவமதிக்கின்ற, அதன் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பலவீனப்படுத்துகின்ற எந்த ஒரு முயற்சியையும் பாரதிய ஜனதா கடுமையாக எதிர்க்கும்.”
மோகன் பகவத்
பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தை முன்வைத்து முசுலீம் எதிர்ப்பு இந்து தேசியவெறியைத் தூண்டிவிட முயலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்.
பாரத் மாதா கி ஜெய் என்று சொல்ல மறுப்பவன் அரசியல் சட்டத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான தேசத்துரோகி என்று அச்சுறுத்துகிறது இத்தீர்மானம். வாஜ்பாயி அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த சோலி சோரப்ஜி உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் பலரும் இத்தீர்மானம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்று கூறியிருக்கின்றனர்.
கேரள மாநிலத்தில் “யகோவாவின் சாட்சிகள் என்ற தீவிர கிறித்தவப் பிரிவைச் சார்ந்த மாணவிகள், தேசிய கீதம் பாட மறுத்ததற்காகப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு வழக்கில், “பேச்சுரிமை என்பது பேசாமல் இருக்கும் உரிமையையும் உள்ளடக்கியதுதான். தேசிய கீதம் பாடப்படும்போது மரியாதைக்காக அவர்கள் எழுந்து நின்றிருக்கிறார்கள். மற்றபடி, பாட மறுப்பது அவர்களது உரிமை” என்று 1986-இல் உச்சநீதி மன்ற நீதிபதி ஓ.சின்னப்பரெட்டி அளித்திருக்கும் தீர்ப்பினைச் சுட்டிக் காட்டி, பா.ஜ.க.-வின் தீர்மானம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று பல உச்ச நீதி மன்ற வழக்கறிஞர்கள் கண்டித்திருக்கின்றனர்.
வாரிஸ் பதான்
பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தைப் போட மறுத்ததற்காக மகாராஷ்டிரா சட்ட மன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மஜ்லிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பதான்.
“அப்படியானால் அரசியல் சட்டத்தைத் திருத்தி விட வேண்டியதுதான்” என்கிறார் பாபா ராம்தேவ். லவ் ஜிகாத், கோமாதா வழிபாடு, மாட்டுக்கறிக்கு தடை, சமஸ்கிருத திணிப்பு, சூரிய நமஸ்காரம் போன்றவற்றின் வரிசையில் இந்து தேசிய அடையாளத்தைத் திணிப்பது, மதிப்பிழந்து வரும் மோடி அரசின் மீதான மக்களின் வெறுப்பை வேறு பக்கம் திருப்பி விடுவது – இதுதான் இந்த பாரதமாதா பஜனையின் நோக்கம்.
மதிப்பிழந்து வரும் மோடி அரசுடன் பாரதமாதா பஜனையையும் ஒருங்கே மதிப்பிழக்க வைப்பதற்கான வாய்ப்பை மோடி அரசுக்கு எதிரான போராட்டங்கள் நமக்கு வழங்குகின்றன. ஐதராபாத் முதல் ஜே.என்.யு. வரை எந்த இடத்திலும் அவர்கள் எதிர்பார்த்த தேசவெறியை மக்கள் மத்தியில் உருவாக்க முடியவில்லை. இருப்பினும், பாரதமாதா என்ற சோளக்கொல்லை பொம்மையை ஆட்டினால், காங்கிரசும், வலது, இடது கம்யூனிஸ்டுகளும் பயந்து விடுவார்கள் என்று உறுதியாக நம்புகிறார் அருண் ஜெட்லி. அவருடைய நம்பிக்கையைப் பொய்யில்லை என்று இவர்கள் நிரூபிக்கிறார்கள்.
தேசம் என்பது சாமியா, மடிசார் மாமியா?
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், பூடான், பர்மா ஆகிய நாடுகளையும் கொஞ்சம் திபெத்தையும் உள்ளடக்கிய தெற்காசியாவின் வரைபடம், அதில் கையில் காவிக் கொடியுடன் ஒரு சிங்கத்தின் மீது ஒய்யாரமாக சாய்ந்து நிற்கின்ற, ஒல்லியான ஸ்மிருதி இரானி. இந்த ‘மாமியைத்தான் ‘பாரதமாதா என்கிறது ஆர்.எஸ்.எஸ்.
bharat-matha-french-goddessஇதே மாமிக்கு முதுகில் நாலு கைகளை ஒட்டவைத்து, அதில் ஆயுதங்களையும் கொடுத்தால் துர்க்கையாகி விடுவாள். கையில் வீணையைக் கொடுத்து உட்காரவைத்தால் சரசுவதியாகி விடுவாள். எழுப்பி நிற்க வைத்து, கையிலிருந்து காசு கொட்டவைத்தால் இலட்சுமியாவாள். நவராத்திரி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடம் போட்ட கதைதான்.
தேசத்தை ஆணாகவோ, பெண்ணாகவோ கற்பனையாக உருவகப்படுத்தும் இந்த மரபு ‘ஹிந்து மரபு அல்ல என்றும், இது ஒரு ஐரோப்பியக் கருத்தாக்கம் என்றும் விளக்கியிருக்கிறார் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபிப். அன்று பண்டைய ரோம் நகரம் மற்றும் ரோமானியப் பேரரசின் உருவகமாக இருந்தது ரோமா என்ற பெண் தெய்வம். கி.பி. முதல் நூற்றாண்டில் பிரிட்டிஷ் தீவுகளை வெற்றி கொண்ட ரோமானியப் பேரரசு, பிரித்தானியா என்ற பெண் தெய்வத்தை அங்கே உருவாக்கியது. கையில் திரிசூலத்துடன் சிங்கத்தின் மீது சாய்ந்து நிற்கிறாள் அந்தப் பெண். இர்ஃபான் ஹபீப் இந்த மரபைச் சுட்டிக் காட்டுகிறார்.
நெடுங்காலத்துக்குப் பின்னர், 18-ம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, தேசியம் என்ற கருத்தாக்கம் பிறக்க வழிவகுக்கிறது. அதுவரை ஒரு மன்னர் குலத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியங்களில் வாழ்பவர்களாகவோ, கத்தோலிக்க, புரோட்டெஸ்டென்ட் மதப்பிரிவுகளைச் சேர்ந்தவர்களாகவோ தங்களை அடையாளப்படுத்தி வந்த மக்கள், அவற்றைப் பின்னுக்குத் தள்ளி தேசம் என்ற புதிய அடையாளத்தினுள் வருகிறார்கள்.
bharat-matha-europeமன்னராட்சியுடன் திருச்சபையின் அதிகாரத்தையும் தூக்கியெறிகிறது பிரெஞ்சுப் புரட்சி. அப்போது பிரெஞ்சு தேசியத்தின் உருவகமானாள் பகுத்தறிவுத் தேவதை (Goddess of Reason). இந்த தேவதையின் கையில் ஆயுதமும் இல்லை, மத அடையாளமும் இல்லை. இதே போல ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளும் தேசத்தைப் பெண்ணாக (தெய்வமாக அல்ல) உருவகப்படுத்தின. இந்த எடுத்துக்காட்டுகள், உருவகங்களை அவற்றின் வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்ப்பதற்கு நமக்கு உதவும்.
நமது நாட்டில் பாரதமாதா பிறந்த இடம் வங்கம். ஆங்கிலக் கல்விதான் இந்தியாவின் மேட்டுக்குடி அறிவுத்துறையினருக்கு தேசியம் என்ற கருத்தாக்கத்தையும், ஐரோப்பிய வரலாற்றையும் அறிமுகப்படுத்துகிறது என்பதை நாம் இங்கே நினைவில்கொள்ள வேண்டும். இசுலாமிய எதிர்ப்பு மற்றும் இந்து தேசியத்தின் கருவடிவமான பங்கிம் சந்திரரின் ‘ஆனந்தமடம் என்ற வங்காள நாவலில், பத்து கைகளுடன் பாரதமாதா பளிங்குக் கோயிலில் வீற்றிருக்கிறாள். சில பத்தாண்டுகளுக்குப் பின் தாகூரின் உறவினரான ஓவியர் அபநீந்திரநாத் தாகூர் வரைந்த ஓவியமோ, நான்கு கைகள் கொண்ட இளம் துறவியாக பாரதமாதாவைச் சித்தரிக்கிறது.
பின்னர் வந்த பாரதமாதா, பிரித்தானிய மாதாவைப் பின்பற்றி சிங்கத்தின் மீதேறுகிறாள். மாதாவின் கையில் காவிக் கொடி அல்லது தேசியக் கொடி செருகப்படுகிறது. தென்னிந்தியாவில் பல இந்துக் கடவுளர்களுக்கு உயிர் கொடுத்தவரான ஓவியர் ரவிவர்மா, பாரதமாதாவை மடிசார் மாமியாகவே சித்தரித்திருக்கிறார்.
பாரதமாதாவின் “பார்ப்பன தோற்றம் மட்டுமல்ல, இந்தியாவைப் “பாரத வர்ஷம் (வர்ஷம் – நிலப்பகுதி) என்று குறிப்பிடுவதும்கூட ஆரிய வேத-புராண மரபின் அடிப்படையிலானதுதான். இவையெல்லாம் பார்ப்பன- உயர் வருணத்தினர் இந்தியாவைத் தங்கள் உடைமையாகக் கருதும் மனோபாவத்திலிருந்து பிறந்தவை. வேதங்களுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மாக்ஸ்முல்லர் என்ற ஐரோப்பிய அறிஞர் ‘அக்மார்க் ஆரிய முத்திரை வழங்கியதன் விளைவாக, பிராமணோத்தமர்களும் மேல்வருணத்தாரும் பெற்ற மனக்கிளர்ச்சிதான், பிரித்தானிய மாதாவின் வடிவத்தில் பாரதமாதாவின் கெட்-அப்பை மாற்றுவதற்கான உந்துதுலை (Inspiration) வழங்கியிருக்கும்.
விடுதலைப் போராட்ட வீரர்களில் இந்து மதத்தினருக்கு இந்த முழக்கம் உறுத்தலாகத் தெரிந்திருக்கவில்லை. அதே நேரத்தில், மதச் சாயல் கொண்ட இந்த மாதாவும் வந்தேமாதரம் முழக்கமும் முஸ்லீம்களைத் தனிமைப்படுத்தும் என்ற விமரிசனமும் அன்றே கூறப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், மனோன்மணியம் சுந்தரனார் ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பன மரபுக்கு எதிராகத் தமிழைத் தாயாக உருவகப்படுத்தி நிறுத்துகிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் இங்கே நாம் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுகிறோம். நாடாளுமன்றத்தில் குண்டு வீசிய பகத் சிங், “பாரத் மாதா கி ஜெய்” என்றோ, “வந்தே மாதரம்” என்றோ முழங்கவில்லை. “இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்குகிறான். மதச் சாயல்கள் இல்லாத, அந்தப் புரட்சி முழக்கத்தை (1921-ல்) வடித்த கவிஞனின் பெயர் – மவுலானா ஹஸ்ரத் மொஹானி.
– மருதையன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக