செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பெண்ணாகரத்தில் அன்புமணி, காங்கிரஸில் வழக்கம்போல இழுபறி

சட்டசபை தேர்தலை சந்திக்க எல்லா கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிப்பு தீவிரமடைந்துள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் உளுந்துார்பேட்டையிலும் பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி, பென்னாகரத்திலும் போட்டியிடுகின்றனர். வழக்கம் போல காங்கிரசில் மட்டும் காத்திருப்பு படலம் கடைசி வரை நீடிக்கும் என தெரிகிறது.
* கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கடலுார் மாவட்டம் விருத்தாசலம்
தொகுதியிலும்; 2011ல் விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியிலும் விஜயகாந்த் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.   விருத்தாசலம் மற்றும் ரிஷிவந்தியம் இரண்டையும் சிங்கப்பூர் ரேஞ்சிற்கு பாடுபட்டு உயர்த்தி விட்டமையால், தற்போது உளுந்துார்போட்டை தொகுதிக்கு தாவுகிறார் போலும்...
இந்த தேர்தலில் முதல்வர் வேட்பாளராக, உளுந்துார்போட்டை தொகுதியில் அவர் போட்டியிடுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது* பா.ம.க., சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி,தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போட்டியிடுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இவர் தர்மபுரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு தற்போது எம்.பி.,யாக இருக்கிறார். தற்போது அந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம் சட்டசபைதொகுதியில் போட்டியிடுகிறார்* ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது * ம.ந.கூ.,வில் சேர்ந்துள்ள த.மா.கா.,விலும் வேட்பாளர் தேர்வு இறுதி வடிவம் பெற்றுள்ளது. பட்டியல் நாளை அறிவிக்கப்படும் என அக்கட்சித் தலைவர் வாசன் நேற்று தெரிவித்துள்ளார். ஆனால் அவர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியும் 41 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை இன்று இறுதி செய்யவுள்ளது. அதற்காக டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா வீட்டில் இன்று மாலையில் 13 பேர் கொண்ட மத்திய தேர்தல் குழு கூடுகிறது. அக்கூட்டத்தில் தொகுதிக்கு ஒருவர் வீதம் கொண்ட பட்டியலை சோனியா தேர்வு செய்த பின் நாளை இரவுக்குள் பட்டியல் வெளியிடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அக்கட்சியில், இளங்கோவன், சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பல கோஷ்டிகள் இருப்பதாலும் அவர்களது ஆதரவாளர்களுக்கு 'சீட்' வழங்கப்பட வேண்டும் என்பதாலும், நாளை பட்டியல் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே வழக்கம்போல் வேட்புமனு தாக்கல் கடைசி நாள் வரைக்கும் காங்கிரசார் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என கூறப்படுகிறது.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக