வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கொடைநாட்டிலும்,சிறுதாவூரிலும் ஓய்வெடுத்து ஓய்வெடுத்து......கட்சிக்காரங்க முகமெல்லாம் மறந்து போச்சு....இதாங்க பிரச்னை!

சசிகலா கை ஓங்குகிறதா அ.தி.மு.க.,வில் சலசலப்பு அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், சசிகலா குடும்பத்தினர் ஆதரவு பெற்றவர்கள், அதிக அளவில் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளர் மாற்றத்திலும், அவர்களின் கை ஓங்கியிருப்பது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, சாதாரண தொண்டன் உயர் நிலைக்கு வருவதும், உயர் நிலையில் இருப்பவர், ஒரே நாளில் சாதாரண நிலைக்கு தள்ளப்படுவதும் சாதாரணம். யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இம்முறை ஏராளமானோர், சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, மனு கொடுத்தனர். 'சீட்' வாங்கி தருவதாகக் கூறி, ஏராளமானோர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர்.  
இதுதொடர்பாக, கட்சி தலைமைக்கு புகாரும் பறந்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை பங்களாவில், வசூலில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைது செய்தனர்.அதில் ஈடுபட்டவர்கள், கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அதேபோல், 'சீட்' விவகாரத்தில், சில அமைச்சர்கள் ஓரம்கட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கட்சிக்காக உழைத்த நேர்மையானவர்களுக்கு, வேட்பாளர் வாய்ப்பு கிடைக்கும் என, கட்சியினர் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், 4ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், சசிகலா ஆதரவு பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதை பார்த்த கட்சியினர், கடும் அதிர்ச்சி அடைந்தனர். வழக்குகளில் சிக்கியவர்கள், தகுதியே இல்லாதவர்களுக்கு எல்லாம், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், சசிகலா உறவினர்களுடன் தொடர்பில்லாத கட்சியினருக்கே, ஜெயலலிதாவாய்ப்பு வழங்கினார். இது, சசிகலாவின் உறவினர்களான திவாகரன், மகாதேவன் ஆகியோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக, அவர்கள் சசிகலாவிடம் பேசி, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிலரை மாற்றினர்.அதன் விளைவாகவே, வேட்பாளர் திருத்தப் பட்டியல் வெளியானது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில், பெரிய அளவில் மாற்றம் செய்யும் முயற்சியும் நடந்தது. அதன் மூலமே, ஓ.எஸ்.மணியன், எஸ்.காமராஜ், பவுன்ராஜ் போன்றோர் இடம் பிடித்தனர்.
தற்போது, எல்லா வேட்பாளர்கள் மீதும், தலைமைக்கு, ஏராளமான புகார்கள் குவிகின்றன. அவற்றில் தங்களின் ஆதரவாளர்கள் மீது வரும் புகார்களை, ஜெயலலிதாவுக்கு தெரியப் படுத்துவதில்லை. ஆதரவாளர்களாக இல்லாதவர்கள் மீது புகார் வந்தால், உடனடியாக அவரது பார்வைக்கு கொண்டு சென்று விடுகின்றனர் என, கட்சியினர் புலம்புகின்றனர்.

- நமது சிறப்பு நிருபர் -  தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக