திங்கள், 18 ஏப்ரல், 2016

தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்டதற்காக கைது ! தூத்துக்குடி

வினவு.com :தேர்தல் பணிகள் கண்காணிப்பு பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் புகாரின் போரில் தூத்துக்குடியில் தேர்தல் ஆணையத்தை விமர்சனத்திற்குள்ளாக்கும் விதத்தில் லித்தோ போஸ்டர் ஒட்டிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவாளர் தோழர் குமார் என்பவர் 15-04-2016 அன்று காலை 5-10 மணியளவில் கைது செய்யபட்டுள்ளார்.
  • நல்லவர்களை தேர்வு செய்யச் சொல்லும் தேர்தல் ஆணையமே! நல்லவர்கள் யார்? நல்ல கட்சி எது? சொல்ல முடியுமா?
  • வேட்பாளர்கள் எல்லோரும் அயோக்கியர்கள் என்று தெரியும்; யாருக்கு தேவை விழிப்புணர்வு? தேர்தல் ஆணையத்திற்கா? மக்களுக்கா?
  • நேற்றுவரை இலஞ்சத்தில் ஊறித்திளைத்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகள்! பறக்கும் படை! இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியுமா?
  • தேர்தலுக்காக கோடி கோடியாய் அமைச்சர்கள் குவித்து வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்யமுடியுமா?
  • இந்த வாசகங்கள் அடங்கிய சுவரொட்டியை தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரி கார்னரில் 15-04-2016 காலை சுமார் 5.10 மணியளவில் ஒட்டிக் கொண்டிருந்த தோழர் குமாரை பறக்கும் படையைச் சேர்ந்த தாசில்தார் ராமசுப்பு குழுவினர் காவல்துறையுடன் வந்து போஸ்டர் ஒட்ட விடாமல் தடுத்துள்ளனர்.
    அவர்கள் நமது தோழரிடம் “என்ன போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறீர்கள்” எனக் கேட்கவும் தோழர் குமார், “தேர்தல் ஆணையம் செயல்பாடு பற்றி எமது அமைப்பின் போஸ்டர்” என்று கூறியுள்ளார்.
    போஸ்டரை படித்து பார்த்த பறக்கும் படையினர் “நீங்கள் ஏன் இப்படி வாசகங்கள் அடங்கிய ஒட்டுகிறீர்கள்” என்று மிரட்டி உள்ளனர்.
    அதற்கு நமது தோழர், “ஆமாம், உண்மையைத்தான் நாங்கள் எழுதியுள்ளோம். எங்கள் கருத்தை நாங்கள் மக்களிடம் கொண்டு செல்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது. இதில் பொய் இருந்தால் எந்த வகையில் என்று கூற முடியுமா?” எனக் கேட்கவும்,
    தேர்தல் பணம்
    நேற்றுவரை இலஞ்சத்தில் ஊறித்திளைத்தவர்கள் தான் தேர்தல் அதிகாரிகள்! பறக்கும் படை! இவர்களால் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியுமா? (கோப்புப் படம்)
    பறக்கும் படையினர் “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எங்களுக்கென்று மேலதிகாரிகள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் சொற்படிதான் நடக்க வேண்டி இருக்கும், தேர்தல் விதிகள் அமலில் இருக்கும்போது இது மாதிரியான போஸ்டர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் நீங்கள் மேற்கொண்டு போஸ்டர்களை ஒட்டக் கூடாது, இங்கேயே இருங்கள். நாங்கள் மேலதிகாரியிடம் கேட்டுவிட்டு என்ன செய்யலாம் என்று சொல்கிறோம்” எனக் கூறிவிட்டு தாசில்தார் செல்போனில் சுவரொட்டியை படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் அனுப்பியுள்ளார்.
    15 நிமிடத்திற்கும் மேலாக யார் யாருக்கோ செல்போனில் பேசியுள்ளார். பின்னர் நமது தோழரிடம், “தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சென்று விசாரிக்க வேண்டும்” என்று நைச்சியமாக பேசி கூட்டிச்சென்றுள்ளனர்.
    வடபாகம் காவல் நிலையத்திற்கு கூட்டிச்சென்ற பறக்கும் படையினர் அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் முத்து என்பவரிடம் தோழரை ஒப்படைத்துள்ளனர். பின்னர் தேர்தல் அதிகாரியான தாசில்தார் ராமசுப்பு கொடுத்த எழுத்துமூல புகாரின் பேரில் தோழர் மீது குற்ற வழக்கு எண். 397/2016 பிரிவுகள், 127A (1) RP Act (Representation of people act 1951) 3 of TNPPOPD Act (Tamilnadu Prevention of Public open places disfigurement Act) மற்றும் 7(1) CLA Act (Criminal law amentment Act)-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் முற்பகல் 12.10-க்கு ஆஜர்படுத்தினார்கள்.
    கைது செய்யப்பட்ட தோழர் குமார் உடனே ஜாமினில் வரக்கூடாது என்பதற்காக உடனடியாக பிணையில் வர முடியாத 7(1) CLA Act வேண்டுமென்று தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றும் போஸ்டர் ஒட்ட பயன்படுத்தியதாக PRPC தூத்துக்குடி மாவட்டத் தலைவரும் வழக்கறிஞருமான அரிராகவனின் இருசக்கர வாகனத்தையும் இந்ந வழக்கில் சேர்த்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். தோழரை பிணையில் எடுப்பதற்கு PRPC வழக்கறிஞர்கள் ஆஜராகி பிணை மனு தாக்கல் செய்துள்ளனர்.
    தேர்தல் கண்காணிப்பு பறக்கும் படை அதிகாரி தாசில்தார் ராமசுப்பு அவரது புகார் மனுவில், இந்த போஸ்டரை படிக்கும் விஷமிகள் அரசு சொத்துக்களை சேதப்படுத்தவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த ஏதுவாகவும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பொதுமக்களை தூண்டும் விதமாக வாசகங்கள் அடங்கிய போஸ்டர் என்று குறிப்பிட்டுள்ளார்.
    கடந்தமுறை சட்டமன்ற தேர்தலின் போது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஆயிரக்கணக்கான வழக்குகளையும் இந்த தேர்தலுக்காக நூற்றுகணக்கான வழக்குகளையும் தற்போது வரை பதிவு செய்துவரும் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு ஒருவரை கூட கைது செய்யவில்லை. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் அரசியல்வாதிகள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகள் எல்லாம் பிணையில் வரக்கூடிய சாதாரண வழக்குகளாகும். ஆனால் மக்கள் இயக்கங்கள் புரட்சிக்கர அமைப்பை சேர்ந்த தோழர்களின் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் உடனடியாக பிணையில் வரமுடியாத சில பிரிவுகளையும் சேர்த்தே பொய்யாக பதிவுசெய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    நமது சுவரொட்டியை காவல் துறையினரும் அரசு மற்றும் நீதித்துறை அலுவலர்களும் அவருடைய பணிக்கு அப்பாற்பட்டு ஆதரித்து தோழர் குமாரிடமும் PRPC வழக்கறிஞர்களிடமும் பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் வழமையாக கூறுவதுபோல நாங்கள் அரசுக்கு கட்டுப்பட்டவர்கள் அரசு உத்தரவுபடிதான் நடந்துகொள்ள முடியுமென்று கூறியுள்ளனர்.
    100 சதவீதம் மக்கள் ஓட்டுபோட அரசு கருத்து சொல்லும்போது அதில் மக்கள் கருத்து சொல்லக்கூடாதா? மாணவர்களையும், மகளிர் சுயஉதவி குழுக்களையும் பேனர், போஸ்டர், பிட்நோட்டிஸ் என்று சகலத்தையும் கட்டாய ஓட்டு பதிவுக்கு பயன்படுத்தும்போது மக்கள் இயக்கங்கள் அதில் கருத்து சொல்ல போஸ்டர், பிட் நோட்டீஸ்களை பயன்படுத்தக் கூடாதா? அரசியல் வாதிகளும், அதிகாரிகளும் ஊழல் வாதிகள் ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தலில் இவர்களின் தேர்தல் விதிக்கு விரோதமான செயல்களை கட்டுப்படுத்த நேர்மையாகவும், நம்பிக்கையாகவும் நடவடிக்கை எடுக்கிறது என்று படித்தவர் முதல் பாமரர் வரை நம்பவைக்கப்படுவதை நமது இந்த போஸ்டர் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறது. இதற்கு பொதுமக்களிடம் இருந்து வரும் தொலைபேசி வாயிலான பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் சாட்சியாகும்.
    தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்று அரசு பொய்வழக்கு போட்டு மிரட்டுவதை போல தேர்தல் ஆணையமும் இயக்கங்கள் அமைப்புகள் மீது அரசாங்கம் போலவே கையாளுகிறது. தமிழக அரசு பாழடைந்த ஓட்டை உடைசல் பஸ்களுக்கு 1 to 1, Point to point, EEE மற்றும் Ultra Deluxe என்று பெயர் வைப்பதை போல இந்திய அரசும் லஞ்சபேர்வழிகள், ஊழல் அதிகாரிகள் போன்றோரை வைத்து தேர்தல் ஆணையம் என்று பெயர் வைத்து தேர்தல் அதிகாரிகளை நேர்மையானவர்கள் என்று நம்ப வைக்க அரும்பாடுபடுகிறது.
    வியாபாரிகள், பொதுமக்கள் பல்வேறு கட்சி தலைவர்கள், இயக்கங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகள், அலுவலர்களின் பாரபட்சமான செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றனர். இப்படிப்பட்ட செய்திகள் நாளேடுகளில் பரவலாக காணக்கிடைக்கின்றன. தேர்தல் ஆணையத்தை இதுமாதிரி விமர்சனம், கேள்வி கேட்பவர்களை எல்லாம் சிறையில் தள்ளிவிட்டு அமைதியான முறையில் தேர்தல் நடந்ததாகவும் ஜனநாயகத்தை மக்கள் மதித்து அதிகமான சதவீதம் ஓட்டு பதிவு நடந்ததாக பொதுமக்களை நம்ப வைப்பதற்காக மேற்கண்ட அடக்குமுறைகளை அரசு கையாளுகிறது.
    இதிலிருந்தே தெரியவில்லையா! யாருக்காக தேர்தல்? யாருக்காக தேர்தல் ஆணையம்? இந்த நடைமுறையில் எங்கே இருக்கிறது ஜனநாயகம்? எங்கே இருக்கிறது கருத்துரிமை?
    தேர்தல் ஆணையத்தின் போலி ஜனநாயக வெற்று கூச்சலை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.
    தகவல்
    மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
    தூத்துக்குடி மாவட்டக்கிளை

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக