சனி, 30 ஏப்ரல், 2016

மதமாற்றத்தால் தலித்துகள் பலவீனப்படுகிறார்கள்....!' -கொந்தளித்த திருமா

விகடன்.com ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறும் தலித்துகளால் எண்ணிக்கைதான் குறைகிறது. அதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை' என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்  திருமாவளவனின் கருத்து, அரசியல் அரங்கை அதிர வைத்திருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர், பெளத்த மதத்திற்கு மாறிய அறுபதாம் ஆண்டின் தொடக்கம் இது.
இந்த சிறப்பு நாளைப் பற்றிப் பேட்டியளித்த திருமாவளவன், " அம்பேத்கர் மதம் மாறிய அறுபதாம் ஆண்டு இது. தலித்துகள் மதம் மாறுவதால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சிறுபான்மை சமூகக் குழுக்களாக அவர்கள் துண்டாடப்படுகிறார்கள். இதை நாங்கள் விரும்பவில்லை. சாதி மறுப்பு என்பது அம்பேத்கரின் முக்கியமான லட்சியம். தலித்துகளுக்கு இழைக்கப்படும் அநீதியில் இருந்து தப்பிக்க, சாதி மறுப்பு மிக முக்கியமானதுதான். ஆனால், இது மட்டுமே போதுமானதாக இல்லை.
மதம் மாறுவது என்பது தனிநபரின் சுதந்திரத்திற்கு உள்பட்டது. மதமாற்றத் தடைச் சட்டம் என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. ஆர்.எஸ்.எஸ்ஸின் முக்கியக் கொள்கையான இதில் எங்களுக்கு உடன்பாடில்லை. தலித்துகளின் பிரச்னைகளில் அ.தி.மு.க எந்தக் கருத்தையும் சொல்வது கிடையாது. அழுத்தம் வரும்போது மட்டும்தான் தி.மு.க தலித்துகளுக்கு ஆதரவாகப் பேசுகிறது" எனக் கொந்தளித்தார் அவர்.

' மதம் மாறுவதால் தலித்துகள் பலவீனப்படுகிறார்கள்' என்ற திருமாவின் கூற்று, சிறுபான்மை மதத்தினரின் உணர்வுகளுக்கு எதிராக இல்லையா? என்ற கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் கேட்டோம்.
" அம்பேத்கர் மதம் மாறுவதற்காகச் சொல்லப்பட்ட காரணங்கள், இந்த அறுபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு ஈடேறியிருக்கிறது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது. இந்து மதத்தில் தலித்துகள் நீடிப்பதற்கான காரணங்கள் குறைந்து கொண்டே வருகிறது. அந்தளவுக்கு தலித்துகள் மீதான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆணவக் கொலைகள் என்ற புதிய வடிவம், அம்பேத்கர் கடுமையாக எதிர்த்த அகமண முறையை உறுதிப்படுத்துவதற்கு பெரிய ஆயுதமாக சாதியவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது. புதிய சட்டங்கள் இயற்றப்பட்டாலும் புது வகையான வன்கொடுமைகள் பெருகிக் கொண்டே போகின்றன. இந்து மதத்தை சீர்திருத்தி, அதற்குள் இருக்கும் தீண்டாமையைக் களைவதற்கு மகாத்மா காந்தியடிகள் முயற்சித்தது போல, முயற்சி மேற்கொள்ள எவரும் இல்லை.

சாதியை ஒழிப்பதற்கு தந்தை பெரியார் போராடியதைப் போல, போராடுவதற்கு இன்று எவரும் இல்லை.எனவே, தலித்துகள் ஒவ்வொரு நாளும் சாதிய சிறைச்சாலையின் கொடுமைக்கு ஆளாகிறார்கள். இதில் இருந்து விடுபட்டு வெளியேறிச் சென்று, இன்னொரு மதத்தைத் தழுவுவதன் மூலம் அவர்களுக்கு பொருளாதார பலமோ, மனரீதியான பலமோ கிடைக்குமா? என்றால், அதையும் உறுதியாகக் கூற முடியவில்லை. கிறிஸ்துவ மதத்திற்கு மாறிச் சென்ற தலித்துகள் அங்கேயும் தீண்டாதவர்களாகத்தான் நடத்தப்படுகிறார்கள் என்பதை தலித் கிறிஸ்துவர்கள் படும் துயரங்களே எடுத்துக்காட்டுகின்றன. இப்போது எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட, நமது நாடாளுமன்ற ஜனநாயக முறையில், தலித்துகளுக்கு இருக்கும் ஒரே பலம் எண்ணிக்கை பலம்தான். அந்த பலத்தைக் கொண்டுதான் அவர்கள் ஏதேனும் குறைந்த அளவாவது அதிகாரத்தை கைப்பற்ற முடியும். அந்த எண்ணிக்கை பலத்தை குறைப்பதாக, மதமாற்றம் இருந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையைத்தான் தலைவர் திருமா வெளிப்படுத்தியிருக்கிறார்.

தலித் கிறிஸ்துவர்களை தலித்துகளாக அங்கீகரித்து அவர்களுக்கு இடஒதுக்கீடு முதலான சலுகைகளை வழங்குவதோடு, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அவர்களை அட்டவணைப் பிரிவின்கீழ் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். அதைப் போலவே பிற மதங்களுக்கு மாறிச் சென்றிருக்கும் தலித்துகளை அட்டவணைப் பிரிவின்கீழ் உள்ளடக்க வேண்டும். ஒருவர்,  தான் எந்த மதத்தை தழுவுவது என்பது அவரது அடிப்படை உரிமை. அப்படி ஒரு மதத்தைத் தழுவியவருக்கு இடஒதுக்கீடு முதலான சலுகைகளோ, வன்கொடுமை தடுப்புச் சட்ட பாதுகாப்போ கிடையாது என்று சொல்வது மத சுதந்திரத்தை மறுப்பதாகும். எனவே இந்திய அரசு,  நீண்டகாலமாக தலித் கிறிஸ்துவர்கள் முன்வைத்து வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வர வேண்டும். எந்த மதத்தில் இருந்தாலும், தலித்துகள் சாதியக் கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அவர்கள் அனைவரையும் அட்டவணைப் பிரிவின்கீழ் கணக்கெடுப்பு செய்து, அந்த மக்களின் தொகைக்கு ஏற்ப, இடஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். இதுதான் தலைவர் திருமா முன்வைக்கும் மிக முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது" என்றவரிடம்,

' மதமாற்றத்தால் பலவீனம் என்பது, கிறிஸ்துவ மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தாதா? என்றோம்.
" நிச்சயமாக அப்படிக் கிடையாது. மதம் மாறிய கிறிஸ்தவர்களையும் தலித்துகளாக அங்கீகரிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். உச்சநீதிமன்றம் மற்றும் சச்சார் கமிட்டி ஆகியவை பரிந்துரைத்த கோரிக்கைகளை, கடந்த காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. தற்போதைய அரசு இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் பிரதான கோரிக்கையாக இருக்கிறது" என்றார் ரவிக்குமார்.

மதமாற்றத்தால் தலித்துகள் படும் துயரங்கள் குறித்து திருமா முன்வைக்கும் கோரிக்கை மிக நுட்பமானது. அது அவர்களின் எதிர்காலம் குறித்த அச்சத்திற்கானது. 'அதிகாரத்தைப் பெறாமல் எதையும் சாதித்துவிட முடியாது' என்பதை வலுவாகவே முன் நிறுத்துகிறார் திருமா.

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக