ஞாயிறு, 13 மார்ச், 2016

எந்த கவலையும் இல்லாத விஜய் மல்லியா (MP) நாடு திரும்ப மாட்டானாம்.... 9000 கோடி மாயம்

; இந்தியாவுக்கு திரும்ப இது சரியான நேரம் கிடையாது என்று தொழில் அதிபர் விஜய் மல்லையா கூறினார். பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா எம்.பி. பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல முன்னணி வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தவில்லை. வங்கியின் விதிமுறைகளை மீறி அதிக அளவில் விஜய் மல்லையாவுக்கு வங்கி அதிகாரிகளும் கடன் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. வங்கி கடனை திரும்பச் செலுத்தாதது குறித்து வங்கிகள் அளித்த புகாரின்பேரில், கிங் பிஷர் விமான நிறுவன இயக்குனர் விஜய் மல்லையா, அந்நிறுவனத்தின் முன்னாள் நிதி அதிகாரி ரகுநாதன் மற்றும் பெயர் விவரம் வெளியிடப்படாத இந்திய தொழில் வளர்ச்சி வங்கி(ஐ.டி.பி.ஐ) அதிகாரிகள் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் விஜய் மல்லையா மீதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 9–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 2–ந்தேதியே நாட்டைவிட்டு வெளியேறி இங்கிலாந்துக்கு சென்றுவிட்டார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வன்மையாக கண்டித்தன.

இந்நிலையில் இங்கிலாந்தில் இருந்தவாறு பத்திரிகைக்கு இ-மெயிலில் பேட்டி அளித்து உள்ள விஜய் மல்லையா, அடிப்படையில் நான் ஒரு இந்தியன். இந்திய நாடு தான் எனக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்தது. இந்தியா தான் விஜய் மல்லையாவை உருவாக்கியது. எனவே இந்தியா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால் அதற்கான சரியான நேரம் இது அல்ல என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் நிரபராதி என என்னை நிரூபிக்க தற்போது அங்கு சரியான சந்தர்ப்பம் கிடைக்குமா? என்று சொல்ல முடியாது. 

எனவே இந்தியாவுக்கு நான் இப்போது திரும்ப வாய்ப்பு இல்லை. ஆனால் கண்டிப்பாக நேரம் வரும் போது நான் அங்கு செல்வேன். என்னை குற்றவாளி என முத்திரை குத்தி விட்டனர். தொழிலில் லாபம் அல்லது நஷ்டம் இருக்கும் என மக்களுக்கு தெரியும். இதனை வங்கிகளும் உணர்ந்தே எனக்கு கடன் வழங்கி உள்ளது. கடன் வாங்கியது என்னுடைய தொழில் சார்ந்த விஷயம். நான் வெளிப்படையாக பேசுபவன். ஆனால் தற்போது அமைதியாக உள்ளேன். ஏனெனில் என்னுடைய பதிலையே எனக்கு எதிராக திருப்பிவிட வாய்ப்பு உள்ளது. 

எனவே என்னை வில்லனாக ஆக்க முயற்சி செய்யாதீர்கள். நான் வெளிநாடுகளுக்கு செல்வது இது முதல் முறையல்ல. ஆனால் ஊடகங்கள் என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன. நான் வெளிப்படையாகவே வாழ விரும்புகிறேன். மறைந்து இருக்க ஒருபோதும் நினைத்தது இல்லை. ஆனால் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ தற்போது கட்டாயப்படுத்தப்படுகிறேன் என்று கூறிஉள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஊடகங்கள் என்னை தேடி அலையும் விதம் வேதனை அளிக்கிறது என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக