ஞாயிறு, 27 மார்ச், 2016

உத்தரகாண்டில் ஜனாதிபதி (பாஜக) ஆட்சி: ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கண்டனம்!

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது, ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஹரிஷ் ராவத் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். 70 உறுப்பினர்கள் கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 உறுப்பினர்களும், பா.ஜ.க.வுக்கு 28 உறுப்பினர்களும் உள்ளனர். மேலும், முற்போக்கு ஜனநாயக முன்னணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும் காங்கிரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.இந்த காவி குண்டர்கள் குதிரையின் காலையும் ....ஜனநாயகத்தின் காலையும் உடைத்து...
ஆளும் காங்கிரஸ் கட்சியில் இருந்து 9 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், பா.ஜ.க.வுடன் சேர்ந்து அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால், முதல்வர் ஹரிஷ் ராவத் நாளை (திங்கட்கிழமை) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கே.கே.பால் உத்தரவிட்டார்.

இதனிடையே ஆட்சியை தக்கவைக்க எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் ஹரிஷ் ராவத் ஈடுபடுவதாக ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தை காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., ஒருவர் நேற்று வெளியிட்டார். இதையறிந்த பா.ஜ.க.வினர், முதல்வர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதால் அவர் அந்த பதவியில் இருக்கும் தகுதியை இழந்து விட்டார் என குற்றம்சாட்டினர்.

மேலும், மாநில அரசை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் உடனடியாக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உத்தரகாண்டில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் உத்தரகாண்ட் கவர்னர் மாநில அரசின் தற்போதைய நிலை குறித்து அனுப்பிய அறிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இன்று அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ் அரசு சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர இருந்த நிலையில், புதிய திருப்பமாக அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. கவர்னர் அறிக்கையை அடிப்படையாக கொண்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

இதுதொடர்பாக, இன்று பிற்பகல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, ''இது ஜனநாயகப் படுகொலையாகும். ஜனநாயக அமைப்பின் மீது பா.ஜ.க.,வுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே மத்திய அரசின் இந்த முடிவு சுட்டிக் காட்டுகிறது" என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதேபோல், கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான அம்பிகா சோனி, ''இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. உத்தரகாண்ட் விவகாரத்தில் ஒவ்வொரு படிநிலையிலும் அரசியலமைப்பு சட்டத்தின் நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது.

சிறிய மாநிலங்களில் நடைபெற்றுவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை ஜனநாயகத்துக்கு புறம்பாகவும், அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாகவும் கவிழ்ப்பதே மத்திய அரசின் உண்மையான நோக்கமாக உள்ளது. முதலமைச்சர் ஹரீஷ் ராவத்துக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், நாளை (திங்கட்கிழமை) அவர் சட்டசபையில் தனது ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை நிரூபித்திருப்பார்" என தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக