திங்கள், 14 மார்ச், 2016

ஆள்மாறாட்டத்தால் சிறுவனை கொடூரமாக தாக்கி நடுரோட்டில் வீசிய போலீஸார்

துரைப்பாக்கத்தில் ஆள்மாறாட்டத்தால் சிறுவனை கொடூரமாக தாக்கி நடுரோட்டில் வீசிய போலீஸார்: நடவடிக்கை கோரி ஆணையரிடம் மனு
துரைப்பாக்கத்தில் ஆள்மாறாட்டத்தில் தவறுதலாக ஒரு சிறுவனை பிடித்துச் சென்ற போலீஸார் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதை உயரதிகாரி களிடம் தெரிவிக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது தாய் பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த வின்சென்ட் சுமதி தம்பதியின் 3-வது மகன் முகேஷ் (17). சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வீட்டில் முகேஷ் தூங்கிக்கொண்டிருந்தார்.
நள்ளிரவு 11 மணி அளவில் அங்கு வந்த போலீஸார், வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த முகேஷை அடித்து உதைத்து காருக்குள் போட்டுக்கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதில் அவரது தலை, முகம் என உடம்பு முழுவதும் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
பிறகு, ‘நாம் தேடிவந்தது இவன் அல்ல’ என்று பேசிக்கொண்ட போலீஸார், முகேஷை துரைப்பாக்கம் அருகே சாலையிலேயே வீசிவிட்டு சென்றுள்ளனர். சாலையில் கிடந்தவரை அருகே இருந்தவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்து காப்பாற்றி, அவரது வீட்டில் கொண்டுவந்து விட்டுள்ளனர்.
காயம் இருந்ததால் முகேஷை ராயப் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து வந்துள்ளனர். ‘போலீஸ் அடித்த தால்தான் காயம் ஏற்பட்டது என்று கூறக்கூடாது’ என அங்கு புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீஸாரும் அவர்களை வற்புறுத்தியுள்ளனர்.
மிரட்டல்
இதற்கிடையில் வின்சென்ட்டின் செல் போன் எண்ணுக்கு பேசிய ஒரு போலீஸ் காரர், ‘ஆள்மாறாட்டத்தால் தெரியாமல் நடந்து விட்டது. மேல் அதிகாரிகளிடம் செல்ல வேண் டாம்’ என்று கூறியிருக்கிறார். வேளச்சேரி காவல் நிலையத்தில் இருந்து பேசிய ஒரு போலீஸ்காரர், ‘சம்பவம் குறித்து பிரச்சினை கிளப்பினால், முகேஷ் மீது பல வழக்குகள் தொடருவோம்’ என்று மிரட்டியிருக்கிறார்.
இந்நிலையில், முகேஷை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் சுமதி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.  தமிழ்.ஹிந்து.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக