வெள்ளி, 25 மார்ச், 2016

சிதம்பரம் பிரஷர்....இளங்கோவன் டாப் கியர்.....ஜாலி டைம் ஸ்டார்ட்!

விகடன்.com :2016 சட்டமன்றத் தேர்தலை முன்னெடுக்கப்போவது இளங்கோவன் மட்டும்தான். அவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். நீங்களும் அவருக்கு ஆதரவாக இருங்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை' என்ற; ராகுல்காந்தியின் அதிரடிப்பேச்சால் ஆடிப் போயிருக்கிறார் ப.சிதம்பரம். இதையடுத்து, தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார் சிதம்பரம் என தகவல்கள் கசிகின்றன. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், தேர்தல் தொகுதி பங்கீடு பற்றிப் பேசுவதற்காக தலைவர் இளங்கோவன் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு, கடந்த திங்கள் கிழமை நியமிக்கப்பட்டது. இதில், கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, யசோதா உள்ளிட்ட எட்டு பேர் இடம்பெற்றனர். இளங்கோவனின் தலைமையை ஏற்காத சிதம்பரம், ' மல்லிகார்ஜுன கார்கே, குலாம்நபி ஆசாத் போன்ற சீனியர் தலைவர்கள் தலைமை ஏற்றால், அந்தக் குழுவில் நான் இடம்பெறுவேன். இளங்கோவனை ஏற்றுக் கொள்ள முடியாது' எனத் திட்டவட்டமாக பேசியதற்குப் பதில்தான், மேற்குறிப்பிட்ட ராகுல் காந்தியின் பேச்சு. 


இதனால், சர்ச்சை எழுவதை கவனித்த இளங்கோவன், ' எங்களுக்குள் எந்த சச்சரவும் இல்லை. பட்டியல் முடிவானதும், ப.சிதம்பரத்தின் ஒப்புதலோடுதான் வெளியிடப்படும்' என்றார். இதன்பின்னர் தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த தங்கபாலு, 'சிதம்பரம் சென்னை வரும்போதெல்லாம் சந்திப்பது எங்கள் வழக்கம். அப்படித்தான் இப்பவும் சந்திக்க வந்தோம்' என பேய்ச் சிரிப்பு சிரித்துவிட்டுப் போனார். அவர்கள் சென்ற பிறகு, முன்னாள் எம்.பியான கே.எஸ்.அழகிரி, வள்ளல் பெருமான், கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்.பி சுந்தரம், திருச்சி முன்னாள் மேயர் சுஜாதா உள்ளிட்டோர் சிதம்பரத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

அப்போது, ' இந்தத் தேர்தலில் எப்படியாவது தனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் சீட் வாங்கிக் கொடுப்பேன்' என ப.சி உறுதியளித்தார் எனவும் தகவல்கள் வெளியானது.
" இது வேண்டுமென்றே இளங்கோவனை உசுப்பும் வேலை. இந்தத் தேர்தலில் ப.சிதம்பரம் ஆட்கள் ஒருவருக்கும் சீட் கிடையாது. அவர்கள் எந்தவழியில் முயற்சி செய்தாலும், இளங்கோவனைத் தாண்டி எதுவும் நடக்காது"  என அதிர வைத்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

அவரே தொடர்ந்து, " சட்டமன்றத் தேர்தலுக்கு விருப்ப மனு வாங்கப்படும் என்ற தகவலை நாங்கள் அறிவித்ததும், இதுவரையில் 3,600 பேர் மனு கொடுத்தார்கள். இவர்களுக்கு மாவட்டத் தலைநகரங்களில் நேர்காணல் நடத்தினோம். நேர்காணல் என்றால், அந்த வேட்பாளரின் பின்புலம், கட்சிக்காக உழைத்தது, தொகுதி செல்வாக்கு என பலவற்றையும் ஆராய்ந்து பட்டியலை தொகுத்தோம். இதில், ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் ஒருவரும் விருப்ப மனுவையும் கொடுக்கவில்லை. நேர்காணலிலும் பங்கேற்கவில்லை.

கட்சிப் பொறுப்பில் இருந்தும் வள்ளல் பெருமான், சுந்தரம் போன்றவர்கள் ஒருநாள்கூட சத்தியமூர்த்திபவன் பக்கமோ, கட்சி நடத்தும் போராட்டங்களுக்கோ எட்டிப்பார்த்ததில்லை. காரணம். இவர்களுக்கு தலைவர் ஈ.வி.கே.எஸ். என்றாலே வெறுப்பு. தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆதரவாளர்களும் பவன் பக்கமே வருவதில்லை. இதற்கெல்லாம் கவலைப்படாமல், தொடர்ச்சியாக மக்கள் நலப் போராட்டங்களை முன்னெடுத்ததால், 95 சதவீத தொண்டர்கள் ஈவிகேஎஸ் பக்கம் இருக்கின்றனர்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் சீண்டுவார் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியோடு, இரண்டு மாதத்திற்கு முன்பே கூட்டணியில் சேர தி.மு.க அழைப்பு விடுத்தது என்றால், அதற்கு அ.தி.மு.கவுக்கு எதிராக இளங்கோவனின் தொடர்ச்சியான போராட்டங்கள்தான் காரணம்.

அ.தி.மு.க தலைமையை வலுவாக எதிர்க்கும் தலைவராக ஈவிகேஎஸ் இருக்கிறார். இவர்களில் யாராவது எந்த போராட்டத்தையாவது முன்னெடுத்திருப்பார்களா? இன்றைக்கு பதவி, சீட் என்று வந்ததும் கோஷ்டி கானம் பாடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் ராகுல் தெளிவாக பதில் கூறிவிட்டார். இதற்கும் மேல், ரகசிய கூட்டம், ஆதரவாளர்களுடன் பேச்சு என வதந்தியைக் கிளப்பி விடும் வேலையைச் செய்வது கார்த்தி சிதம்பரம்தான். எப்படியாவது செய்து கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது எண்ணம்.

கார்த்தியை ஒரு பொருட்டாகவே ஈ.வி.கே.எஸ் எடுத்துக் கொள்ளவில்லை. தந்தையின் தூண்டுதலில் மகன் ஆடுகிறாரா எனவும் தெரியவில்லை. கடந்த முறை தி.மு.க அணியில் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இந்தமுறை 35 முதல் 40 சீட்களை தி.மு.க தலைமை ஒதுக்கலாம். அவை அத்தனையும் கட்சிக்காக வியர்வை சிந்தியவர்களுக்கு மட்டுமே. ஏ.சி அறையில் உட்கார்ந்துகொண்டு ரகசியக் கூட்டம் போடுபவர்களுக்கு அல்ல. இதுவே, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் இறுதி முடிவு " என அதிர வைத்தார் அந்தத் தலைவர்.
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணாவிடம் பேசியபோது, " சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதில் எங்கள் தலைவர் ஈ.வி.கே.எஸ் தெளிவாக இருக்கிறார். தி.மு.க, அ.தி.மு.கவில் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர்களுக்கு சீட் கொடுப்பது போல, கட்சிக்காக உழைத்த மாவட்ட, வட்டார காங்கிரஸ் தலைவர்களுக்கு சீட் வழங்கும் முடிவில் மாநிலத் தலைமை இருக்கிறது. இதில், எந்த மாற்றமும் இல்லை. கோட்டா சிஸ்டம், குரூப்பிஸம் போன்றவற்றிற்கும் இந்தத் தேர்தலில் இடம் இல்லை" என்றார் கறாரான குரலில்.

மீண்டும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையைக் களத்தில் இறக்கும் எண்ணமெல்லாம் ப.சிக்கு அறவே இல்லை. அந்தளவிற்கு தொண்டர்களும் அவர் வசம் இல்லை. அதனால்தான் தனது கோஷ்டியைக் காண்பித்து பூச்சாண்டி காட்டி வேலையை சாதிக்க முயல்கிறார். இதற்கெல்லாம் அஞ்சுபவரில்லை ஈ.வி.கே.எஸ், எனச் சொல்லி சிரிக்கிறார்கள் கதர்த் தொண்டர்கள்.
ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ளவேவா.....

-ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக