திங்கள், 28 மார்ச், 2016

ஜெயேந்திரர் சாட்சியம் :தெரியாது, நினைவில்லை' - ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில்

விகடன்,com :ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான, காஞ்சி சங்கராச்சாரியார், “எல்லாமே பொய்” என்று தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
காஞ்சி சங்கர மடத்தில் நடந்த முறைகேடுகள் பலவற்றை, மயிலாப்பூரைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் என்பவர் வெளிக்கொண்டு வந்தார். அத்துடன், அந்த முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, 2002-ம் ஆண்டு ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது.

கொடூரமாகத் தாக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். இது தொடர்பாக காவல்துறை பதிவு செய்த வழக்கில், ஜெயேந்திரர், விஜயேந்திரரின் தம்பி ரகு, மடத்தின் மேனேஜர் சுந்தரேச அய்யர், தாதா அப்பு, காண்டிராக்டர் ரவி சுப்பிரமணியம் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கின் விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோதே, அப்பு, கதிரவன் ஆகிய இருவர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட வழக்கில் தொடர்புடைய மேலும் 8 பேரும் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை சென்னை வந்த ஜெயேந்திரர், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் 82 கேள்விகளை நீதிபதி ராஜாமாணிக்கம் கேட்டார். அவற்றில் பெரும்பாலான கேள்விகளுக்கு, தெரியாது, நினைவில்லை என்று சாட்சி சொன்னார். சில கேள்விகளுக்கு செய்கையில் தெரியாது என்று பதில் சொன்னார். சில சமயம் ஜெயேந்திரர் அசைவற்று நின்றபோது, நீதிபதி ராஜமாணிக்கம், ஏதாவது சொல்லுங்கள் என்று சொன்னார்.

அப்போது குறுக்கிட்ட ஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள், அவருக்கு சமயங்களில் காது கேட்காது... அதனால்தான் அப்படி நிற்கிறார் என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து இறுதியாக, இந்த வழக்குப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நீதிபதி கேட்டதற்கு, “எல்லாமே பொய்” என்று ஜெயேந்திரர் பதில் சொன்னார். இதையடுத்து, மற்றவர்களிடம் சாட்சி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக