வெள்ளி, 4 மார்ச், 2016

பூலோக சொர்க்கத்தின் நரக புள்ளி விவரங்கள் !

life-expectancyஉலக சுகாதார நிறுவனத்தின் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளில் நிகழும் வன்முறைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுகள் அமெரிக்காவில் நிகழ்கிறது.அமெரிக்காவிற்கும், ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளுக்குமிடையேயான தனி நபர் சராசரி ஆயுட்கால வேறுபாடு ஏன் என்பதற்கு அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் நிகழ்த்திய ஆய்வில் பதில் உள்ளது. ஆஸ்திரியா, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், நெதர்லாண்ட்ஸ், நார்வே, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய வளர்ந்த நாடுகளுடைய புள்ளி விவரங்களை ஒப்பிட்டு அதனடிப்படையில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது இந்நிறுவனம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் அமெரிக்க அரசிடம் உள்ள தகவல்களின் அடிப்படையிலான அதன் ஆய்வறிக்கையை அமெரிக்க மருத்துவ சஞ்சிகையில்(The American Journal of Medicine) வெளியாகியுள்ளது.

அந்த ஆய்வின் படி, 2012-ல் ஆண்களின் சராசரி வயது அமெரிக்காவில் 76.4 ஆகவும் ஏனைய வளர்ந்த நாடுகளில் 78.6 ஆகவும் இருக்கிறது. இந்த வேறுபாட்டிற்கு பாதிக்கு மேல் விபத்துக்களே காரணமாக உள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.அதே போல பெண்களின் சராசரி வயது அமெரிக்காவில் 81.2 ஆகவும் ஏனைய வளர்ந்த நாடுகளில் 83.4 ஆகவும் இருக்கிறது. மற்ற பணக்கார நாடுகளை ஒப்பிடும் போது அமெரிக்காவில் கிட்டத்தட்ட 5 மடங்கிற்கும் அதிகமான பெண்கள் போதை பழக்கத்தால் மரணக்கின்றனர்.
இதற்கு ஒரு வார காலத்திற்கு முன்பு வந்த மற்றொரு ஆய்வின் படி வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது 10 மடங்குக்கும் அதிகமான அமெரிக்க மக்கள் ஆயுத சண்டையினால் உயிரிழக்கின்றனர். இந்த ஆய்வறிக்கையும் அமெரிக்க மருத்துவ சஞ்சிகையில் வெளி வந்துள்ளது.மற்ற வளர்ந்த முதலாளித்துவ நாடுகளை ஒப்பிடும் போது 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் 49 மடங்கும், 25 முதல் 34 வயதிற்குட்பட்டவர்கள் 32 மடங்கும் ஆயுத வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
போதைப் பழக்கம், துப்பாக்கி வன்முறை மற்றும் மகிழுந்து விபத்து மூலமாக நிகழும் மரணங்களை நாம் தவிர்த்து இருந்தால் அமெரிக்க மக்களின் சராசரி ஆயுட்காலத்தை இன்னும் ஒரு ஆண்டு அதிகரித்து இருக்கலாம் என்று அமெரிக்க தேசிய நலனுக்கான புள்ளி விவர மையத்தின் ஆண்ட்ரூ பெனலோன் தெரிவித்து இருக்கிறார்.
உலக சுகாதார நிறுவனத்தின் சேகரிக்கப்பட்டத் தகவல்களின் படி வளர்ந்த நாடுகளில் நிகழும் வன்முறைகளில் கிட்டத்தட்ட 80 விழுக்காடுகள் அமெரிக்காவில் நிகழ்கிறது. அந்த வன்முறைகளில் கணிசமான அளவு அமெரிக்க கறுப்பின மக்கள் பாதிக்கபடுகின்றனர் என்பது பல்வேறு புள்ளி விவரங்கள் மற்றும் பதிவுகளின் அடிப்படையில் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவில் வெள்ளையினத்தோரை ஒப்பிடும் போது கருப்பின மக்களின் ஆயுட்காலம் வெகு குறைவு என்பதோடு இயற்கையல்லாத மரணங்களில் இறப்பதும் அதிகம். குறிப்பாக போலிசால் கொல்லப்படுவதைச் சொல்லலாம்.
ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, தனி நபர் ஆயுதக் குவிப்பில் ஏனைய பணக்கார நாடுகளை விட அமெரிக்க தான் முதலிடம் வகிக்கிறது. அதே போல வன்முறைகளால் ஏற்படும் உயிரழப்பிலும் அமெரிக்காவிற்கு தான் முதலிடம். சட்டபூர்வமான இந்த தனி நபர் ஆயுத குவியல்தான் தனி நபர் பிரச்சினைகளை சட்டத்திற்கு வெளியேத் தீர்த்துக் கொள்கிறது என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.
உடலியல் சார்ந்த வன்முறைகள் மட்டுமல்ல உளவியல் சார்ந்த வன்முறைகளுக்கும் தீர்வுகளாக ஆயுதங்களே உள்ளன என்பது மேலும் அதிர்ச்சியளிக்க கூடிய உண்மையாகும். அதாவது தனி நபர் உளவியல் பிரச்சினைகளும் தனி நபர் ஆயுத குவிப்பும் ஒரு புள்ளியில் இணையும் போது அதன் விளைவுகள் ஒரு புதிய பரிணாமத்தை எட்டுகின்றன. ஒருபுறம் தனது நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்களையும் மறுபுறம் தன்னைதானே அழித்துக் கொள்ளவும் இது ஊக்குவிக்கிறது. தற்கொலைக்கான மனகிளர்ச்சியை மட்டுப்படுத்தும் செயலை ஆயுதங்கள் புறக்கணிக்கின்றன. மரணங்களை தூண்டி விடுகின்றன.
உலகத்தில் தீவிரவாதத்தை வேரோடு அழித்து உலக மக்களை இரட்சிக்க இருக்கும் ஆண்டவனான அமெரிக்காவிற்கு தனது உள்நாட்டில் நடக்கும் வன்முறைகளையும் அதனால் ஏற்படும் உயிர்பலிகளையும் தடுக்க முடியாமல் போனது இழுக்கில்லையா? ஒரு வேளை சொந்த நாட்டு மக்களை பாதுகாக்கும் பணியினை ஹாலிவுட் ஹீரோக்களிடம் ஒப்படைத்துள்ளதோ? வினவு.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக