செவ்வாய், 29 மார்ச், 2016

பிரஸ்ஸல் குண்டுவெடிப்பில் இன்போசிஸ் ஊழியர் கணேஷ் உயிரிழப்பு

பிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த பிறகு மாயமான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேஷ் உயிரிழந்துவிட்டதாக பெல்ஜியம் நாட்டு இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் கடந்த 22 ஆம் தேதி ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.  பிரஸ்ஸெல்ஸ் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பின் போது, இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த சென்னையைச் சேர்ந்த ராகவேந்திரன் கணேசன் என்பவர் மாயமானார். மேலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடப்பதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு மும்பையில் வசிக்கும் தனது தாய் அன்னபூரணியிடம் ஸ்கைப் மூலம் அவர் பேசியுள்ளார். இதையடுத்து அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்திருக்கலாம் என கூறப்பட்ட நிலையில் ராகவேந்திரன் கணேசனும் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவரது உடல் பெல்ஜியம் அதிகாரிகளால் இன்று அடையாளம் காணப்பட்டது. இறந்துபோன கணேசனின் உடல் அம்ஸ்டர்டாம் வழியாக இந்தியா கொண்டு வரப்படும் என பெல்ஜியத்துக்கான இந்திய தூதர் மாஞ்சீவ் சிங் புரி கூறினார். இன்போசிஸ் நிறுவனத்துக்காக ராகவேந்திரன் கணேசன் கடந்த நான்கு ஆண்டுகளாக பிரஸ்ஸெல்ஸில் பணியாற்றி வந்துள்ளார். கணேசனின் மனைவி சென்னையில் வசிக்கிறார். கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க கணேசன் கடந்த மாதம் சென்னை வந்து சென்றுள்ளார். உயிரிழந்த ராகவேந்தின் குடும்பத்துக்கு இன்போசிஸ் நிறுவனம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக