திங்கள், 7 மார்ச், 2016

கலாபவன் மணி தற்கொலை ? சகோதரன் சந்தேகம்

சாலக்குடி: நடிகர் கலாபவன் மணி மரணம் இயற்கையானது அல்ல... அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று மணியின் சகோதரர் அளித்துள்ள புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், மலையாளத்தில் பிரபல நடிகராகத் திகழ்ந்தவர் கலாபவன் மணி. கடைசியாக தமிழில் பாபநாசம் படத்தில் கமல் ஹாஸனுடன் நடித்திருந்தார். 
 நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் காரணமாக நேற்று இரவு கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் மணி இறந்ததாக அறிவிக்கப்பட்டது. உடனடியாக அவரது உடல் அங்குள்ள பிணக்கிடங்குக்கு எடுத்துச் செல்ல முயன்றபோதுதான், அவரது மரணத்தில் சந்தேகம் எழுப்பினார் மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம். எனவே இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரை சாலக்குடி போலீசார் ஏற்று, பிரிவு 174-ன் கீழ் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து கலாபவன் மணியின் உடல் திருச்சூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுவிட்டது. சாலக்குடி இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு குழுவும், டிஎஸ்பி சுதாகரன் தலைமையில் ஒரு ஸ்பெஷல் படையும் கலாபவன் மணி மரணம் குறித்து விசாரித்து வருகின்றன. இதுகுறித்து திருச்சூர் ரூரல் எஸ்பி கார்த்திக் கூறுகையில், "கலாபவன் மணி மரணம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மரணம் குறித்து மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். மருத்துவக் குழு அறிக்கைக்காக காத்திருக்கிறோம்," என்றார். கலாபவன் மணி உடலில் மெத்தில் ஆல்கஹால் படிந்திருந்ததாக சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more at: /tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக