தமிழ்நாடு முழுவதும் நான் நடத்திய 'நமக்கு நாமே' பயணத்தின் போது மக்களிடையே மாபெரும் எழுச்சியைப் பார்த்தேன். அ.தி.மு.க. ஆட்சியை அகற்றிவிட்டு தி.மு.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதை இது சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
நமக்கு நாமே பயணத்தின் போது 4 லட்சம் போர் என்னிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், வியாபாரிகள் என பலதரப்பட்ட மக்களும் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்து தங்களது தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்புகிறார்கள்.
அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வலிமை தி.மு.க.விடம் மட்டுமே உள்ளது என்பதையும் மக்கள் உணர்ந்துள்ளனர். தி.மு.க.வின் கடந்த கால சாதனைகள், திட்டங்கள் இதை உறுதிபடுத்தியுள்ளது. தற்போதைய ஆட்சியில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை.
எங்கள் தலைவர் கலைஞர் முதல்வராக பணியாற்றி சிறப்பான சாதனை படைத்தவர். எனவே தான் மக்கள் மீண்டும் தி.மு.க. ஆட்சி தேவை என்று நினைக்கிறார்கள். தி.மு.க.வால் மட்டுமே சிறப்பான, வெளிப்படையான ஆட்சியை கொடுக்க முடியும்.
தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் தான் சமூகநிதியை நிலை நாட்டியது. பெண்களுக்கு உரிமைகள் பெற்று கொடுத்தது. தமிழர்கள் இன்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கு திராவிட இயக்கம் தான் காரணமாகும். ஆனால் திராவிட இயக்கத்தின் இந்த சேவையால் பலன் பெற்று டாக்டர்களாகவும், என்ஜினீயர்களாகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளாகவும் இருப்பவர்கள் இன்று அந்த அடிப்படையை மறந்து விட்டு, திராவிட இயக்கத்துக்கு எதிராக போசுகிறார்கள்.
திராவிட இயக்கத்தை சாய்த்து விடலாம் என்று சில கட்சிகள் நினைக்கின்றன. திராவிட இயக்கம் என்பது ஆலமரம் அதை யாராலும் சாய்க்க முடியாது.
தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. 145 சமத்துவ புரங்களை உருவாக்கியது. சுயமரியாதை கலப்பு திருமணங்களை தி.மு.க. நிறைய நடத்தியுள்ளது. ஆனால் இன்று அ.தி.மு.க. ஆட்சியில் கவுரவ கொலைகளை தடுக்க தவறி விட்டனர்.
தி.மு.க. ஒரு போதும் சாதி அரசியலை நடத்துவது இல்லை. சாதி அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதும் இல்லை. சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் நன் மதிப்பு பெற்றுள்ளாரா மற்றும் அவரது தகுதி அடிப்படையில் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்படுகிறார்.
தி.மு.க.வில் என்னை நான் ஒரு போதும் முன்னிலைப்படுத்தி கொண்டதில்லை. நான் சாதராண தொண்டனாக இருந்து தான் இன்று பொருளாளர் அந்தஸ்துக்கு உயர்ந்துள்ளேன். துணை முதல்வர், மேயர் உள்ளிட்ட பல பதவிகளில், கலைஞர் தலைமையில் நான் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளேன்.
அத்தகைய திட்டங்களில் 'நமக்கு நாமே' திட்டமும் ஒன்று. தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அந்த திட்டத்தின் நோக்கமாகும். அந்த திட்டத்தில் எங்களுக்கு முழு வெற்றி கிடைத்துள்ளது.
மற்றபடி எனக்காக நமக்கு நாமே தொடங்கப்படவில்லை. எனவே தி.மு.க.விடம் இருந்து என்னை பிரித்துவிட முடியாது. தி.மு.க.வினர் சொல்வதைத்தான் செய்வார்கள். செய்ய முடிந்ததைத்தான் சொல்வார்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் உள்ளது.
அதனால்தான் தமிழக மக்கள் மனதில் இன்று அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற தாக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நாளுக்காக பெரும்பாலான மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க.வை அகற்ற வேண்டும் என்ற கொள்கையுடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணி சேர்ந்துள்ளன.
இலங்கை தமிழர் பிரச்சினையை இந்த தேர்தலில் பிரசாரத்துக்காக ஒரு அம்சமாக குறைக்க முடியாது. 1950-ல் இருந்து ஈழ தமிழர்களுக்காக தி.மு.க பாடுபட்டு வருகிறது.
இலங்கை தமிழர்களை கைவிட்டவர் ஜெயலலிதா தான். எனவே தேர்தலில் அந்த பிரச்சினை எழுந்தால், அது ஜெயலலிதாவுக்கு எதிராகத் தான் முடியும்.
தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதே உறுதியாகி விட்டது. அந்த வெற்றியின் பங்கு தி.மு.க.வின் கடை மட்ட தொண்டர்கள் ஒவ்வொருக்கும் சொந்தமானதாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டதால் தோல்வி பற்றிய கடுகளவு எண்ணம் கூட எங்களிடம் இல்லை. கலைஞரின் லட்சோப லட்ச உண்மைத் தொண்டர்களில் நானும் ஒருவன். அவரது அறிவுரையின் போரில்தான் எனது எல்லா அரசியல் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன.
தி.மு.க.வை மாபெரும் இயக்கமாக கலைஞர் கட்டி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் எனது ஒரே கடமை, இந்த தேர்தலில் கட்சித் தொண்டர்களை ஒருங்கிணைத்து தேர்தல் வெற்றியை கலைஞர் கையில் கொடுக்க வேண்டும் என்பதே.
தி.மு.க. வேட்பாளர் பட்டியலை கலைஞர் விரைவில் வெளியிட உள்ளார். தி.மு.க. வில் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் பஞ்சமே இல்லை. எனவே தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களும், பெண்களும் அதிக அளவில் இடம் பெறுவார்கள். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் சில கட்சிகள் சேர வாய்ப்புள்ளது. அனைத்துக்கும் மேலாக தி.மு.க.வுடன் தமிழக மக்கள் கூட்டணி அமைத்துள்ளன.
அ.தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார். ஜெயலலிதாவை மீண்டும் முதல் - அமைச்சராக வர விட மாட்டேன் என்றும் அவர் கூறினார். இதை சாதிப்பதற்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் விஜயகாந்த் கூறினார்.
இத்தகைய பொதுவான ஒரே இலக்குடன் உள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதை கருத்தில் கொண்டே எங்கள் தலைவர் கலைஞர், விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார். விஜயகாந்த் ஏன் வேறு மாதிரி முடிவு எடுத்தார் என்பதை அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை தேர்தலை சந்திக்க நாங்கள் முழுமையாக தயார் நிலையில் உள்ளோம்.
தமிழ் நாட்டில் இன்று பலமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த பலமுனைப் போட்டியை உருவாக்கியதே அ.தி.மு.க.தான். ஆனால் தேர்தலில் உண்மையான போட்டி தி.மு.க. - அ.தி.மு.க. இடையே தான் உள்ளது. இதில் தி.மு.க.வே வெற்றி பெறும்.
தி.மு.க. தலைவர் கலைஞர் 6-வது முறையாக முதல் - அமைச்சர் பதவியை ஏற்பார். இந்த தேர்தலில் முழு மது விலக்கு, வெளிப்படையான ஆட்சி, ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகிய மூன்றுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். தமிழ்நாட்டை வளர்ச்சிப்படுத்த வேண்டும்.... வளர்ச்சிப்படுத்த வேண்டும்... வளர்ச்சிப்படுத்த வேண்டும் என்பதே எங்களது ஒரே இலக்கு.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக