திங்கள், 21 மார்ச், 2016

மிரண்டு போன மந்திரிகள்...ஆடிப்போன குமரிமாவட்டம்....சீட்டுக்காக பறிகொடுத்த கோடிகள்?

தேர்தலில் எம்எல்ஏ சீட்டுக்காக ரூ. 25 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை பணம் கொடுத்து ஏமாந்த கன்னியாகுமரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் அதிர்ச்சியில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் வாங்க கட்சியினர் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. கூட்டணி இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், வரும் 23-ம் தேதி பங்குனி உத்திரத்துக்கு முன், முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரி, நாகர்கோவில் ஆகிய தொகுதிகளை தற்போது கைவசம் வைத்துள்ள அதிமுக, வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவது என்ற முடிவில் உறுதியாக உள்ளது. இதற்காக மக்கள் செல்வாக்கு மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பணம் பரிமாற்றம்
இதற்கிடையே எம்எல்ஏவாகி விடலாம் என கனவு கண்ட அதிமுகவினர் பலர், முக்கிய அமைச்சர்கள் இருவரின் இடைத்தரகராக செயல்பட்ட மாவட்ட நிர்வாகி ஒருவர் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை இரு மாதங்களுக்கு முன்பே கொடுத்துள்ளனர். தற்போது கட்சி தலைமை அவர்களை ஓரம்கட்டியுள்ள நிலையில், மாவட்டம் வாரியாக அவர்களின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரகசிய ஆய்வு
திருநெல்வேலி வரை இந்த நடவடிக்கை பாய்ந்துள்ள நிலை யில், இனி குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மீது தான் நடவடி க்கை இருக்கும் என தெரிகிறது. இதற்காக கட்சி தலைமையின் விசுவாசமானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரகசியமாக முகா மிட்டு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இங்குள்ள அதிமுக நிர்வாகிகளின் நடவடிக்கை, கட்சி யினரிடையே பிரிவினையை தூண்டுவோர், சுய நலத்துக்காக கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவோர் குறித்த தகவல்களை, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தமிழ்மகன் உசேன், சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் மூலம், முழு அறிக்கையை இவர்கள் பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து தான் அதிமுக தலைமை தற்போது குமரி மாவட்டம் பக்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பாவம் முன்னாள் எம்எல்ஏ
முக்கிய அமைச்சர்கள் ஓரம்கட்டப் படுவர் என்பதை கனவிலும் நினைக்காத நிலையில், அவர்களிடம் சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாந்த அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இவர்களில் முதல் இடத்தில் இருப்பது, திமுகவில் எம்எல்ஏவாக இருந்து தற்போது அதிமுக வில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்தான்.
கிறிஸ்தவ நாடார் இனத்தைச் சேர்ந்த இவர், தனக்குள்ள மக்கள் பலத்தை பயன்படுத்தி எப்படியாவது ஜெயித்துவிடுவேன்.. என முக்கிய நிர்வாகியின் பின்னால் ஓராண்டுக்கும் மேலாக அலைந்து, சீட்டுக்காக காய் நகர்த்தியுள்ளார். முடிவில் நாகர்கோவில் தொகுதியை தனக்கு பெற்று தந்துவிடுமாறு கூறி, ரூ.1 கோடி வரை பணம் கொடுத்துள்ளார்.
ஒரு ரூபாயை இழந்தால் கூட, தூக்கம் கலைந்து புலம்பும் தன்மை கொண்ட அந்த முன்னாள் எம்எல்ஏ, இப்போது நிலைமை தலைகீழானதை பார்த்து பெரும் அதிர்ச்சியில் உள்ளார். பணம் இழந்த சோகத்தில் அவர் அடிக்கடி மயங்கி விழுவதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் பரிதாபமாக உள்ளது.
பேரிடியில் பேராசிரியர்
இதுபோல், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிவிடவேண்டும் என்ற ஆசையில், அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய ஒருவர், தனது தென்னந்தோப்பு மற்றும் சொத்துக் களை விற்று ரூ. 50 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை இழந்த அதிர்ச்சியில் இருந்து அவர் இன்னும் மீளவேயில்லை.
குளச்சல் தொகுதிக்கு சீட் வாங்குவதற்காக மீனவ பிரதிநிதி ஒருவர் ரூ. 25 லட்சம், விளவங் கோடு அல்லது பத்மநாபபுரம் தொகுதியைக் கேட்டு களியக் காவிளை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் ரூ. 40 லட்சம், தக்கலை பகுதியைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 35 லட்சம், கிள்ளியூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நிர்வாகி ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளனர்.
கல்லூரி அதிபர்
பத்மநாபபுரமோ, குளச்சலோ ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, தடிக்காரன்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி அதிபர் ஒருவர் ரூ. 1 கோடியை அள்ளிக் கொடுத்துள்ளார். நிதி நிறுவனம் நடத்திவரும் நிர்வாகியோ ரூ. 50 லட்சம் கொடுத்துள்ளார். இவர்கள் பெரும்பாலும் 3-ம் இடத்தில் இருந்த வரை நம்பி பணம் கொடுத்தவர்கள். அவர் கட்சியில் ஓரம்கட்டப்பட்டதை எதிர்பார்க்காத இவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதற்கு இடைத்தரகராக செயல்பட்ட குமரி மாவட்ட முக்கிய புள்ளியிடம், கொடுத்த பணத்தில் பாதியையாவது திரும்ப வாங்கிக் கொடுக்குமாறும், அதன் பிறகு அரசியலும் வேண்டாம்.. கட்சியும் வேண்டாம்.. என்ற விரக்தியில் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், குமரி அதிமுக வட்டாரம் பெரும் பதற்றத்தில் இருக்கிறது.
சீட்டுக்காக பணம் வாங்கிக் கொடுக்க இடைத்தரகராக செயல்பட்ட அந்த முக்கிய நிர்வாகி மீது, அதிமுக தலைமையின் நடவடிக்கை எப்போதும் பாயலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக