வியாழன், 31 மார்ச், 2016

திமுகவின் பழிவாங்கும் படலம் ?அன்று ரெய்டு...63 தொகுதிகளை காங்கிரஸ் பறித்ததற்கு... இன்று ...?

சென்னை: சட்டசபை தேர்தலில் திமுகவின் கிடுக்குப்பிடியால் வாழ்வா? சாவா நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது காங்கிரஸ் கட்சி. கடந்த சட்டசபை தேர்தலில் சிபிஐ மூலம் ரெய்டு உள்ளிட்ட பல அஸ்திரங்களை ஏவி திமுகவை பிழிந்து 63 தொகுதிகளை பெற்ற காங்கிரஸுக்கு இப்போது திமுக தனக்கே உரிய பாணியில் பதிலடி கொடுத்து வருகிறது.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் முதல் கட்சியாக இடம்பிடித்தது. கடந்த தேர்தலைப் போலவே 63 தொகுதிகளைப் பெற்றுவிடலாம் என நினைத்தது காங்கிரஸ். ஆனால் வாசன் பிரிந்து போய் தனிக்கட்சி தொடங்கிவிட்டாரே... எனக் கூறி நிச்சயம் 63 தொகுதி கிடையவே கிடையாது என அடித்துச் சொல்லிவிட்டது திமுக. அத்துடன் முடியவில்லை பஞ்சாயத்து.
காங்கிரஸுக்கு 40 தொகுதிகளாவது திமுக விட்டுக் கொடுக்கும் எனக் கூறப்பட்டது. தற்போதோ 'உங்களுக்கு 25' என்பதே மிக மிக அதிகம்... அதுக்கு மேல உங்களுக்கு கொடுக்கிற அத்தனை தொகுதியும் வேஸ்ட் என்று  பதில் தருகிறது திமுக.  நமக்கென்னவோ இளங்கோவனை குறிவைத்து,... சிதம்பரம் தங்கவேலு கோஷ்டி ஊதிவிடும்  சம்பூர்ண ராமாயண கதையோ என்ற சந்தேகம் வருகிறது 

வாசனை முன்வைத்து மிரட்டல் அத்துடன் நிற்கவில்லை... நீங்கவரலைன்னா என்ன? வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கூப்பிடுவோம் என்றும் மிரட்டுகிறது திமுக... வாசன் இருக்கும் கூட்டணியில் இருக்கவே கூடாது என்கிறார் ராகுல்... அப்படின்னா தனித்துப் போட்டியிட்டுதான் ஆகனுமா? வேறு வழியே இல்லையா? என புலம்புகிறது காங்கிரஸ்... இப்படி ஓடியது... ஓடியது...விரக்தியின் விளிம்புக்கே ஓடியது என புளகாங்கிதமும் புன்னகையுமாக காங்கிரஸின் பரிதாப நிலையை கண்டு அகமகிழ்ந்து கிடக்கிறது திமுக....இதற்கு காரணம் கடந்த சட்டசபை தேர்தல்தான்.. ரிவெஞ்சுதான்..
ப்ளாஷ்பேக் 2011 கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது பிப்ரவரி, மார்ச் மாத அரசியல் களம் அக்னி வெயிலைவிட உக்கிரமாக இருந்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ், திமுகவிடம் இருந்து கூடுதல் தொகுதிகளை கபளீகரம் செய்ய கையாண்ட யுக்திகள்... விடுத்த மிரட்டல்கள்... அதற்கு சளைக்காமல் திமுக கொடுத்த ரியாக்ஷன் என ப்ளாஷ்பேக் விரியத்தான் தொடங்குகிறது. 2011 பிப்ரவரி மாதம் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு நாங்கள்தான்; உங்கள் மீது வழக்குகள் எல்லாம் இருக்கிறது என்கிற தொனியில்தான் பேச்சுவார்த்தைகளையே திமுகவுடன் தொடங்கியது காங்கிரஸ். ஆனால் தொடக்கத்தில் இதை திமுக பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.
ரெய்டு முலம் மிரட்டல் ஆனால் காங்கிரஸோ அதிரடியாக எங்கு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததோ அதே அண்ணா அறிவாலயத்தின் மாடியில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்துக்குள் புகுந்து சிபிஐ ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக ரெய்டு நடத்தியது... இது திமுகவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. அப்போது அரசியல் அரங்கத்தில் மாடியில் ரெய்டு, கீழே தொகுதி பேச்சுவார்த்தையா? என ஏகடியமாக பேசப்பட்டது.
மீண்டும் பேச்சுவார்த்தை இந்த ரெய்டு நடந்த 2 நாட்களுக்குள் திமுக- காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை அதே அறிவாலயத்தில் நடந்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்கிற ரேஞ்சுக்கு குரலை உயர்த்தி பேசிக் கொண்டிருந்தது காங்கிரஸ்
திமிறிய திமுக காங்கிரஸின் இந்த பெரியண்ணன் போக்குக்கு கடிவாளம் போட திமுக, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவது என்றும் பிரச்சனைகளின் அடிப்படையில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருவது என்ற அதிரடி நிலைப்பாட்டை எடுத்தது. அத்துடன் திமுகவின் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வதற்காக டெல்லியில் போய் முகாமிட்டிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது
63 தொகுதிகளை அள்ளிய காங். பின்னர் திமுக- காங்கிரஸ் தரப்பில் கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்கான சமாதானப் பேச்சுகள் நடத்தப்பட்டு திமுகவின் முடிவு திரும்பப் பெறப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு கடைசியாக அது விரும்பியபடி 63 தொகுதிகளை கொடுத்தாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது திமுக. இதனடிப்படையில்தான் இம்முறையும் 'அந்த பழைய' 63 தொகுதிகளை எங்களுக்கு தாருங்கள் என பேச்சுவார்த்தையை தொடங்கியது காங்கிரஸ்... ஆனால் தொடக்கம் முதலே கிடுக்குப்பிடி போட்டு அழ வைத்துக் கொண்டிருக்கிறது திமுக.
கூடுதல் தொகுதி? ஆனால் கடந்த முறை திமுகவை பாடாய்படுத்தி உருட்டல் ரெய்டு மிரட்டல் மூலம் தொகுதிகளை 'சொகுசாக பெற்ற காங்கிரஸ் இப்போது விழிபிதுங்கி விக்கித்து நிற்கிறது... திமுகவோ தமக்கே உரிய பாணியில் காங்கிரஸுக்கு பதிலடி கொடுத்துவிட்ட திருப்தியோடு 'சரி...சரி..அழாதீங்க...கூடுதலாக கொஞ்சம் தொகுதி வாங்கிக்குங்க'' என நமுட்டு சிரிப்பு சிரிக்கிறது..

Read more at: http://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக