செவ்வாய், 22 மார்ச், 2016

பிலிம் நியுஸ் ஆனந்தன்....60 ஆண்டுகளாக இவர்தான் தமிழ் சினிமாவின் ஆவணக்காப்பகம்

film new mar 21
நெட்டின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் கடைசி போஸ்ட் கார்டும் தபால் பெட்டிக்குள் போட்டுப் பூட்டப்பட்டுவிட்டன! உலகப் புகழ் பெற்ற நியூயார்க் போஸ்ட் பத்திரிகையும் கடந்த ஆண்டு மூடப்பட்டு டாட் காம் வடிவத்துக்கு வந்துவிட்டது. எது குறித்த தகவலும் கூகிளைத் தட்டினால் கிடைத்துவிடும் என்பது ப்ரீ கே ஜி குழந்தைக்கும் தெரிகிறது. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்பு பத்திரிகை வேலைக்கு சேர்ந்தபோது மேற்சொன்ன மாற்றங்கள் நிகழும் என்று எனக்கு ஒரு துளியும் தெரியாது! எனக்கு மட்டுமல்ல பலருக்கும் இதுவே நேர்ந்திருக்கும் என்பது என் யூகம்!

அப்படியான சூழலில் ஒட்டு மொத்த தமிழ் சினிமா வரலாற்றையும் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன்பே ‘பிலிம் நியூஸ் ஆனந்தன்’ என்கிற ஒரு தனிமனிதன் ஆவணப்படுத்த முற்சித்திருக்கிறார் என்பது, எவராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத ஆச்சர்யம்.1996 தொடக் கத்திலிருந்து 2000 வரை குங்குமம் வார இதழில் நான் உதவி ஆசிரியராக இருந்த காலக்கட்டம். அப்போது பொறுப்பாசிரியராக அண்ணன் கவிஞர் சுகுமாரன் இருந்தார்.
கடந்தகால சினிமாக்கள் பற்றி பதிவு செய்வதில் அவருக்கு நிறைய ஆர்வம் உண்டு.லெஜன்ட்கள் பற்றி நிறைய பதிவு செய்வோம்.அப்போதெல்லாம் போட்டோவுக்காக அதிகாலையில் இவர் வீட்டு வாசலில்தான் போய் நிற்ப்பேன். அவரது அறை, ஹால் அனைத்தும் மரத்தாலான பீரோக்களால் நிறைந்திருக்கும். ஒவ்வொரு பாக்ஸிலும் A-B-C எனத் தொடங்கி Z வரை ஸ்டிக்கர் ஒட்டி வைத்தி ருப்பார். நான் போனதும்  மணக்க மணக்க ஒரு காபி வரவழைத்துக் கொடுப்பார்.அதைக் குடித்து முடிப்பதற்குள் நமக்குத் தேவையான படங்களை எடுத்துவந்திருப்பார்.எந்தப் பத்தி ரிகை,எது தொடர்பான செய்த்திக்கு இந்தப் புகைப்படம் பயன் படுத்தப் போகிறோம்.அலுவலக தொடர்பு எண் என எல்லா விபரங்களையும் கேட்டு, ஒரு நோட்டில் தேதி போட்டுக் குறிப்பு எழுதிய பிறகே போட்டோக்களைக் கொடுத்து அனுப்புவார்.
எவ்வளவு ரெமுனரேசன் கொடுக்கணும் சார் என்று கேட்டால்…புன்னகை மட்டும்தான் அவரது பதிலாக இருக்கு.ஒருமுறைகூட எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதில்லை! நாமாக போட்டுக் கொடுத்தால்…அது எவ்வளவு என்றுகூடப் பார்க்காமல் அதே புன்னைகையோடு பெற்றுக் கொள்வார்.
இதழ் வெளிவந்த இரண்டு நாட்களுக்குள் புகைப்படைத்தை அவரிடம் திரும்பக் கொடுத்துவிட வேண்டும் என்பதில் அவர் ரொம்ப கறாராக இருப்பார்.சினிமா சிகழ்சிகளில் பார்க்கும் போதெல் லாம் ஞாபகப் படுத்துவார்.எனது சோம்பேறித்தனம் காரணமாக உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்க காலதாமதமான சம்பவங்கள் நிறைய உண்டு. கடைசியில் அவரே, ஆட்டோ எடுத்துகொண்டு வந்து வாங்கிப் போனதும் உண்டு! அப்போதெல்லாம் அவர் சொல்கிற ஒரு வார்த்தை “அந்தப் போட்டோ வேற ஏதும் கிடைக்கலை சார்…பிற்காலத்துல உங்கள மாதிரி ஒருவர் கேட்டுவந்தால் நான்…இல்லேன்னு எப்படிச் சொல்றது!?” என்று சிரிப்பார்.
வயது குறைந்த ஆட்களைக்கூட ‘சார்’ என்றுதான் அழைப்பார்.இந்தப் பெருந்தன்மைதான் இவரைத் தமிழ் சினிமாவின் தவப் புதல்வனாக வைத்திருக்கிறது என நான் அழுத்தமாக நம்புகிறேன். அது சரி இப்பொது எதற்கு இந்தத் தகவல் எனக் கேட்கிறீர்களா!? எழுபத்தியைந்து ஆண்டுகால சினிமாவை ஆவணப் புத்தகமாக, மொத்தமாகத் தொகுத்துக் கொடுத்த அந்த வரலாற்று ஆசிரியர் இன்று பிற் பகல் தன் வரலாற்றுப் புத்தகத்தின் கடைசிப் பக்கங்களைக் காலியாக வைத்துவிட்டுக் காற்றில் கலந்துவிட்டார்.இட்டு நிரப்ப இனி எவரால் முடியும்!
ஆனந்தன் சார், உங்களிடம் ஒரே ஒரு வேண்டுகோள்…
எதாவது ஒரு செய்திக்கு புகைப்படம் தேவை என்று உங்களைத் தேடி வரும்போது… எப்போதும் போல் ஆவி பறக்க ஒரு காபி…எனக்கான ஒரு ப்ளாக் அண்ட் ஒயிட் புகைப்படம்… இல்லை என்று சொல்லாமல் கொடுங்கள். இந்த ஜென்மத்திற்கு அதுபோதும் உங்கள் ஞாபகங்களைப் பத்திரப்படுத்த……!
v.k.sunder   aanthaireporter.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக