ஞாயிறு, 6 மார்ச், 2016

45 சதவீத கமிஷன்..கரைபுரண்டு ஓடிய ஊழல் வெள்ளம் ..பொதுப்பணி துறை அதிகாரியின் அதிரடி வாக்குமூலம்

பொதுப்பணித் துறையில், கட்டடங்கள் மற்றும் நீர்வளத் துறை என, இரண்டு பிரிவுகள் உள்ளன. கட்டடங்கள் பிரிவு மூலம் துறைக்கு தேவையான கட்டடங்கள் மட்டுமின்றி, அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலக கட்டடங்கள் உள்ளிட்டவை கட்டப்படுகின்றன; கட்டடங்களின்பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நீர்வளத் துறை மூலம் மாநிலத்தின் நீர் கட்டமைப்புகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துதல் பணிகள் நடக்கின்றன. இத்துறையின் கீழ், நீராய்வு நிறுவனம், அணைகள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல பிரிவுகளும் இயங்குகின்றன.


கடந்த ஐந்து ஆண்டு கால, அ.தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணித் துறை மூலம் ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்காக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.இதேபோல, நீர்வளத் துறை மூலம் நீர் கட்டமைப்புகள் மேம்படுத்தும் பணிகளுக்கும், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. உலக வங்கி கடனுதவி பெற்றும், பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒப்பந்ததாரர்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.ஆனால், 'டெண்டர்' எனப்படும் ஒப்பந்தப்புள்ளி கோருதல் வெளிப்படைத் தன்மையுடன் நடக்கவில்லை. துறை அமைச்சர், அவரது உறவினர்கள், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே
பணிகள் வழங்கப்பட்டன. கடந்த தி.மு.க., ஆட்சியில் பின்பற்றப்பட்ட, அதே நடைமுறைகள் தான் இப்போதும் பின்பற்றப்பட்டன.
ஒவ்வொரு பணிக்கும், ஒப்பந்ததாரர்கள், 45 சதவீதம் வரை கமிஷன் கொடுத்தனர். இதில், 25 சதவீதம் அமைச்சருக்கும், மீதமுள்ள, 20 சதவீதம் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரையில் உள்ள அதிகாரிகளுக்கும் கைமாறியது. மீதமுள்ள, 55 சதவீத நிதியில் தான், பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதிலிருந்தே, அந்த பணிகள் எவ்வாறு நடந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடியும். இதுபோன்ற முறைகேடுகளை தடுத்து, ஒப்பந்த புள்ளிகளை வெளிப்படைத் தன்மையுடன் கோர, 2010ல், இ- - டெண்டர் முறை கொண்டு வரப்பட்டது; ஆனால் இன்று வரை, அதை செயல்படுத்தவில்லை.
ஒருவர், ஒப்பந்தப்புள்ளி பெற்றுவிட்டாலும் பணியை துவங்க முடியாது. அமைச்சரிடம், 25 சதவீதம் கமிஷன் சென்ற பிறகே, பணி ஆணை கிடைக்கும். அதன் பிறகே, ஒப்பந்ததாரரால் பணியை மேற்கொள்ள முடியும். இந்த கமிஷன் தொகையை, அமைச்சர் நேரடியாக பெற்றுக் கொள்வது கிடையாது.
உதவியாளர் மூலம் கண்ணுக்கு தெரியாத காற்று போல, கமிஷன் தொகை கைமாறும். இதற்காக, பொதுப்பணித் துறையில் உள்ள அதிகாரிகளே, 'புரோக்கர்'களாக செயல்பட்டு வருகின்றனர். இவர்கள், 'எம்' என்று அமைச்சர்; 'எல்' என்று லட்சம்; 'சி' என்று கோடி ரூபாயை குறிப்பிட்டு பேசுகின்றனர்.விவரம் அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த, 'கோர்டு வேர்டு' புரியும்.இதேபோல, அதிகாரிகள் பணியிட மாற்றம், பதவி உயர்விலும் லட்சக்கணக்கான ரூபாய், அமைச்சர் மற்றும் துறையின் உயர் அதிகாரிகளுக்கு கமிஷனாக சென்றுள்ளது. பணத்தை கொடுப்பவர்களுக்கு மட்டுமே முக்கியமான பதவி வழங்கப்படும்.

மற்றவர்கள், மாநிலத்தின் எங்காவது ஒரு ; இடத்திற்கு துாக்கி அடிக்கப்படுவர். இப்போது மட்டுமல்ல; காலம் காலமாக இந்த நடைமுறை உள்ளது. துறையில் உள்ள நேர்மையான அரசு ஊழியர்கள், வெளிப்படையாக பேச முடியாத அளவிற்கு, வாய்ப்பூட்டுச் சட்டம் அமலில் உள்ளது.கடந்த, 1973ல், அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் என்ற இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி, துறையில் நடக்கும் தகவல்களை, பத்திரிகைகள் உட்பட மற்றவர்களுக்கு வெளிப்படையாக கூறக்கூடாது; அவ்வாறு கூறினால், அந்த அதிகாரி மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
என்னை போன்ற அதிகாரிகள், சட்டத்தை மீறித் தான், ஊழல் மற்றும் லஞ்ச விவகாரத்தை வெளியில் சொல்ல முடிகிறது. எனவே, புதிதாக அமைய உள்ள அரசாவது, இ - -டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு ஊழியர்கள், வெளிப்படையாக கருத்துகளை தெரிவிக்க அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே, தமிழக அரசு துறைகளில் லஞ்சம், ஊழல் குறையும்.

ஆர்.தேவராஜ்
செயற்பொறியாளர்,
நீர் ஆய்வு நிறுவனம் பொதுப்பணி துறை  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக