வியாழன், 3 மார்ச், 2016

ரூ.1.65 கோடி மோசடி....சரத்குமார், ராதாரவி, சந்திரசேகர் ....நடிகர் சங்கம் புகார்

சென்னை : நடிகர் சங்கத்தில் பல கோடி ஊழல் செய்துள்ளதாக முன்னாள் தலைவர் சரத்குமார் மீது நடிகர் சங்கம் சார்பில் சென்னை, கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2015ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர் நடிகர் சரத்குமார். நடிகர் சங்க கட்டட விவகாரம் பூதாகரமாக வெடிக்க, 2015ம் ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை எதிர்த்து விஷால் தலைமையிலான இளம் நடிகர்கள் களம் இறங்கினர். இதில் விஷாலின் பாண்டவர் அணியினர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று நடிகர் சங்க பொறுப்பை கைப்பற்றினர்.


புதியவர்கள் வெற்றி பெற்ற உடனேயே எஸ்பிஐ., சினிமாஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக சரத்குமார் அறிவித்தார், அதோடு தான் எந்த குற்றமும் செய்யவில்லை, என் மீது எந்த தவறும் இல்லை, சங்க நலத்திற்காகவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது என்று கூறினார். இதனிடையே நடிகர் சரத்குமார், சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிவர ஒப்படைக்கவில்லை என்றும், இதுதொடர்பாக அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகர் சங்கம் தொடர்ந்து அவருக்கு பலமுறை எச்சரித்தது.

இந்தச்சூழலில் நேற்றுமுன்தினம் நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது. குறிப்பாக சரிவர கணக்கை ஒப்படைக்காத, சங்கத்தின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் மீதும், என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் ஆலோசித்து உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தபோது சரத்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது பலகோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக நடிகர் சங்கத்தின் அறக்கட்டளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சரத்குமார் மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் போடப்பட்டது. அதைத் தொடர்ந்து அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ள பூச்சி முருகன், இன்று (மார்.3ம் தேதி) சென்னை கமிஷனர் அலுவலம் சென்று சரத்குமார், ராதாரவி மற்றும் சந்திரசேகர் மீது ஊழல் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சரத்குமார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

சரத்குமார் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் பூச்சி முருகனிடம் நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் நமக்கு அளித்த பதில் இதோ...

நடிகர் சங்கம் தேர்தல் முடிந்து ஐந்து மாதமாகிவிட்டது. சங்கத்தின் கணக்கு வழக்குகளை ஒப்படைக்க சொல்லி முன்னாள் தலைவர் சரத்குமாருக்கு நான்கு முறை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தில் இரண்டு விதமான கணக்குகள் பரமாரிக்கப்பட்டு வருகிறது. ஒன்று அறக்கட்டளை கணக்கு மற்றொன்று சங்க கணக்கு.

ரூ.1.65 கோடி மோசடி
தற்போது, அறக்கட்டளையில் உள்ள முறைகேடு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், 252 பக்க அளவிற்கு கணக்கு வழக்கு பைல் பண்ணி ஆடிட்டர் கொடுத்துள்ளார். அதில் பல பொய்யான தகவல்கள், மொத்தமாக பணம் கையாடல், போலியான ரசீதுகள் என பல முறைகேடுகள் நடந்துள்ளது. சுமார் ரூ.1.65 கோடிக்கு மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை எங்கள் குழுவினரோடு புகாராக கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.
விஷால் பொதுச்செயலாளர் என்பதால் அவரிடம் கையெழுத்து வாங்கி, அறக்கட்டளையின் உறுப்பினர் நான் என்பதால் கமிஷனரிடம் சென்று சரத்குமார் மீது புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளோம்.

சரத்குமார், பலரிடமும் கணக்கு வழக்குகளை ஒப்படைத்துவிட்டேன் என பொய்யான தகவலை கூறி வருகிறார். இது ஏழைகளின் பணம், நடிகர்கள் வியர்வை சிந்தி சம்பாதித்த பணம், எனவே உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

இவ்வாறு பூச்சி முருகன் கூறினார்.

சரத்குமார் விளக்கம் : இதனிடையே புகார் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு சரத்குமார் தரப்பில் விளக்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் சங்கத்தில் நான் எந்த முறைகேடும் செய்யவில்லை, கார்த்தி, பூச்சி முருகன் கொடுத்திருக்கும் புகார் உண்மையில்லை. புகார் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று கூறியுள்ளார்.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக