திங்கள், 29 பிப்ரவரி, 2016

JNU மாணவர்களுடன் மார்ச் 3 சென்னை அசுரர் ஆர்ப்பாட்டம் !

rsyf-protest-for-jnu-2பொய்ப்பிரச்சாரம், தேசத்துரோக குற்றச்சாட்டு, தாக்குதல் என ஜே.என்.யு வை குறிவைத்து ஆர்.எஸ்.எஸ் வெறியாட்டம் போட்டு வருகிறது. இவற்றை எல்லாம் கண்டு மாணவர்கள் அஞ்சவில்லை. கடந்த 18 ந்தேதி 20,000 மாணவர்கள் திரண்டு நடத்திய ஊர்வலம் டெல்லியை உலுக்கியெடுத்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவாக இந்தியாவில் மட்டுமின்றி, ஐரோப்பிய, அமெரிக்க பல்கலைக்கழக மாணவர் அமைப்புகளும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்கள். பி.சாய்நாத் உள்ளிட்ட அறிவுத்துறையினரும், சர்வதேச அளவில் புகழ் பெற்ற நோம் சோம்ஸ்கியும், நோபல் பரிசு வென்ற பல அறிஞர்களும் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், உலகம் சுற்றும் வாலிபனான மோடியை ஆதரிக்க உலகத்தில் ஒரு ஆள் இல்லை. உள்ளூரிலும் ஒரு கட்சி இல்லை.

உலகப் புகழ்பெற்ற 100 பல்கலைக் கழகங்களில் ஒன்று ஜே.என்.யு. அனைத்து மாநில மாணவர்களும் இங்கு படிக்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர், மாணவர் மூன்று தரப்பும் சேர்ந்து நிர்வாகம் செய்யும் ஜனநாயகப்பூர்வமான முறை ஜே.என்.யு வைத்தவிர நாட்டில் வேரெங்கும் இல்லை. பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகள் குறித்து நடக்கும் விவாதங்களும், அதையொட்டிய போராட்டங்களும் அங்குள்ள ஜனநாயகத்தை பறைசாற்றும். 1975-ல் அவசர நிலை அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்துப் போராடினார்கள். தற்போது மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைதுத்தரப்பு மக்களின் உரிமைகளை நசுக்கிவரும் மோடி ஆட்சியின் அறிவிக்கப்படாத அவசர நிலையை எதிர்த்து துணிவுடன் போராடி வருகிறார்கள் ஜே.என்.யூ மாணவர்கள். பிரதமராக மோடி அதிகாரத்திலிருந்தாலும் ஜே.என்.யு மாணவர் சங்க தேர்தலில் ஏபிவிபிக்கு டெபாசிட்கூட கிடைக்கவில்லை. இவைகளால்தான் பார்ப்பன பாசிச கும்பல் ஜே.என்.யு தேசவிரோதிகளின் கூடாரம் என்று வெறிகூச்சல் போடுகிறது.
இது முதல்தடவையல்ல, உயர்க் கல்வி நிறுவனங்களை காவிமயமாக்க அவர்கள் செய்யும் நான்காவது முயற்சி இது. சென்னைஐ.ஐ.டி யில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் போர்க்குணத்துடன் போராடியதும், நாடெங்கும், உலகம் முழுவதும் ஆதரவுப் போராட்டங்கள் பெருகியதாலும் பின்வாங்கினார்கள். பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிச கும்பலுக்கு விழுந்தது முதல் மரண அடி.
சென்னை ஐஐடி யில் தேச விரோதிகள் செயல்படுகிறார்கள் என்று பார்ப்பன ஆசிரியர்கள் மொட்டைக் கடிதம் போட்டார்கள். உடனே அ.பெ.ப.வ க்கு தடை. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தேசத்துரோகிகள் உலவுகிறார்கள் என்று பி.ஜே.பி அமைச்சர் பண்டாரு கடிதம் எழுதினார். உடனே அம்பேத்கர் மாணவர் அமைப்பின் மீது நடவடிக்கை. வெமுலா ’தூக்கிலேற்றப்பட்டார்’. இப்போது ஜே.என்.யு விலும் அதே தேசவிரோத பாட்டை பாடினார்கள். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவின் பேரில் தேசதுரோக வழக்கு, மாணவர் பேரவைத் தலைவர் கன்னையா கைது. மாணவர்கள் மீது அடக்குமுறை.
அப்சல் தூக்கை எதிர்த்தார்கள் என்பதுதானே குற்றச்சாட்டு. தமிழகத்தில் நாம் மூவர் தூக்கை எதிர்க்கவில்லையா? அப்சல் தூக்கு அநீதி என்று பேசாதவர்கள் யார்? ஆதாரம் இல்லை; ’’தேசத்தின் மனசாட்சிப்படி தண்டனை ’’ என்பதுதானே தீர்ப்பு. இப்போது ப.சிதம்பரமே அதை கூறவில்லையா?
கண்ணையா குமார், “மனுவாதிகளிடமிருந்து விடுதலை” “வறுமையில் இருந்து விடுதலை” “புதிய பொருளாதாரக் கொள்கைகளில் இருந்து விடுதலை” “பார்ப்பனியத்திடமிருந்து விடுதலை”, “ஆர்.எஸ்.எஸ் இடமிருந்து விடுதலை” என்று உணர்வு பொங்க ஆற்றிய உரையாற்றினார். இந்த பேச்சை போர்ஜரி வேலை செய்து 9ம் தேதி கூட்டத்தில் ஏ.பி.வி.பி ரவுடிகள் எழுப்பிய கூச்சல்களில் இருந்து “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” “காஷ்மீர் விடுதலை” போன்ற முழக்கங்களை வெட்டி ஒட்டி வீடியோவை தயாரித்திருக்கிறது. அதைத்தான் ஜீ தொலைக்காட்சி, டைம்ஸ் நவ் மற்றும் நியூஸ் எக்ஸ் போன்ற சேனல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி, ”மத்திய அரசு ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது?” என்று கேள்வி எழுப்பி “தேசதுரோக” குற்றச்சாட்டுகளுக்கு மேலும் போலியான ஏவுதளம் அமைக்கப்பட்டது.
வீடியோ பொய்; பாகிஸ்தான் வாழ்க என்று மாணவர்கள் முழக்கம் போட்டதாக சொன்னது பொய்; அப்படி முழக்கம் போட்டவர்கள் முகமூடி அணிந்த ஏபிவிபி காலிகள் என்பதே மெய். மாணவர் உமர் முஸ்லிம் தீவிரவாதி என்றார்கள். அவர் நாத்திகர், கம்யூனிஸ்டு என்று அவர் குடும்பம் சொல்கிறது, சக மாணவர்கள் கூறுகிறார்கள். உமர் பாகிஸ்தான் சென்றவர் என்றார்கள். எனக்கு பாஸ்போர்ட்டே இல்லை என்று உமரே சொல்கிறார். டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வைத்து கன்னையாவை வக்கீல் போர்வையில் பி.ஜே.பி எம்.எல்.ஏ தாக்கினான். அது யாரோ ஒரு ரவுடி என்பது போல சித்தரிக்க முயற்சித்தார்கள். ஆனால், நான் தான் அடித்தேன் என்று அந்த எம்.எல்.ஏ பெருமையாக பேசினான். இதையெல்லாம்விட பாராளுமன்றத்தில் ஸ்மிருதி இரானி துர்க்கையை விபச்சாரி என்று மாணவர்கள் திட்டினார்கள் என்று மற்றொரு பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார். (இவர் சொல்லும் துர்க்கையின் யோக்கியதை அம்பேத்கர் தோலுரித்திருக்கிறார்.) மாணவர்களுக்கு எதிராக பி.ஜே.பி சொன்னது ஒவ்வொன்றும் பொய் என்று அம்பலமாகி நாறுகிறது.
இவர்கள் நோக்கம் என்ன? ஏ.பி.வி.பி தவிர யாரும் கல்வி நிறுவனங்களில் இருகக் கூடாது என்பதுதான். பெரியார், அம்பேத்கர், இடதுசாரி கூடாது. அறிவு, அறிவியல் எதுவுமே கூடாது. ஹிட்லரின் வாரிசுகள்தானே இவர்கள். இந்துமதவெறி பாசிசத்தை அம்பலப்படுத்திய தபோல்கர், பன்சாரே, கல்புர்க்கியை கொலை செய்த பயங்காரவாதிகள்தான் இவர்கள்.
மாட்டுக்கறி வைத்திருந்தார் என தாத்ரியில் அக்லக் எனும் முஸ்லீமை கொன்றார்கள். சாதி மதம் மாறி காதலிக்க கூடாது; ஏன் காதலே கூடாது; லவ் ஜிகாத்தை அறிவித்து காதலர்களை தாக்கினார்கள். இட ஒதுக்கீடு கூடாது; அரசுக் கல்லூரி கூடாது; பன்னாட்டு கல்வி – பணக்காரன் – ஆதிக்க சாதி மட்டுமே படிக்க வேண்டும் என்கிறார்கள். சிபிஎஸ்இ எனும் மத்திய பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக திணிப்பு, வரலாற்றை திரிப்பது. நாட்டிலுள்ள பல்தேசிய இனங்களின் மொழி, கலாச்சரம், மதம் ஆகியவர்றை அழித்துவிட்டு, நாட்டை பார்ப்பனியமயமாக்க இந்து – இந்தி – இந்தியா எனும் தங்கள் நீண்டகால திட்டத்தை அரங்கேற்றுவது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் உண்மையான நோக்கம். இதை மறைக்கத்தான் தேசிய ஒருமைப்பாடு, தேசபக்தி, பிரிவினைவாதம், தீவிரவாதி என்றெல்லாம் பீலா விடுகிறார்கள்.
ஆங்கிலேய காலனியாட்சியாளர்களால் இந்த நாட்டை சுரண்டுவதற்கும் ஒடுக்குவதற்கும் உருவாக்கப்பட்டதுதான் இந்தியா. அவன் உருவாக்கியதுதான் இந்துமதம். அதற்கு முன்பு பல தேசிய இனங்கள், கலாச்சாரப் பிரிவுகள், பல்வேறு மதங்கள், பல்வேறு பழங்குடி மக்கள் என பன்முகத்தன்மை கொண்ட தனித்தனி பிரிவுகளாகத்தான் இந்த நாடு இருந்தது. டாடா, அம்பானி, அதானி, பிர்லா போன்ற தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் – சேட்டுகளுக்களின் ஒடுக்குமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் இந்து இந்தி இந்தியா எனும் பூனுலால் கட்டப்பட்டிருப்பதுதான் இன்றைய இந்தியா. இது தேசிய இனங்களின் சிறைக்கூடம்; ஒடுக்கப்பட்ட மக்களின் வதைக்கூடம். அமெரிக்க உட்பட ஏகாதிபத்திய வல்லரசுகள் – பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் வேட்டைக்காக இந்த நாட்டை மறுகாலனியாக்குபவர்கள் தான் ’தேசபக்த’ ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி இந்துத்துவாவாதிகள்.
தேசவிரோத முத்திரைக்குத்தி வெமுலாவை பட்டினி போட்டு, தெருவுக்கு துரத்தி கொன்றார்கள். இன்று ஜே.என்.யு மாணவர்கள் மீது தேசதுரோக வழக்குப் போட்டு கைது, 8 மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஏழை தலித், பழங்குடியினர். உமர் வசதியற்ற முஸ்லிம் குடும்ப மாணவர். இத்தகைய உழைக்கும் வர்க்க பின்னனியில் வந்து ஜனநாயக, முற்போக்கு வழியில் போராடும் மாணவர்களை மட்டும் துரத்தவில்லை. ஜே.என்.யு வையே மூடு என்கிறார்கள்.
இந்த அரசு மாணவர்களின் எதிரி. இது டெல்லி பிரச்சினை அல்ல, நம்முடைய ஒட்டுமொத்த மாணவ சமூகத்தின் பிரச்சினை. எங்கேயோ உ.பி யில் பாபர் மசூதியை இடித்து ராமன் கோயில் கட்டு என்று நாட்டையே கொளுத்தினார்கள். அப்பாவிகளை கொன்றார்கள், அப்படி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த பிஜேபி கட்சி. பாபர் மசூதியை இடி என்றதும் ஜே.என்.யு வை மூடு என்பதும் வேறு வேறல்ல. அன்று மக்கள் ஏமாந்ததால் இடித்து விட்டார்கள். இன்று அவர்களை நம்ப யாரும் தயாராக இல்லை. ஒரு ஆள் கூட ஆதரிக்கவில்லை.
இந்தி ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது தமிழகத்தின் மாணவர் போராட்டம். இந்தி – இந்து – இந்தியா என்ற பார்ப்பன பாசிஸ்டு கும்பலின் சதியையும் தமிழக மாணவர்களாகிய நாம் தடுத்து நிறுத்திக் காட்டுவோம்!  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக