வியாழன், 18 பிப்ரவரி, 2016

லக்னோ..திருமண கொண்டாட்ட துப்பாக்கி வெடித்து மணமகன் பலி

லக்னோ உத்தர பிரதேசத்தில் திருமண விழா ஒன்றில் மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தவறுதலாக மணமகன் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூர் என்ற பகுதியில் நேற்று இரவு மித் ரஸ்தோகி என்ற 28 வயது நபருக்கு திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவில் மணமகனை குதிரையில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது மகிழ்ச்சி கொண்டத்திற்காக வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளது. 
 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிலர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக குதிரை மேல் உட்கார்ந்திருந்த மாப்பிள்ளையின் தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த அவர் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் சிதாபூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரஸ்தோகி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்செயலாக நடந்த துப்பாக்கி சூட்டில் பலியாகி விட்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண ஊர்வலத்தில் மணக்கோலத்தில் இருந்த மணமகன் உயிரிழந்த சம்பவம் திருமண வீட்டாரையும் அப் பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் பஞ்சாயத்து தேர்தல் முடிவு வெளியான பின் ஷாம்லி நகரில் கொண்டாட்டத்திற்காக நடந்த துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது
/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக