வியாழன், 4 பிப்ரவரி, 2016

அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலை எதிர்க்கமுடியாதா?” சட்டப் பஞ்சாயத்து இயக்கம் கண்டனம்

அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழலை எதிர்க்கமுடியாதா?” சட்டப் பஞ்சாயத்து
இயக்கம் கண்டனம்
அரசுப் பணியாளர்கள் மீதான இலஞ்ச, ஊழல் புகார்கள் கூறவேண்டும் என்றால், அரசின் அனுமதி பெறவேண்டும் என தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் முன்னர் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில்தான், இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டாலும், இலஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்கங்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ. இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இலஞ்ச-ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தேவை என சமூக அமைப்புகள் போராடிவரும் சூழலில், இந்த அரசாணையானது ஊழல்வாதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் விதத்தில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், ”இதற்கு முன்னர், உயர்நிலை அலுவலர்களின் மீது ஊழல் வழக்குகள் தொடர அரசின் முன் அனுமதிபெறவேண்டும் என்ற நிலை இருந்தது; இது அரசு ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுகிறது மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று வழக்கு தொடுக்கப்பட்டது.
உண்மையிலேயே, இந்த அரசாங்கம் இலஞ்ச-ஊழலை ஒழிக்கும் எண்ணத்தில் இருந்திருந்தால், இனிமேல் எந்த  நிலை அரசு ஊழியர் மீதும் ஊழல் புகார் வந்தால் அரசின் முன் அனுமதி இன்றி DVAC வழக்குதொடுக்கலாம் என்று அரசாணை வெளியிட்டிருக்கலாம். அதற்குபதிலாக, அனைத்துநிலை ஊழியர்கள் மீதும் வழக்குத்தொடர அரசின் முன் அனுமதி பெறவேண்டும் என்று அரசாணை வெளியிட்டிருப்பது, இலஞ்சத்தில் திளைக்கும் அரசு ஊழியர்களுக்குத்தான் சாதகமாக முடியும். இந்த அரசாணையை உடனே திரும்பப்பெறவேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது.

ஆதாரத்துடன் இலஞ்ச-ஊழல் புகார் வந்தால், முதல் அமைச்சர், மந்திரிகள், உயர் அதிகாரிகள் உட்பட அனைவரது அலுவலகம், வீடுகளில்கூட எந்த முன் அனுமதியும் இன்றி சோதனையிடும் உரிமை பெற்ற தன்னிச்சையாக செயல்படும்(Independent) இலஞ்ச-ஊழல் ஒழிப்பிற்கான  “லோக் ஆயுக்தா” சட்டத்தை 2015ம் ஆண்டு ஜனவரி மாதமே தமிழக அரசு நிறைவேற்றியிருக்கவேண்டும். ஆனால், ஒரு ஆண்டு தாமதமாகியும் பல்வேறு சிறு காரணங்களைச் சுட்டிக்காட்டி ”லோக் அயுக்தா” சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசு மறுக்கிறது.>ஆளுங்கட்சியினர், வாக்குச்சாவடி முறைகேடுகளில் ஈடுபடும்போது அதனை அரசு ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு இந்த அரசாணை உதவும் என்று ஆளுங்கட்சி எண்ணுகிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

மேலும் இந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ள “….ஊழல் கண்கானிப்பகம்(Vigilance Commission)” , அரசு தரும் குறிப்பின் (Remarks) அடிப்படையில் முடிவெடுக்கவேண்டும்” என்ற வரிகள் தெளிவில்லாததாக இருக்கிறது. “அரசு” என்றால் யார்..?  முதலமைச்சரா..? அமைச்சரா? தலைமைச் செயலாளரா..? . யாராக இருந்தாலும் அது தவறான வழிமுறையாகத்தான் இருக்கும். ஏனெனில், அமைச்சர் மீதோ, தலைமைச் செயலர் மீதோ புகார் வந்தால் எப்படி அவர்களே அவர்கள் மீது வழக்குத்தொடர அனுமதியளிக்கமுடியும்?” என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக