வியாழன், 4 பிப்ரவரி, 2016

ராகுலை சந்தித்த விஜயதாரணி....என்ன தவறு கண்டீர்கள்?

டெல்லி: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. விஜயதாரணி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார். விளவங்கோடு சட்மன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராகவும் பதவி வகித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மகளிரணி தலைவராக ஜான்சிராணி நியமிக்கப்பட்டார் இது தொடர்பாக காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுலை சந்தித்து விளக்கம் அளிக்க இருப்பதாக விஜயதாரணி கூறிவந்தார். இதனிடையே நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளித்தார்
விஜயதாரணி. இதையடுத்து அவர் அதிமுகவில் இணையலாம் என்ற வதந்தி பரவியது. இந்நிலையில் டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து விஜயதாரணி விளக்கம் அளித்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயதாரணி, "ராகுல் காந்தியை சந்தித்து தமிழக காங்கிரஸில் தற்போது ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் குறித்து பேசினேன். மேலும், இந்த பிரச்சினையில் எனது நிலை குறித்தும் தெளிவாக விளக்கமளித்தேன். பல ஆண்டுகளாக நான் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றியதையும், கட்சிக்காக நான் செய்த தன்னலமற்ற பணிகள் குறித்தும் ராகுலிடம் எடுத்துரைத்தேன். நான் காங்கிரஸ் கட்சியிலேயே தொடர்ந்து செயல்படுவேன். வேறு கட்சியில் சேருவதற்காக யாரையும் நான் சந்திக்கவில்லை. மத்திய தலைமையின் ஆதரவு எனக்கு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவனுடன் கருத்து வேறுபாடு என கூறப்படும் விவகாரத்தில் என் மீது எந்த தவறும் இல்லை என்று ராகுலிடம் விளக்கமளித்தாக விஜயதாரணி கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக