திங்கள், 15 பிப்ரவரி, 2016

சொற்களை வாசிக்கும் நாய்....லண்டனில் அதிசயம்

காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு,  அதன்படி செயல்படும் அதிசய நாய் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் வளர்க்கப்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக வாயால் உத்தரவிடப்படும் வார்த்தை ஒலிகளை புரிந்துகொண்டு அல்லது கைகளால் காட்டப்படும் செய்கைகளை பார்த்து அதன்படி செயல்படும் நாய்களைதான் இதுவரை பார்த்துள்ளோம். ஆனால், தற்போது முதன் முதலாக, காகிதத்தில் எழுதப்பட்டுள்ள ஆங்கில வார்த்தைகளை படித்து புரிந்துகொண்டு அதன்படி செயல்படும் ஒரு அதிசய நாய் இங்கிலாந்தில் பள்ளி ஒன்றில் வலம் வந்துகொண்டு இருக்கிறது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டோல் நகரில் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதற்கு நிக் கார்டனர்(38) என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இந்த பள்ளியில்தான் பெர்னி என்ற பெயருடைய 2 வயது நாய் ஒன்று குழந்தைகளுடன் எப்போதும் வலம் வந்துக்கொண்டு இருக்கிறது.

பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்கும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதத்தில் நிக் கார்டனர் ஒரு அதிசயத்தக்க பயிற்சியில் ஈடுபட்டார். அதாவது, பெர்னி என்ற அந்த நாய்க்கு வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன் செயல்பட பயிற்சி அளித்து வந்துள்ளார். இதன் பலனாக, தற்போது 4 வார்த்தைகளை படித்து புரிந்துகொண்டு, அதன்படி பெர்னி செயல்பட்டு பள்ளி குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

உதாரணமாக, எந்த ஒலியும் எழுப்பாமலும், கைகளால் சைகைகளை காட்டாமலும் காகிதத்தில் ‘Sit’(தரையில் அமர்) என்ற ஆங்கில வார்த்தையை காட்டினால், அதனை பார்த்துவிட்டு அந்த நாய் தரையில் அமரும். ’Down’ என்ற வார்த்தையை காட்டினால், உடனே தரையில் படுக்கும். ‘Roll Over’ என்ற வார்த்தையை காட்டினால், தரையில் படுத்து உருளும். இறுதியாக, ‘Spin Around’ என்ற வார்த்தையை காட்டினால், அந்த நாய் அதே இடத்தில் சுற்றி சுற்றி வரும்.

இந்த அதிசயம் குறித்து நிக் கார்டனர் கூறுகையில், "பள்ளி குழந்தைகளுக்கு கற்கும் ஆவலையும் தன்னம்பிக்கையையும் உண்டாக்கும் எண்ணத்தில்தான் நாய்க்கு வார்த்தைகளை புரிந்துகொள்ளும் பயிற்சியை அளித்தேன். இந்த ஆங்கில வார்த்தைகளை வரிசை மாற்றி காட்டினாலும் கூட, அந்த வார்த்தையை பார்த்து புரிந்துகொண்டு செயல்படும். இதற்கு முதலில் Sit என்ற வார்த்தையை காகிதத்தில் எழுதி அதனை நாயிடம் காட்டிக்கொண்டு ‘Sit’ என வாயால் ஒலி எழுப்புவேன். பின்னர், நாளடைவில், ஒலியை எழுப்பாமல் வார்த்தையை மட்டுமே காட்டியபோது அதனை புரிந்துக்கொண்டு நாய் செயல்பட்டு வருகிறது. இதுபோன்று 20 வார்த்தைகளை இந்த நாய் புரிந்துகொள்ளும். இதற்கு கூடுதலான பயிற்சிகள் அளிக்க உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். விகடன்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக