சனி, 13 பிப்ரவரி, 2016

எந்த கூட்டணியில் சேர்வது? சிறிய கட்சிகள் குழப்பம்

தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுமே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி இந்திய குடியரசு கட்சி, தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவை, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தேர்தலுக்கு பின்னர், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை கூட்டணியில் இருந்து வெளியேறி, தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தன.
இதில் புதிய தமிழகம் கட்சியை பொறுத்தவரையில் தி.மு.க. அணியில் நீடிப்பது போன்ற தோற்றமே காணப்படுகிறது. அதே நேரத்தில், மனித நேய மக்கள் கட்சியின் மனநிலையில் மாற்றம் இருப்பது தெரிகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அணியிலேயே நீடிக்க அக்கட்சி விரும்புகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அக்கட்சியின் செயல்பாடு அ.தி.மு.க.வுடன் மீண்டும் நெருக்கத்தை ஏற்படுத்துவது போலவே இருந்தது.
சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரையில் அக்கட்சியின் துணை தலைவரான எர்ணாவூர் நாராயணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் நீக்கம் ஆகியவற்றால் அக்கட்சியிலும் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி சேர சமத்துவ மக்கள் கட்சி தயாராகி விட்டதாக செய்திகள் வெளியானது. இதனை அக்கட்சி தலைவர் சரத்குமார் திட்டவட்டமாக மறுத்தார். அ.தி.மு.க. அணியிலேயே ச.ம.க. நீடிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை கூட்டணியில் இருந்து விலகிச் சென்று விட்டன. அக்கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், ஈஸ்வரன் தலைமையிலான கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகியது.
புதிய அணியில் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என்று ஈஸ்வரன் அறிவித்துள்ளார். இன்னும் பல குட்டிக் கட்சிகளும் எந்தப் பக்கம் சாய்ந்தால் வெற்றிக்கனியை பறிக்கலாம் என்கிற எண்ண ஓட்டத்துடன் காய் நகர்த்தி வருகின்றன.
கடந்த தேர்தலில் இடம் பெற்றிருந்த கூட்டணியிலேயே இந்த சட்ட மன்ற தேர்தலிலும் நீடித்தால் நன்றாக இருக்கும் என்று சில குட்டி கட்சிகள் கனவு கண்டு கொண்டிருக்கின்றன. ஆனால் அக்கூட்டணியில் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது. அதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் எதிர் அணிக்கு தாவுவதற்கு அக்கட்சிகள் தயாராகவே உள்ளன.
இதனால் ஒரு சில குட்டி கட்சிகள் கலங்கி தவித்து வருகின்றன. தேர்தல் நெருங்கும் நேரத்தில், தங்களது இந்த மனக்கலக்கத்துக்கு நல்ல மருந்து கிடைக்கும் என்று அக்கட்சிகள் காத்திருக்கின்றன. கூட்டணியை பொறுத்தவரையில், யார்? எந்தப்பக்கம் போவார்? இருக்கிற கூட்டணிகள் அப்படியே நீடிக்குமா? என்பதையெல்லாம் தற்போது துல்லியமாக கணிக்க முடியாத சூழலே உள்ளது. எனவே அடுத்தடுத்த நாட்களில் கூட்டணி மாற்றங்கள் அதிரடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக