ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

கண்ஹையா குமார்: வழகுரைஞர்கள் போலீசார் முன்னிலையிலேயே என்னை தாக்கினார்கள்

தினமணி.com :தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது போலீஸார் முன்னிலையில் தனக்கு காயம் ஏற்படும் அளவுக்கு வழக்குரைஞர்கள் குழு தாக்குதல் நடத்தியது என்று விசாரணைக் குழுவிடம் ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் முறையீடு செய்தார். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதி அஃப்சல் குருவை நினைவுகூர்ந்து ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் கடந்த 9-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர். அப்போது தேசத்துக்கு விரோதமாக கோஷமிடப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமாரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரை விசாரணைக்காக தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்துக்கு கடந்த 15, 17 ஆகிய தேதிகளில் அழைத்து வந்தபோது வன்முறை வெடித்தது.
குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த வழக்குரைஞர்களும், அவர்களோடு வந்த கும்பலும் சேர்ந்து கன்னையா குமார், பிற ஜேஎன்யு மாணவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடத்தியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் கபில் சிபல், ராஜீவ் தவான், துஷ்யந்த் தவே உள்ளிட்டோர் அடங்கிய 6 நபர் விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது.
அந்தக் குழுவினர் கன்னையா குமாரிடம் சனிக்கிழமை விசாரணை நடத்தினர். அப்போது தன் மீதான தாக்குதல் குறித்து அவர் கூறியதாவது:
என்னை நீதிமன்ற வளாகத்துக்குள் காவல் துறை அழைத்து வந்தபோது வழக்குரைஞர்களோடு இணைந்து வந்த ஒரு கும்பல் என்னைத் தாக்கியது. அப்போது, என்னுடன் வந்த காவல் துறை அதிகாரிகள் என்னைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களும் தாக்குதலுக்கு ஆளானார்கள்.
மற்றொரு சமயத்தில் நான் தாக்கப்பட்டபோது காவல் துறை எதுவுமே செய்யவில்லை. இன்னொரு முறை வன்முறைக் கும்பல் எனக்கு காயம் ஏற்படும் அளவுக்கு தாக்கியது. அப்போது நான் கீழே விழுந்து விட்டதால் காவலர்கள் என்ன செய்தார்கள் என்பதை அறிய முடியவில்லை என்றார் கன்னையா.
அடையாளம் காட்டுவேன்: அதேவேளையில், தாக்குதல் நடத்தியவர்களையும், அப்போது உடனிருந்த காவலர்களையும் அடையாளம் காட்ட முடியுமா? என்று கன்னையாவிடம் விசாரணைக் குழு கேள்வி எழுப்பியது.
இதற்கு அவர் பதில் அளிக்கையில், "என்னால் அடையாளம் காட்ட முடியும். என் மீது முதலில் தாக்குதல் நடத்தியவரை நன்றாகத் தெரியும். அவர் தாக்குதல் நடத்தியபோதே காவல் துறையிடம் முறையிட்டேன்' என்று தெரிவித்தார்.
மேலும் ஒரு மாணவர் சரண்
தேச விரோத வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் ஆஷுதோஷ் தில்லி காவல் துறையிடம் சனிக்கிழமை சரணடைந்தார்.
முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா, ஆஷுதோஷ், ராம நாகா, அனந்த் குமார் ஆகிய 5 மாணவர்களை காவல் துறையினர் தேடி வந்தனர்.
அவர்களில் உமர் காலித், அனிர்பான் ஆகிய இரு மாணவர்கள் கடந்த வாரம் சரணடைந்தனர். ராம நாகா, அனந்த் குமார் ஆகிய இருவரும் தாங்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் ஆஜராகத் தயாராக இருக்கிறோம் என்று காவல் துறைக்கு கடிதம் எழுதினர்.
இந்நிலையில், மற்றொரு மாணவரான ஆஷுதோஷுக்கு காவல் துறை சம்மன் அனுப்பியது. இதைத்தொடர்ந்து தில்லி காவல் துறையிடம் அவர் சனிக்கிழமை சரணடைந்தார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, உமர் காலித், அனிர்பான் பட்டாச்சார்யா ஆகிய இரு மாணவர்களின் போலீஸ் காவலை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக