ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

மீண்டும் சமஸ்கிருதத் திணிப்பா? ‘விடுதலை’யை சுட்டிக்காட்டி கலைஞர் கண்டனம்

வரும் கல்வியாண்டு முதல் மத்திய அரசின் கல்வி நிலையங்களில் கட்டாயப் பாடமாக சமஸ்கிருதம் கொண்டு வருவதை கண்டித்தும், வழக்கிழந்த சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதைக் தவிர்க்கவும், பல கோடி மக்களிடையே உயிரோட் டத்துடன் இருந்து வரும் பல்வேறு மொழிகளை பாதுகாத்திட வலியுறுத்தி திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (21.2.2016) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பா.ஜ.க. அரசு 2014ஆம்  ஆண்டில்  அமைந்ததற்குப் பிறகு, அடிப்படை வாதமான இந்துத்வாவின் அடை யாளமாகிய   சமஸ்கிருத  மொழியைத் திணிப்பதில் வேண்டுமென்றே  பிடிவாதமாக இருக்கிறது.  மத்திய அமைச்சர்களில் ஒரு சிலரும், அவர்களுக்குத் துணையாக சில அதிகாரி களும் இணைந்து சமஸ்கிருத மொழித்  திணிப்பை  இதுவரை மறைமுக நோக்கமாகக் கொண் டிருந்தவர்கள், தற்போது முகமூடியைக் கழற்றி விட்டு வெளிப்படையாகவே அத்தகைய முயற்சிகளில் வேக மாக  ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த முயற்சிகளில் ஒன்றாக,  இந்தியா முழுவதும்  மத்திய அரசின் கீழ் இயங்கும்  சி.பி.எஸ்.இ. மற்றும்  அய்.சி.எஸ்.இ. போன்ற  கல்விக் கூடங்களில் வரும்  கல்வியாண்டு முதல்  (2016-_2017), சமஸ்கிருதம்  மூன்றாம்  மொழிப் பாடமாகக் கற்பிக்கப்படும் என்று   மத்திய உள்துறை அமைச்சகம் உத்தர விட்டுள்ளது.   டில்லி யில்  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் தலைமையில் நடைபெற்ற  கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், வரும் கல்வி ஆண்டில்  செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதித்திருக்கிறார் கள்.   அப்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும்போது, “ஆங்கில மொழி மற்றும் மாநில மொழிகள் (தாய்மொழி) மாணவர்களுக்குத் தேவையாக  இருப்பினும்  நமது பரந்துபட்ட  கலாச்சாரத்தைக்  கற்பிக்கும் வகையில் சமஸ்கிருதம்  முக்கியத்துவப் படுத்தப்பட வேண்டும்.   தற்போது மத்திய அரசின் கீழ் இயங்கும்  பள்ளிகளில் இருமொழிப் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன.  கலாச்சாரத்திற்கு முக்கியத் துவம்  கொடுக்கும் வகையில் 3ஆவது மொழிப் பாட மாக  சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள் ளோம்.
வடமொழி திணிப்பு அச்சுறுத்தல்
ஆகவே வரும் கல்வியாண்டு முதல்  (2016-_2017) மத்திய அரசின் கீழ் வரும் அனைத்துக் கல்வி  நிலையங்களிலும்  கட்டாயப் பாடமாக  சமஸ்கிருதம் முன்னிலைப்படுத்தப்படும்.  மேலும் வரும் ஆண்டுகளில்  8ஆம் வகுப்புக்கு மேல்  12ஆம் வகுப்பு வரை  சமஸ்கிருத கல்வியைக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்“ என்று தெரிவித் திருக்கிறார்.   மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பிலிருந்து,  முதலில் வடமொழித் திணிப்பு, அடுத்து கலாச்சாரத் திணிப்பு தொடர்ந்து  இந்தியாவில் அரங்கேற உள்ளன என்ற அச்சுறுத்தலை அறிந்து கொள்ளலாம்.
‘விடுதலை’யில் மட்டும்தான் வந்துள்ளது
உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு குறித்து  ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேட்டியளித்த போது  இதே கருத்தினைத் திரும்பவும் கூறியதோடு,  மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சமஸ்கிருத மொழி நூல்களும்  விரைவில் அச்சிடப்பட்டு  அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படவுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.   இந்தச் செய்தியை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏடுகள் வெளியிடவில்லை என்ற போதிலும்,  நமது “விடுதலை”யில் மட்டும் தான்  இந்தச் செய்தி வந்துள்ளது.
சமஸ்கிருதம் வழக்கிழந்த மொழி  
இது போன்ற முக்கியமான முடிவுகளை பிரதமரிட மும்,   மத்திய அமைச்சரவையிடமும் விரிவாக விவா தித்து ஒப்புதல் பெற்று அதன் பின்னர் எடுக்காமல், அமைச்சர்கள் அளவில் மட்டும்  எடுப்பது  மிகப் பெரிய எதிர்ப்பினையும், நெருக்கடியையும் -   மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஏற்படுத்தும் என்பதால்,  பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு  வரும் கல்வி யாண்டிலிருந்து   மூன்றாவது  மொழியாக இந்தியாவில் ஒரு சில  ஆயிரம்  பேர் மட்டுமே அறிந்திருப்பதும்,  வழக்கிழந்ததுமான    சமஸ்கிருதத்தைக் கொண்டு வருவதைத் தவிர்த்து; இந்தியத் திருநாட்டின் பன்முகத் தன்மையினையும், பல கோடி மக்களிடையே  உயி ரோட்டத்துடன்  இருந்து வரும் பல்வேறு மொழிகளை யும் - அவற்றிற்கான  உரிமைகளையும் பாதுகாத்திட வேண்டுமென்று  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். விடுதலை.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக