புதன், 17 பிப்ரவரி, 2016

பாடியாலா நீதிமன்ற வாசலில் மாணவர் தலைவர் கண்ணைய்யா குமார் மீது தாக்குதல்

தில்லியில் உள்ள பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் ஜவஹர்லால் நேரு
பல்கலைக் கழக மாணவர் தலைவர் கண்ணைய்யா மீதான தேசத் துரோக வழக்கு விசாரணைக்காக வந்தபோது, வழக்கறிஞர்கள் சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்;அதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, பத்திரிகையாளர் ஒருவரும் நீதிமன்ற வாசலில் வைத்துத் தாக்கப்பட்டார். காவல்துறையினர் அந்தத் தாக்குதலைத் தடுக்க முனையவில்லை என அவர் பிபிசியிடம் கூறினார்.
இந்திய நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அப்ஸல் குரு 2013ஆம் ஆண்டில்தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து பேரணி நடத்தியதற்காக கண்ணைய்யா கைதுசெய்யப்பட்டார். இந்தப் பேரணியில் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதற்கு முன்பும் கண்ணைய்யா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால் உச்ச நீதிமன்றம் கடும் விதிமுறைகளை விதித்திருந்தது.
இன்று நடந்த சம்பவத்தையடுத்து நிலைமையை அறிந்துகொள்ள வழக்கறிஞர்களின் குழு ஒன்று பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
 பாடியாலா நீீதிமன்ற வாயிலில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தும் தாக்குதலைத் தடுக்கவில்லையென குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது.
பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது செங்கற்கற்கள் வீசப்பட்டதாக அங்கு சென்ற பிபிசி செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
கண்ணைய்யா நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக, ஃபர்ஸ்போஸ்ட் இணையதளத்தைச் சேர்ந்த தாரிக் அன்வர் நீதிமன்றத்திற்கு வெளியில் தாக்கப்பட்டார்.
கண்ணைய்யாவின் ஆதரவாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களைத் தான் படம் பிடிக்க முயன்றபோது வழக்கறிஞர்கள் சிலர் தன்னைத் தாக்கியதாக பிபிசியிடம் அவர் கூறினார். வழக்கறிஞர்கள் சிலரால் தாக்கப்பட்ட ஃபர்ஸ்போஸ்ட் இதழின் செய்தியாளர் தாரிக் அன்வர்.

அவர்கள் அந்தப் படத்தை அழித்துவிட்டு, நீதிமன்ற அறைக்குள் அழைத்துச் சென்று என்னை தாக்கினார்கள் " என தாரிக் அன்வர் கூறினார். தனக்கு உதவ காவல்துறையினர் எதுவும் செய்யவில்லையென்றும் தாரிக் அன்வர் கூறினார்.
தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கண்ணைய்யா கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகங்கள் ஆகியவை கண்டனம் தெரிவித்திருக்கின்றன.
அரசின் இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சித்திருக்கின்றன.
இருந்தபோதும், தேச விரோத சக்திகளை கடுமையாக தண்டிக்க வேண்டுமென மத்திய அமைச்சர்கள் கூறிவருகின்றனர்.  bbc.tamil.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக