புதன், 17 பிப்ரவரி, 2016

டொனால்ட் ட்ரம்ப் – அமெரிக்காவின் ஐ.எஸ்.ஐ.எஸ் வேட்பாளர் !

donald-trump-3vinavu.com”நான் சீனாவை வைத்து அந்த ஆளை ஏதோ ஒரு வகையில் சீக்கிரத்தில் ஒழித்து விடுவேன்”
”அப்படியென்றால் அது அரசியல் படுகொலையாக இருக்குமா?”
”அதை விட மோசமான முறைகள் கூட இருக்கிறது. இவன் ரொம்ப மோசமான ஆள் தெரியுமில்லையா?
இது அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதி. நெறியாளர் பேட்டியெடுப்பது யாராவது மாபியா கும்பலின் தலைவனாக இருக்குமோ என்று நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? குழப்பமே வேண்டாம், பேசியது மிக பயங்கரமான கார்ப்பரேட் மாஃபியா தான் . ஆனால், கெடுவாய்ப்பாக மேற்படி கார்ப்பரேட் மாஃபியா தான் எதிர்வரும் அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக இருக்கும் வாய்ப்பு பெற்றவர். படுகொலையை விட மோசமாக ஏதோ செய்யப் போவதாக முழங்கியுள்ளார், டொனால்ட் ட்ரம்ப். இந்த ’நல்லவரின்’ வாயால் கெட்டவர் என்ற பட்டத்தைப் பெற்றிருப்பவர் கிம் ஜோங் உன், வட கொரிய அதிபர்.

உலக வரலாற்றிலேயே ஆக முட்டாள்தனமான தலைவர் என்கிற இழிபுகழ் பெற்ற ஜார்ஜ் புஷ்க்கு போட்டியாக அதே குடியரசுக் கட்சியில் இருந்து உதித்திருப்பவர் தான் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்கர்கள் எதிர் கொண்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிக எளிமையான தீர்வுகளை கைவசம் தயாராக வைத்துள்ளார் ட்ரம்ப்.
ட்ரம்ப்பின் தேர்தல் முழக்கம் அமெரிக்காவை ‘மீண்டும் உயர்ந்த தேசமாக்குவது’! அதற்காக அவர் வைத்திருக்கும் தீர்வுகள் என்ன?
அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? அதற்கு மெக்சிகன் குடியேறிகளும், இசுலாமியர்களுமே காரணம். அதற்கு என்ன தீர்வு? மெக்சிகன்கள் எல்லை தாண்டி வருவதை தடுக்க அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையே பெரிய மதில் சுவர் ஒன்றைக் கட்டினால் போயிற்று. சரி, அதற்கு அதிகமாக செலவாகுமே? அந்த செலவை மெக்சிக்கன் அரசாங்கத்திடம் இருந்து வசூலித்தால் முடிந்தது வேலை. சரி முசுலீம்களை என்ன செய்யலாம்? அவர்கள் மொத்தமாக நாட்டுக்குள் நுழைவதையே தடுத்து விட வேண்டியது தான். அப்போது போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தஞ்சம் கேட்டு வருபவர்களை என்ன தான் செய்வது? வெளியே போடா என்று கழுத்தைப் பிடித்து தள்ளி விட வேண்டியது தான்.
அமெரிக்காவின் மிகப் பெரிய பிரச்சினையே முசுலீம்கள் தான். அதற்கு என்ன ஆதாரம்? இரட்டை கோபுரம் தகர்க்கப் பட்ட போது ஆயிரக்கணக்கான முசுலீம்கள் நியூ ஜெர்சி மாநிலத்தில் கூடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். அதற்கு என்ன ஆதாரம்? அதைdonald-trump-1 நானே பார்த்தேன். அதற்கு என்ன ஆதாரம்? நான் பார்த்தது தான் ஆதாரம். வெளிநாட்டு முசுலீம்கள் உள்ளே வராமல் தடுப்பீர்கள், உள்நாட்டு முசுலீம்களை என்ன செய்வது? அவர்களின் மசூதிகளை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். சந்தேகம் வருபவர்களைப் பிடித்து அவர்களின் முகத்தை தண்ணீரில் முக்கியெடுத்து கடுமையான முறையி விசாரிக்க வேண்டும். கேட்கவே கொடுமையாக இருக்கிறதே? இது ஐ.எஸ்.ஐ.எஸ் பின்பற்றும் வழிமுறையை விட நாகரீகமானது தானே.
ஒபாமா அறிவித்துள்ள மருத்துவ காப்பீடு திட்டம் சரியில்லை. சரி என்ன செய்யலாம்? அதை மொத்தமாக தூக்கி கடாசி விட வேண்டும். அதற்கு பதில் வேறு என்ன திட்டம் உள்ளது? ஒபாமாவின் மருத்துவக் காப்பீட்டுக்கு பதில் அட்டகாசமாக ஏதாவது செய்து விட வேண்டியது தான் ( Something Terrific ). வெளியுறவுக் கொள்கை? எனக்கு ரசியாவின் புடினை டீலிங் செய்வது ரொம்ப சுலபம்.. வெளியுறவுகளையெல்லாம் ஒரு கை பார்த்துடலாம்.
மேலே இருக்கும் உளறல் வன்முறைகள் எல்லாம் டொனால்ட் ட்ரம்ப் கடந்த மூன்று மாதங்களாக வாய் வழியே கழிந்து வைத்தவைகளில் ஒரு சிறு துளி. இவை தவிர எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் ஹிலாரி கிளிண்டனை பாலியல் ரீதியில் விமர்சித்தது, தனது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் சக போட்டியாளரை “பீப்” வார்த்தையில் விளித்தது என்று டொனால்ட் ட்ரம்பின் வாய்க் கொழுப்பிற்கு நீண்ட பட்டியலே உண்டு.
இவை தவர பொருளாதாரம் குறித்தும், வரி விதிப்பு முறைகள் குறித்தும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி நிலை குறித்தும், அமெரிக்காவின் தேங்கிய பொருளாதாரம் குறித்தும் டொனால்ட் ட்ரம்ப் உதிர்த்த முத்துக்களைக் கோர்த்தால் அந்த மாலையை வைத்து இமயமலையை நாலைந்து சுற்று சுற்றிக் கட்டியே விடலாம்.
சுருக்கமாகச் சொன்னால் நரேந்திர மோடியின் பாசிச மூர்க்கத்தனமும் ஜார்ஜ் புஷ்சின் ஏகாதிபத்திய எகத்தாளமும் சேர்ந்து செய்த கலவை தான் டொனால்ட் ட்ரம்ப். மேற்கத்திய ஊடகங்கள் மற்றும் தனிப்பட்ட வலைப்பதிவர்கள் தற்போது டொனால்ட் ட்ரம்பின் முட்டாள்தனமான உளறல்களுக்கு அதிக முக்கியத்துவம் செய்து கேலியும் கிண்டலுமாக எழுதி வருகின்றனர்.
donald-trump-8எனினும், ஊடகங்களின் கேலி கிண்டல்களைத் தாண்டி ட்ரம்ப் தொடர்ந்து வேட்பாளருக்கான போட்டியில் முன்னணி பெற்று வருகிறார். குடியரசுக் கட்சியினரிடையே எடுக்கப்படும் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து முதலிடமும் பெற்று வருகிறார். படிப்பறிவில்லாத அமெரிக்கர்களிடமும் குறிப்பாக வெள்ளை நிறவெறியர்களிடமும் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு உயர்ந்து வருகிறது. வெளிப்படையாக செயல்பட முடியாத கூ க்ளஸ் க்ளான் என்கிற நிறவெறி அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் நோக்கங்களை குடியரசுக் கட்சி முக்காடுடன் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அந்தக் கட்சியில் சேர்வது வழக்கமான ஒரு போக்கு – தற்போது குடியரசுக் கட்சியிலேயே இருக்கும் ஆகப் பிற்போக்கான வலதுசாரிகளும், நிறவெறியர்களும் டொனால்ட் ட்ரம்பின் வருகையைத் தொடர்ந்து சுறுசுறுப்படைந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப்பை விமர்சிக்கும் ஜனநாயக கட்சி சார்புடைய ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரது பேச்சுக்களும் செயல்பாடுகளும் அமெரிக்கத்தனையுடையது அல்ல (Un American) என்று எழுதுகின்றனர். எனினும், அதிகரித்து வரும் டொனால்ட் ட்ரம்ப்பின் செல்வாக்கு வேறொன்றை உணர்த்துகின்றது – அவர் இந்தக் காலகட்டத்தின் தேவை. யாருடைய தேவை? கார்ப்பரேட் முதலாளிகள் தேசங்கடந்த தொழிற்கழகங்கள் மற்றும் நிதி மூலதன சூதாடிகளின் இன்றைய தேவையாக டொனால்ட் ட்ரம்ப் இருக்கிறார்.
கடந்த பத்தாண்டுகளாக நீடிக்கும் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடி இன்னும் தீர்ந்தபாடில்லை. வால்வீதி சூதாடிகளின் சூதாட்ட வெறியில் புதைகுழிக்குள் வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் அந்தப் புதைகுழியை மேலும் ஆழமாக்கியே உள்ளன. அமெரிக்க உற்பத்தித் தொழில்கள் அனைத்தையும் குறைந்த உழைப்பில் நிறைந்த லாபத்தையும் அதிக சுரண்டல் வாய்ப்புகளையும் வழங்கும் கிழக்கத்திய நாடுகளுக்கு பெயர்த்தெடுத்துச் சென்று விட்டனர், முதலாளிகள்.
இந்தச் சூழலில் அமெரிக்க நடுத்தர வர்க்கம் மேலும் மேலும் கடனில் வீழ்ந்துள்ளது. கல்லூரிப் படிப்பை முடிக்கும் போதே மிகப் donald-trump-7பெரிய கடன் சுமையோடு வெளியேறும் மாணவர்களை வேலையின்மை வரவேற்கிறது. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவில் வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள அதே நேரம் வாங்க ஆளில்லாமல் பூட்டிக் கிடக்கும் வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. வறுமையும் பசி பட்டினியும் அதிகரித்து வரும் அதே நிலையில் அமெரிக்க சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லாத முதலாளிகளோ தங்கள் செல்வங்களை பன்மடங்கு உயர்த்திக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஏழை அமரிக்கர்களிடையே வன்முறைப் போக்கு ஒரு புறம் அதிகரித்து வருகிறதென்றால் இன்னொரு புறம் போதைப் பழக்கம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. மார்ஃபின் என்ற வழக்கமான போதைப் பொருளை விட 100 மடங்கு வீரியம் கொண்ட – ஹெரோய்னை விட 40 மடங்கு வீரியம் கொண்ட – ஃபெண்டனில் (Fentenyl) என்கிற சிந்தடிக் ஓபியத்தின் பயன்பாடு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்தப் போதை மருந்தால் இறப்பவர்களின் சதவீதமும் திடீரென உயர்ந்துள்ளது. இது தவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படைந்தவர்களின் எண்ணிக்கையும் அதன் காரணமாக தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க பொருளாதாராத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டவர்கள் பெருமுதலாளிகளும் நிதி மூலதன சூதாடிகளும், பங்குச் சந்தை ஓநாய்களும் தான் என்பதை வால் வீதி முற்றுகை இயக்கம் மிகச் சரியாக முன்வைத்தாலும் ஒரு அரசியல் இயக்கமாக அது உருப்பெறவில்லை. என்.ஜி.ஓக்கள் மற்றும் அடையாள அரசியல் குழுக்களின் சங்கமமாக மாறி கடைசியில் பிசுபிசுத்துப் போனது. மக்களிடையே அரசியல் ரீதியில் நம்பிக்கையான மாற்று ஏதும் தோன்றாத நிலையில் “மீட்பரின்” வருகைக்கான களம் தயாராக இருக்கிறது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா எதிர்கொண்ட அதே நிலை தான். பொதுவாக “மீட்பர்கள்” எனப்படுபவர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெறும் சவடால் பேச்சுக்கள் போதும்.
”எங்காளு ஆட்சிக்கு வந்தால் சீனாவின் தொடையில் நறுக்கென்று கிள்ளுவார், பாகிஸ்தானின் பொடனியில் பொட்டென்று போடுவார், ஒரு லிட்டர் பெட்ரோல் பத்து பைசாவுக்கு தருவோம், வெளிநாடுகளில் உள்ள பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு பத்து லட்சமாக பிரித்துக் கொடுப்போம், மொத்த நாட்டையும் சிங்கப்பூராக மாற்றுவோம்….”
”மீட்பர்களின்” உளறல்களுக்கெல்லாம் எந்த அறிவியல், தத்துவ, சித்தாந்த அடிப்படைகளும் தேவையில்லை. நோக்கம் ஒன்றே ஒன்று தான் – மக்களின் இன்பக் கிளுகிளுப்பைத் தூண்டுவது போல் பேச வேண்டும். தேர்ந்த எத்தனைப் போல் பேசி மக்களின் ஓட்டுக்களை கவர்வது முதல் கட்டம் – அதற்கு அடுத்தது, இந்த வெற்றியின் பலன்களை அறுவடை செய்யப் போகும் அதானிகளின், அம்பானிகளின் கட்டம்.
தற்ப்போது டொனால்ட் ட்ரம்ப் முதல் கட்டத்தில் இருக்கிறார். அனேகமாக குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ட்ரம்ப் தெரிவு செய்யப் படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அமெரிக்கர்களின் வெள்ளை இன தேசிய வெறியை எவ்வளவு திறமையாக தூண்டுகிறார், மீண்டும் சிறந்த தேசமாக அமெரிக்கா உருவாவதற்கு யாரையெல்லாம் பயங்கரமான எதிரிகளாக அமெரிக்கர்களிடம் கட்டமைக்கப் போகிறார், அதற்கு அமெரிக்கர்கள் எந்தளவுக்குப் பலியாகப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து தேர்தலில் வெல்வும் கூடும்.
donald-trump-4அதன் பின் மீட்பர் கிடைத்த நிம்மதியில் அமெரிக்கர்கள் இன்பக் கனவில் மூழ்கியிருக்கும் நேரம் பார்த்து நிதிமூலதனச் சூதாடிகளும், ரியல் எஸ்டேட் முதலைகளும் களமிறங்குவார்கள். டொனால்ட் ட்ரம்ப் தன்னளவிலேயே ஒரு ரியல் எஸ்டேட் முதலை என்பதோடு பல்வேறு நிதிமூலதனச் சூதாடிகளின் நெருக்கமான கூட்டாளியுமாவார். அவரது தேர்தல் பிரச்சார செலவுகளை நிதிமூலதனக் கும்பலே பின்னின்று கவனித்துக் கொள்ளும் தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருகின்றன.
ஜார்ஜ் புஷ்சுக்கு சற்றும் குறையாத போர் வெறியனாக தன்னை காட்டிக் கொள்வதில் ட்ரம்ப் எந்தக் கூச்சமும் அடைவதில்லை. ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் இந்த நிலையிலேயே தனது எதிர்காலப் போர் இலக்குகளாக வட கொரியாவையும், ஈரானையும், சிரியாவையும் அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஒருவேளை தேர்தலில் வென்று அதிபரானால் போர்த்தளவாட கார்ப்பரேட்டுகளின் காட்டில் டாலர் மழை தான் என்பதில் சந்தேகமில்லை.
உலகின் பொருளாதார இயக்கம் மொத்தமும் அமெரிக்க பொருளாதாரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நிலையில் அதன் விளைவுகள் ஒவ்வொன்றும் நம்மையும் பாதிக்கப் போவது உறுதி.
டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் முழக்கம் ”மீண்டும் அமெரிக்காவை சிறந்த தேசமாக்குவோம்” என்பதாகும். ஒரு ஆச்சரியமான ஒற்றுமை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தினசரி பஜனையின் கடைசிவரி – பரம் வைபன்யே துமே தத் ஸ்வராஷ்ட்ரம் (உலகில் சிறந்த தேசமாக்குவேன்) – பாசிஸ்டுகளின் மிக முக்கியமான ஆயுதம் தேசிய வெறியும், தேசம் குறித்த பழைய பெருமிதங்களுமே.
பாரசீக வளைகுடாவில் தோன்றி உலகை அச்சுறுத்துவதாக குறிப்பிடப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே வெட்கப்படுமளவு இந்த டொனால்ட் பேசுகிறாரே என்று சில அப்பாவி அமெரிக்கர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். எதற்கய்யா வருத்தம்? ஐ.எஸ்-க்கு குர் ஆனிலிருந்து, கில்லட்டின் வரை பயிற்சி கொடுத்தவர்களே அமெரிக்க ஆண்டவன்தான் எனும் போது இது பெருமைக்குரியதல்லவா!
– தமிழரசன்
மேலும் படிக்க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக