வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பெங்களூரு பேருந்துக்குள் பெண் 45 நிமிடங்கள் சிறை...கதறியபோதும் யாரும் உதவிக்கு வரவில்லை


இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் பெங்களூர் சமீப காலமாக கும்பல் கலாச்சாரம் மற்றும் சகிப்பின்மையின் புகலிடமாக மாறி வருகிறதோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதற்கு சான்றாக அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லூரி மாணவி ஒருவரை காவல் நிலையத்திற்கு எதிரிலேயே பேருந்துக்குள் வைத்து பூட்டியிருக்கிறார்கள். சுமார் 45 நிமிடங்கள் கதறியபோதும், யாரும் உதவி செய்யவில்லை என்று அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த மாணவியின் பேஸ்புக் பதிவு வருமாறு: நான் கல்லூரியில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும் போது, என் அருகில் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த என் நண்பர் நின்றதால் பேருந்து நடத்துனருக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. பின் இது கைகலப்பாக மாறியது. நடத்துனருடன் பொதுமக்களும் சேர்ந்துக்கொண்டதால் என் நண்பர் உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.


உடனே அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றனர். பேருந்தை காவல்நிலையத்திற்கு முன் நிறுத்திவிட்டு உன் நண்பன் காவல்நிலைத்திற்கு வரும்வரை உன்னை விட முடியாது என்று கூறி என்னை பேருந்துகுள் வைத்து பூட்டிவிட்டனர். இதனால் பயந்து போன நான் வெளியே விடும்படி கத்தினேன். ஆனால் பேருந்தின் அருகே இருந்த காவல்துறையினரும், பொதுமக்களும் எனக்கு உதவி செய்யவில்லை. மாறாக அவர்கள் என்னை பார்த்து கேலி செய்தனர்.

நான் ஜன்னலை திறக்க முயற்சித்தேன், முடியவில்லை, அவசர கால கதவு வழியாக வெளியேற முயன்றேன், ஆனால் அந்த கதவும் திறக்கவில்லை. கடைசியில் என் நண்பர் வந்த பிறகே என்னை வெளியே விட்டார்கள். முக்கிய சாலையில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி காவல்நிலையத்தில் புகார் கொடுக்க முயன்றபோது அவர்கள் தன்னை பயமுறுத்தியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பெண்ணின் பேஸ்புக் பதிவும் நீக்கப்பட்டுள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக