வியாழன், 28 ஜனவரி, 2016

யார் இந்த பெரு.வெங்கடேசன்?- எஸ்விஎஸ் கல்லூரியில் நுழைந்தது எப்படி?

எஸ்விஎஸ் சித்தா மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் தற்கொலை வழக்கு தொடர்பாக,  நீதிமன்றத்தில் சரணடைந்த பெரு.வெங்கடேசன், கல்லூரியில் ‘தாதா’ போல் செயல்பட்டு வந்ததாக காவல்துறையினர் விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்.வி.எஸ். சித்த மருத்துவக் கல்லூரியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து,  கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.


இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி, இவர்களது மகன் சுவாக்கர்வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி ஆகியோர் மீது நம்பிக்கை மோசடி, தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ், சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர்வர்மா, தாளாளர் வாசுகி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கல்லூரி விடுதி பணியாளர்களான சுமதி, லட்சுமி, கோட்டீஸ்வரி ஆகியோரையும் காவல்துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சி மாடூரை சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (40) என்பவரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவர் நேற்று சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

"கள்ளக்குறிச்சி மாடூரை சேர்ந்த வெங்கடேசன், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 முடித்துள்ளார். பின்னர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் எம்.எஸ்சி முடித்துள்ளார். அதன்பிறகு 'ஆதிதிராவிடன் புரட்சிக்கழகம்' என்ற அமைப்பை தொடங்கி, அதன் நிறுவன தலைவராக செயல்பட்டார். இந்த அமைப்பை தொடங்கிய சில மாதங்களில் அவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒரு சில ஆண்டுகளிலேயே கணவன்– மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெங்கடேசனுக்கும், அவரது மனைவிக்கும் விவாகரத்தானது. தொடர்ந்து இந்த அமைப்பின் மூலம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவ– மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளின் போது வெங்கடேசன் தனது அமைப்பை பயன்படுத்தி மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதுபோல் செயல்பட்டு, அவர்களுக்கே தெரியாமல், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டி பணம் பறித்து வந்துள்ளார். அதேபோல் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கல்லூரி நிர்வாகத்தினருக்கும், கல்லூரியை ஒட்டியுள்ள நில உரிமையாளர்களுக்கும் இடப்பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த நேரத்தில்தான் இந்த கல்லூரி பிரச்னையில் முதன் முதலில் வெங்கடேசன் குறுக்கிட்டுள்ளார். இந்த பிரச்னையில் கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேரம் பேசி சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை தனது அடியாட்கள் மூலம் மிரட்டி அந்த இடப்பிரச்னையை முடித்து வைத்துள்ளார்.
அப்போது கல்லூரி நிர்வாகத்தை சுப்பிரமணியன்தான் கவனித்து வந்துள்ளார். அவர் மாணவ–மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளதால் சுப்பிரமணியனுக்கும், அவரது மனைவி வாசுகிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அவருக்கு உடல்நிலையிலும் சற்று பாதிப்பு ஏற்பட்டதால் கல்லூரி நிர்வாகத்தை கவனிக்கும் பிரச்னையில் இருந்து சுப்பிரமணியன் விலகிக்கொண்டார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வாசுகி, கல்லூரியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் தன்வசமாக்கிக் கொண்டு அதிகார தோரணையுடன் கல்லூரியை நிர்வகித்து வந்துள்ளார். அப்போது மாணவ–மாணவிகளிடம் அரசு நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் கட்டச்சொல்வது, கர்ம யோகா என்ற பெயரில் மாணவ–மாணவிகளை துப்புரவு பணி, வகுப்பறை, கழிவறையை சுத்தம் செய்ய வற்புறுத்துதல், சமைக்க சொல்வது உள்ளிட்ட பணிகளை செய்ய சொல்லி மிரட்டி வந்துள்ளார். இதை எதிர்த்து போராடும் மாணவ–மாணவிகளை மிரட்டுவது, துன்புறுத்துவது உள்ளிட்ட செயல்களை செய்வதில் வாசுகிக்கு ஆதரவாக வெங்கடேசன் செயல்பட்டு வந்துள்ளார்.

மாணவ–மாணவிகளுக்கு எதிராகவும், கல்லூரி நிர்வாகத்திற்கு பெரும் ஆதரவாகவும் செயல்பட்டு வந்த பெரு.வெங்கடேசன் வாசுகியின் நெருங்கிய நண்பரானார். கல்லூரி விஷயமாக வெளியில் வாசுகி செல்லும்போது அவருக்கு பாதுகாப்பாகவும், கார் டிரைவர் போலவும் பெரு.வெங்கடேசன் சென்று வந்துள்ளார். எப்போதும் கல்லூரியிலேயே இருந்து கொண்டு வாசுகியைபோல் நிர்வாக பொறுப்பையும் மேற்பார்வையிட்டு வந்துள்ளார். மொத்தத்தில் கல்லூரிக்கு மேலும் ஒரு நிர்வாகியாகவும், பாதுகாவலராகவும் செயல்பட்டுள்ளார். மாணவர்கள் எழுப்பும் பிரச்னைகளையெல்லாம் வெளி உலகிற்கு தெரியாமல் பார்த்துக்கொள்ளும் வகையில் மாணவ–மாணவிகளை தனது அடியாட்கள் மூலம் மிரட்டி, துன்புறுத்தி ஒரு ‘தாதா’ போல் செயல்பட்டு வந்துள்ளார்" என்று காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.  vikatan,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக