செவ்வாய், 12 ஜனவரி, 2016

திருச்செந்தூர் :செத்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள், டால்பின்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை உயிரிழந்து விட்டன. இதற்கு காரணம் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் நச்சுக்கள் கடலில் கலந்து திமிங்கலங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குலசேகரன்பட்டினம், கல்லாமொழி பதுவைநகர் கடற்கரைக்கு நேற்று மாலையில் சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திமிங்கலங்களை கடலில் விட முயற்சி செய்தனர். ஆனாலும் திமிங்கலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்கியவாறு இருந்தன. இதில் 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன.
நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி வருவதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அவர்கள் உடனடியாக குலசேகரன்பட்டினம் காவல்துறையினருக்கும், கடலோர காவல் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும்,காவல்துறையினரும், கடலோர காவல் படையினரும் விரைந்து வந்தனர். கரை ஒதுங்கிய திமிங்கலங்களை ஆழ்கடலில் விட நடவடிக்கை மேற்கொண்டனர் எனினும் முயற்சி பலனளிக்கவில்லை. 
இதன் அருகில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது. நச்சுக்கழிவுகள் கடலில் கலந்த காரணத்தினாலே திமிங்கலங்கள் பாதிக்கப்பட்டு கரை ஒதுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
திமிங்கலங்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் கழிவுகள்தான் காரணமென்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல தமிழக ஆறுகளில் வழியாக நாள் ஒன்றுக்கு 5 லிட்சம் லிட்டர் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக்கழிவுகள் கடலில் கலந்தவண்ணம் உள்ளன. 
இதுதான் தற்போது திமிங்கலங்களின் உயிர்களுக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடல் நீர் மாசினால் கடல் வாழ் உயிரினங்கள் சுவாசிக்கத் திணறுகின்றன. அத்துடன் கடல் நீரின் வெப்பநிலையும் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமென்று சொல்லப்படுகிறது. அத்துடன் நச்சுக்கழிவு காரணமாக பாசிகள் பவளப்பாறைகளுக்கு அழிந்து வருகின்றனவாம்.
://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக