சனி, 2 ஜனவரி, 2016

நிர்வாண சாதுக்கள், உடை அணியவேண்டும், என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா?...வழங்காதா?....

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, தமிழகம் முழுவதும்,இந்து சமய
அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 36 ஆயிரத்து, 800 கோவில்களில், பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, நேற்று முதல் அமலுக்கு வந்தது. பாரம்பரிய உடை அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மீனாட்சியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன் கோவில், வடபழனி முருகன் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்டி மற்றும் சேலை அணிந்து வந்தனர்.மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், காளிகாம்பாள் கோவிலில், 'லெக்கிங்ஸ்' ஆடை அணிந்து வந்த பெண்கள் சிக்கினர்.மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், வெளிநாட்டவர் அரைக்கால் பேன்ட், டீ-சர்ட் அணிந்து வந்திருந்தனர். இவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வேட்டி, சேலை வழங்கப்பட்டது.நவ நாகரிக உடை அணிந்து வந்த சிலரிடம், 'இனி, கோவிலுக்கு வரும்போது, பாரம்பரிய உடை அணிந்து வாருங்கள்' என, கோவில் நிர்வாகிகள் அறிவுரை கூறி, அனுமதித்தனர்.


ஆண்கள் எதிர்ப்பு:
'ஜீன்ஸ் பேன்ட்' அணிந்து வரக்கூடாது என்பதற்கு, இளைஞர்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. 'பெரும்பாலானோர் ஜீன்ஸ் பேன்ட் அணிகின்றனர். எனவே, அதற்கு அனுமதி வழங்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாவலர்களுக்கு விதிவிலக்கு:
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கடந்த
மாதம் பிறப்பித்துள்ள உத்தரவு:கோவில் திருவிழாவில், ஒரு சமூகம் மற்றும் தலைவர்களை வாழ்த்தி பாடக்கூடாது. கோவிலுக்கு வரும் ஆண் பக்தர்கள், வேட்டி, பைஜாமா, மேல் துண்டு; பெண்கள் சேலை அல்லது தாவணி, சுரிதார், சால்வை, குழந்தைகள் முழு உடலை மறைக்கும் ஆடைகள் அணிய வேண்டும். பக்தர்கள் அரைக்கால் டிரவுசர், குட்டை பாவாடை, அரைப் பாவாடை, கை இல்லாத சட்டை,குட்டையான ஜீன்ஸ் அணிந்திருந்தால் அனுமதிக்கக் கூடாது. இந்த ஆடை கட்டுப்பாட்டை, 2016 ஜன., 1 முதல், அனைத்து இந்து கோவில்களிலும் அமல்படுத்த, அறநிலையத் துறை செயலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்பாட்டை மீறுவோரை, கோவிலுக்குள் போலீஸ் அனுமதிக்கக் கூடாது. சீருடையில் உள்ள போலீஸ், தீயணைப்புத் துறை, பாதுகாவலர்களுக்கு தடையில்லை.இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டினர் வரவேற்பு:
ஸ்ரீரங்கம் கோவிலில், ரங்கா ரங்கா கோபுரம் முன், ஆடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இது குறித்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புரோமைன், மார்கன், புரூசியர், மெர்சியா ஆகியோர் கூறியதாவது:இந்திய நாட்டின் பண்பாடு சிறப்பானது. வரையறுக்கப்பட்ட வாழ்க்கை முறை, உலகிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பண்பாடு, பழக்க வழக்கங்கள் மதிப்பு மிக்கவை. கோவில் உள்ளே தரிசனத்துக்கு செல்ல, அனைவருக்கும்

ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளதை, நாங்கள் வரவேற்கிறோம். வெளிநாட்டினர் கோவிலுக்கு வந்து செல்ல சேலை வழங்கவும், அதை கட்டி விட பெண்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரிஷிகேஷில் எப்படி?
பாரம்பரிய உடை மட்டுமே அணிய வேண்டும் என்பது ஏற்புடையதல்ல. ஜீன்ஸ், டி- - சர்ட் அணிந்தாலும், பார்க்க கண்ணியமாக தெரிந்தால் போதும். ஹரித்வார், ரிஷிகேஷ் போன்ற கோவில்களில், ஆடையின்றி கூட வழிபடுகின்றனர்; கட்டுப்பாடு விதிக்க முடியுமா?
ஸ்ரீ.பவித்ரா, 24,
பள்ளிக்கரணை, சென்னை


கலாசாரம் தெரியணும்!
கோவிலில் வக்கிர எண்ணங்களை துாண்டும் விதமாக ஆடை அணிவது தவறு. கோவில்கள் நம் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிப்பவை. அங்கு, அதற்கு தகுந்தவாறு தான் ஆடை அணிய வேண்டும்.
ம.பாண்டிமதி, 53, நாராயணபுரம், சென்னை
வீட்டிலிருந்து வர்றாங்களா?
கோவிலில் கடவுளை வழிபட வருபவர்கள் பல இடங்களில் இருந்து, மன நிம்மதிக்காக வரலாம். அனைவரும் வீட்டில் இருந்து தான் வருவர் என்று எதிர்பார்க்க முடியாது. அவர்களிடம், ஆடை கட்டுப்பாடு விதிப்பது சரியில்லை.
ரா.சுகன்யா, 27,
மடிப்பாக்கம், சென்னை

'வி' வடிவம் தெரிய கூடாது!
கோவில்களுக்கு என்று சில சம்பிரதாயங்கள், பாரம்பரியங்கள் உள்ளன. ஆண்கள், டிரவுசர், பேன்ட் அணியும் போது, இரண்டு கால்களுக்கு இடைப்பட்ட, 'வி' வடிவம் வெளியே தெரியவரும். கடவுளின் முன், இந்நிலையில் நின்று தரிசனம் மேற்கொள்ளக் கூடாது. எனவே, திருவனந்தபுரம் கோவிலுக்குள், பெண்கள், சுரிதாருக்கும் மேலே, வேட்டி கட்டி உள்ளே செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். விஜயேந்திரன் குடும்பத்தினர்சென்னை

- நமது நிருபர் குழு -  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக